No menu items!

ரஹானேக்கு வாழ்வு தந்த தோனி!

ரஹானேக்கு வாழ்வு தந்த தோனி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு அணியும் தலா 7 ஆட்டங்களில் ஆடிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றன. அணிகள் நிலவரம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் சாதித்துக் காட்டிய ஹீரோ யார் என்று கேட்டால், கிரிக்கெட் தெரிந்த எல்லோரும் நிச்சயம் ரஹானேவைத்தான் கைகாட்டுவார்கள்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த முதல் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் அஜிங்க்ய ரஹானே இல்லை. ஆனாலும் சந்தேகமே இல்லாமல் இந்த ஐபிஎல்லின் மூலம் மீண்டும் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் ரஹானே. அப்படி அவரை மாற்றியது சிஎஸ்கேவும் தல தோனியும்தான்.

ஓராண்டுக்கு முன்புவரை இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்த ரஹானே, பேட்டிங்கில் ஃபார்ம் இழந்ததால் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். கூடவே ஐபிஎல்லில் அவர் ஆடிய கேகேஆர் அணியும் கழற்றிவிட்டது. பிசிசிஐ இவரது ஓப்பந்தத்தையே ரத்து செய்தது. இப்படி கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருந்த நேரத்தில்தான் ரஹானேவை சிஎஸ்கே வாங்கியது. அதிலும் மற்ற எந்த அணிகளும் வாங்காத நிலையில் 50 லட்ச ரூபாய் என்ற அடிமாட்டு விலையில் அவரை வாங்கிப் போட்டது சிஎஸ்கே.
ரஹானேவை சிஎஸ்கே வாங்கியபோது அதை மஞ்சள் படையின் ரசிகர்களே ரசிக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் ஆடும் ரஹானேவைப் போய் வாங்கியிருக்கிறார்களே என்று முணுமுணுத்தனர். ஆனால் தல தோனி எதையும் பார்க்காமல் அவரை சிபாரிசு செய்திருக்க மாட்டார் என்று நினைத்து மனதை தேற்றிக்கொண்டார்கள்.

ரஹானேவின் கேப்டன்ஷிப் அனுபவம் அவரை சிஎஸ்கே வாங்கியதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. சுமார் ஓராண்டாக கிரிக்கெட் ஆடாததால் தன்னால் முன்போல எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் ஆட முடியுமா என்று தோனி சந்தேகப்பட்டார். அதனால் தான் ஆடாதபோது யாரை கேப்டனாக போடுவது என்று யோசித்தார். பென் ஸ்டோக்ஸை வாங்கினாலும், அவரும் அடிக்கடி காயம் அடைபவராக இருந்தார். இந்த சூழலில்தான் இந்திய அணிக்கும், அதற்கு முன் சில காலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கேப்டனாக இருந்த அஜிங்க்ய ராஹானேவை சிஎஸ்கே வாங்கியது.

ஏலத்தொகை கம்மியாக இருந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள காத்திருந்தார் அஜிங்க்ய ரஹானே. முதல் போட்டியில் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்காத தோனி அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்க, சீறிப் பாய்ந்தார் ரஹானே. இந்த ஐபிஎல்லுக்கு முன்புவரை 153 இன்னிங்ஸ்களில் 4,283 ரன்களைக் குவித்திருந்தார் ரஹானே. ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 123.03-ஆகத்தான் இருந்தது. ஆனால் இந்த ஐபிலில் வெறும் 5 இன்னிங்ஸ்களில் 209 ரன்களைக் குவித்திருக்கிறார் ரஹானே. இந்த முறை அவரது ஸ்டிரைக் ரேட் 199.04. ஐபிஎல் தொடர்களின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ள 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரஹானே. இதில் ஆந்திரே ரஸ்ஸல் மட்டும்தான் அவருக்கு மேலே இருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸைப் போல் 360 டிகிரி கோணத்திலும் பந்துகளை சிதறடிக்கிறார்.

ரஹானேவின் இந்த மாற்றத்துக்கு முழு காரணம் தல தோனி. ஆரம்பம் முதல் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் தோனி. கடந்த ஆண்டே அவரை வாங்க அணி நிர்வாகத்துக்கு ஆலோசனை சொல்லியிருந்தார். ஆனால் கொல்கத்தா அவரை வாங்கியது. ஆனால் சரியாக பயன்படுத்தாததால் இந்த ஆண்டு அவரை ரிலீஸ் செய்ய சிஎஸ்கே வாங்கிப் போட்டிருக்கிறது.

ரஹானேவின் அதிரடி மாற்றத்துக்கு முன், அதாவது ஐபிஎல் தொடங்கும்போது அவரது நிலையைப் பற்றி கருத்து தெரிவித்த தோனி, “தான் என்ன செய்ய வேண்டும் என்று ரஹானே நினைக்கிறாரோ அதைச் செய்யலாம். என்னால் முடிந்ததெல்லாம் உரிய நேரத்தில் அவரைக் களம் இறக்குவது மட்டும்தான்” என்று சொல்லி இருந்தார். ரஹானேவுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இந்த சுதந்திரம் ரஹானேவுக்கு புதிய சிறகுகளைக் கொடுக்க றெக்கை கட்டிப் பறந்தார். புதிய உச்சத்தை தொட்டார்.

ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்களின் காயத்தால் உலகக் கோப்பைக்கான டெஸ்ட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று தேர்வுக்குழு திணறி நிற்க, ரஹானேவை சீர்படுத்தி மீண்டும் தேர்வுக்குழுவுக்கு அனுப்பியுள்ளார் தோனி.

இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி கொடுத்த லேட்டஸ்ட் பரிசு ரஹானே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...