No menu items!

போன் பேச பயப்படும் அமைச்சர்கள் – மிஸ் ரகசியா

போன் பேச பயப்படும் அமைச்சர்கள் – மிஸ் ரகசியா

“ஏசியை ஆஃப் பண்ணுங்க” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா. மழைத் தூறலில் லேசாய் நனைந்திருந்தாள்.

“போன வாரம் முழுக்க வெக்கை வாட்டி எடுத்தது. இப்போ மழை குளிருது”

“ஆமாம் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கு. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியை தன்னுடைய நடைபயணத்துக்கு அண்ணாமலை கூப்பிடலையா அது மாதிரி..” என்று அரசியலுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அதானே, அதிமுக சகவாசமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்த அண்ணாமலை இப்படி மாறிட்டாரே?”

“எல்லாம் மேலிட பிரஷர்தான். டெல்லியில நடந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துல எடப்பாடிக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்ததுதான் இதுக்கு காரணம். பிரதமரே முக்கியத்துவம் கொடுக்கும்போது நாம கொடுக்காட்டி நல்ல இருக்காதுன்னுதான் பாதயாத்திரை தொடக்க விழால கலந்துக்க எடப்பாடிக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கார். அது மட்டுமில்ல, நாடாளுமன்றத் தேர்தல் முடியற வரை அதிமுகவை அப்செட் பண்ணக்கூடாதுனும் அண்ணாமலைக்கு சொல்லி அனுப்பியதாகவும் செய்தி இருக்கு. அதிமுக ஆதரவு இல்லாம தேர்தல்ல ஜெயிக்க முடியாதுனு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க”

“இந்த அழைப்புக்கு எடப்பாடி தரப்புல என்ன சொல்றாங்க?”

” இதை அதிமுக தலைவர்கள் ரசிக்கல. ஏற்கனவே நம்மளை தப்பா பேசின ஆளுனு அண்ணாமலையை நினைக்கிறாங்க. அதுவும் ஜெயலலிதாவை ஊழலுக்காக ஜெயிலுக்கு போனவங்கனு சொன்னதுல அவங்க செம்ம கடுப்புல இருக்கிறாங்க. இப்பவும் அறிக்கைதான் வெளியிட்டிருக்கிறார். நேர்ல கட்சி ஆபீசுக்கு வந்து அழைக்காம சும்மா கூப்ட்டா எப்படி போறதுனு கேட்டிருக்காங்க. அது மட்டுமில்லாம தன்னோட பாத யாத்திரைல அதிமுககாரங்க கலந்துக்கிட்டாதான் கூட்டத்தை காட்ட முடியும்னு நம்மளை கூப்பிடுறார்னும் பாதயாத்திரைல கலந்துக்க வேண்டாம், எவ்வளவுக்கு எவ்வளவு பாஜககிட்டருந்து தள்ளி நிக்கிறதுதான் நமக்கு நல்லதுனும் சொல்லியிருக்காங்க”

“எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னாராம்?”

”அவர் போடுற கணக்கு வேற மாதிரி இருக்கு. மதுரை மாநாட்டுக்கு பிரதமரை அழைக்கலாமான்னு எடப்பாடி யோசிக்கறார். மதுரை மாநாட்டை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டமா மாத்தணும்கிறது எடப்பாடியோட விருப்பம். திமுக அமைச்சர்கள் மீது எடுக்கிற நடவடிக்கைகள் அவரை சந்தோஷப்படுத்தியிருக்கு. பாஜககிட்டருந்து தள்ளி நின்னா, அந்த நடவடிக்கைகள் அதிமுகவினர் பக்கம் திரும்பும்னு நெருக்கமானவங்க கிட்ட சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாம பிரதமர் மாநாட்டுக்கு வந்தா, அதிமுகவோட பலத்தை காட்டணும்னும் சொல்லியிருக்கிறார். அதனால அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரும் தங்களோட தொகுதில இருந்து 2,000 பேரையாவது மாநாட்டுக்கு கூப்டு வரணும்னு உத்தரவு போட்டிருக்கிறார். ‘மாவட்ட செயலாளர் சொன்னார்… அவருக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டேன்னெல்லாம் சால்ஜாப்பு சொல்லக்கூடாது. அந்த கணக்கு வேற. இந்த கணக்கு வேற’ன்னும் சட்டமன்ற உறுப்பினர்கள்கிட்ட எடப்பாடி ஸ்டிரிக்டா சொல்லி இருக்காரு.”

”திமுகவும் மாநாடு நடத்தப் போவதா நியூஸ் வருதே..அப்படியா?”

“ஆமாம் உதயநிதி ஸ்டாலினுக்காக இளைஞரணி மாநாட்டை நடத்தலாமானு முதல்வர் ஸ்டாலின் யோசிக்கிறார். கட்சியில இருக்கற இளைஞர்களுக்கு புத்துணர்வு ஊட்டணும் புதுசா இளைஞர்களை கட்சில சேர்க்கணும்னு ஸ்டாலின் நினைக்கறாரு. உதயநிதியோட பலத்தை காட்டவும் உதவும்கிறது அவரது திட்டம்.”

“உதயநிதி என்ன சொன்னாராம்?”

