’அன்பான அணியினரே, இது மிக முக்கியமான வாரம், வாழ்க்கையிலோ அல்லது தொழிலிலோ மிக அழுத்தமான முத்திரையை பதிக்க உங்களுக்கு மிக அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது…’ என்று தொடங்குகிறது லிண்டா யக்கரினோவின் கடிதம். ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்கரினோ. ட்விட்டரின் பாரம்பரிய நீலப் பறவை சின்னத்தை தூக்கிவிட்டு எக்ஸ் குறியீட்டை சின்னமாக மாற்றியது குறித்து ஊழியர்களுக்கு இந்தக் கடிதம் தெரிவிக்கிறது. ‘இந்த எக்ஸ் சின்னம் மூலம் மீண்டும் உலகை கவரப் போகிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ட்விட்டரின் புதிய குறியீடான எக்ஸ் உலகை கவர்ந்திருக்கிறதா என்றால்…இதுவரை வந்த கருத்துக்களைப் பார்க்கும்போது இல்லை என்றே தோன்றுகிறது.
ஆபாச வெப்சைட்டுகளுக்குதான் எக்ஸ் என்று சொல்லுவார்கள் அதை போய் ட்விட்டருக்கு வைத்திருக்கிறார்களே என்று சொல்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
நீலப் பறவை எங்களுடன் நட்பாய் இருந்தது. இந்த எக்ஸ் எங்களுடன் நட்பாய் இருக்குமா என்பது தெரியவில்லை என்கிறது மற்றொரு கருத்து.
ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தவில்லை எலன் மஸ்க். தான் நினைத்ததை செய்துக் கொண்டே செல்கிறார். எக்ஸ் சின்னம் மாற்றப்பட்டதும் நேற்று இரவு ட்விட்டர் தலைமை அலுவலக கட்டிடம் எக்ஸ் சின்னத்துடன் ஒளிர்ந்தது.
எலன் மஸ்க்குக்கு இன்னொரு சிக்கலும் காத்திருக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி உலகமெங்கும் பல நிறுவனங்கள் எக்ஸ் குறியீடை தங்கள் சின்னங்களில் வைத்திருக்கின்றன. அதனால் ட்ரேட் மார்க் வழக்குகளை ட்விட்டர் நிறுவனம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனம் வருங்காலத்தில் பல மாற்றங்களை செய்யப் போகிறது, அதில் ஒன்றுதான் இந்த லோகோ மாற்றம். ட்விட்டர் எல்லாவற்றையும் வழங்கும் செயலியாக மாறப் போகிறது என்று எலன் மஸ்க் குறிப்பிடுகிறார்.
பெரிய நிறுவனங்கள் தங்கள் சின்னங்களை மாற்றுவது புதிதல்ல. ஆனால் இருக்கும் சின்னங்களையே வேறு வடிவத்தில் தருவார்கள். மிகச் சில நிறுவங்களே சின்னத்தை மொத்தமாக மாற்றியிருக்கின்றன.
கோகோ கோலா முதல் பெப்சி வரை தங்கள் சின்னங்களில் மாறுதல்களை செய்துவந்ததை கடந்த காலங்களில் பார்த்திருப்போம். ஆனால் இந்த மாறுதல்கள் அடிப்படையை மாற்றது. அடிப்படை லோகோவை சுற்றியே மாற்றங்கள் இருக்கும். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் கூகுள் எழுத்துக்களில் அவ்வப்போது மாற்றம் வரும். ஆனால் அந்த நிறம் மாறாமல் இருக்கும்.
பல தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் லோகோக்களை மாற்றியிருக்கிறது. நம்ம ஊர் ஸ்டார் விஜய் டிவி ஒரு உதாரணம். ஆனால் சன் டிவி தனது சின்னத்தை மாற்றியதே இல்லை. பத்திரிகைகளும் தங்கள் பெயரை வெவ்வெறு வடிவங்களில் மாற்றியிருக்கின்றன.
உலகின் மிக பிரபலமான நைக்கி ஷூக்கள் தங்கள் லோகோ வடிவத்தை மாற்றாமல் அதனை சுற்றியுள்ள விஷயங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். ஷூ நிறுவனங்கள் மட்டுமல்ல கார் நிறுவனங்களும் தங்கள் சின்னத்தில் மாறுதல்களை செய்துக் கொண்டே இருக்கும்.
நிறுவனங்கள் இது போன்று சின்னங்களை மாற்றுவதற்கு முக்கிய காரணம். அதே அரதப் பழசாக தங்கள் பொருள் மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகதான்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை.
அதை மக்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். மஸ்க்கும் புரிந்து வைத்திருக்கிறார்.
மக்கள் பயன்பாட்டுக்கு தரமாகவும் சுகமாகவும் இருக்கும் வரை ட்விட்டர் நீலப் பறவையாக இருந்தால் என்ன கறுப்பு Xஆக இருந்தாலென்ன?.