“அவருக்கு இதில உடன்பாடுதான். இளைஞரணி மாநாட்டுல நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட இளைஞரணி சேர்ந்தவங்களுக்கு நிறைய வாய்ப்பு தரணும்கிற கோரிக்கையும் வைக்கப்படும்னு இளைஞரணி ஆட்கள் பேசிக் கொள்கிறார்கள்”

“அமைச்சரவை கூட்டத்துல அமைச்சர்கள்கிட்ட ஸ்டாலின் கோவிச்சுட்டாராமே?”

“எப்பதான் கோவிச்சுக்கல. எல்லா கூட்டத்திலயும் கோவிச்சுக்கிட்டுதான் இருக்கிறார். ஆனா அமைச்சர்கள் கேட்க மாட்டேங்கிறாங்க. அமைச்சர்கள் தங்கள் துறையில் சரியா வேலை செய்யலைங்கிற வருத்தம் முதல்வருக்கு இருந்திருக்கு. அதனால இந்த கூட்டத்துல பேசின ஸ்டாலின், ‘அமைச்சர்கள் சரியா வேலை செய்யலைன்னா முதல்ல துறையை மாத்துவேன். அப்படியும் சரியா வேலை செய்யலைன்னா பதவியில இருந்து நீக்குவேன். இதில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது’ன்னு சொல்லி இருக்கார்”

“அமைச்சர்கள் பதில் என்ன?”

“நாங்க சரியாதான் இருக்கிறோம். சில துறைல செயலாளர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதில்ல. நாங்க சொன்னா காரியங்களை செய்யப்படாம தள்ளிப் போடுறாங்கனு சில அமைச்சர்கள் சொல்லியிருக்காங்க. ஆனா, அதை முதல்வர் ஏத்துக்கல. நீங்கதான் அவங்களை சரி செய்யணும், அதுக்குதான் மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டுருக்காங்க. முதல்வர் யதார்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரே என்று கூட்டம் முடிந்தபின் அமைச்சர்கள் புலம்பியிருக்கிறார்கள். அமைச்சர்களின் பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலினிடமும் சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறதுனு. இப்போ அமைச்சர்கள் ரொம்ப செல்ஃபோன் யூஸ் பண்றதில்ல. வொட்சப்ல கூட தகவல்கள் அனுப்புறதில்லை தெரியுமா?”

”ஏன் முதல்வர் உத்தரவா?”

“மத்திய உளவுத் துறை மேல இருக்கற பயம்தான் காரணம். செல்போனை மத்திய அரசு ஒட்டுக் கேக்கிறதோனு அமைச்சர்கள் சந்தேகப்படறாங்க. முக்கியமான விஷயங்களை யாராவது போன்ல சொன்னாலும், ‘போன்ல டீடெய்லா பேச வேணாம். நேர்ல பேசலாம்’னு சொல்றது வாடிக்கையாகிடுச்சு..”

“தமிழக பாஜகல கொஞ்ச நாளா கோஷ்டி சண்டைகள் ஏதும் இல்லாம போயிட்டிருக்கே… என்ன ரகசியம்?”

“என்னதான் எதிர்ப்புகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தல் முடியற வரைக்கும் தமிழக பாஜக தலைவரை மாத்த டெல்லி தலைமை தயாரா இல்லை. அண்ணாமலை எதிர்ப்பாளர்களுக்கு பாஜக தலைமை இதை சூசகமா சொல்லி இருக்கு. அதனாலதான் உள்ளூர் தலைவர்களும் அண்ணாமலை எதிர்ப்பை குறைச்சுட்டு வர்றாங்க. பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன்னு இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணாமலையோட கருத்துகளை ஆதரிச்சு பேசத் தொடங்கி இருக்காங்க. அண்ணாமலை மட்டுமில்லாம, உள்ளூர்ல இருக்கற அதிமுக தலைவர்களோடவும் அவங்க சகஜமா பழகறாங்க. தேர்தல் முடியற வரைக்கும் இந்த ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்.”

“ஓபிஎஸ் பத்தி ஏதும் நியூஸ் இல்லையா?”

“பாரதிய ஜனதா கட்சி கைவிட்ட நிலையில இப்போதைக்கு அவரோட ஒரே நம்பிக்கை தினகரனோட அமமுகதான். அதனால கொடநாடு வழக்கு விசாரணையை திமுக அரசு துரிதப்படுத்த சொல்லி ஆகஸ்ட் மாசம் நடத்தப்போற போராட்டத்தில கலந்துக்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்திருக்கார். தினகரனும் ஓகே சொல்ல, அவர் சந்தோஷமா ஒத்துக்கிட்டிருக்கார். ஓபிஎஸ்ஸோட பேசும்போது ‘எடப்பாடிக்கு மோடி மட்டும்தான் அங்கீகாரம் கொடுத்திருக்கார். ஆனா அமித்ஷாவும், நட்டாவும், ஒன்றிணைந்த அதிமுகவைத்தான் விரும்புறாங்க. அது பத்தின ஒரு நல்ல செய்தியை விரைவில் உங்களுக்கு தருவேன்னு’ சொல்லி அவரைக் குஷிப்படுத்தி இருக்காராம் தினகரன்.”

”பாவம் எப்படியிருந்த பன்னீர் இப்படி ஆயிட்டார்”

“ஆமாம், பாஜகவை நம்பினதற்கு தொண்டர்களை நம்பியிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...