No menu items!

அயோத்தி சர்ச்சை: மாதவராஜ் வெளியிட்ட ஆதாரம் – கதையை திருடினாரா எஸ்.ரா?

அயோத்தி சர்ச்சை: மாதவராஜ் வெளியிட்ட ஆதாரம் – கதையை திருடினாரா எஸ்.ரா?

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கதை திருட்டு சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்த முறை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

சசிகுமார், புகழ், போஸ் வெங்கட் நடிப்பில் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘அயோத்தி’. பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் கதை எஸ்.ராமகிருஷ்ணன் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கதை தங்களுடையது என எழுத்தாளர்கள் நரன், மாதவராஜ் இருவர் எஸ்.ரா மீது புகார் தெரிவித்துள்ளார்கள். இன்னொரு பக்கம் திரைக்கதை தன்னுடையது என படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி மீது திரைக்கதை ஆசிரியர் சங்கர்தாஸ்  ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அயோத்தி கதை என்ன? நரன், மாதவராஜ், சங்கரதாஸ் குற்றச்சாட்டுகளுக்கு எஸ். ராமகிருஷ்ணன், இயக்குநர் பதில் என்ன?

ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அயோத்தி கதை என்ன?

அயோத்தியைச் சேர்ந்த பல்ராம், அவரது மனைவி ஜானகி, மகள் ஷிவானி, மகன் சோனு ஆகியோர் புனித யாத்திரைக்காக ராமேஸ்வரம் வருகின்றனர். மதுரையிலிருந்து டாக்ஸியில் ராமேஸ்வரம் செல்கிறார்கள். பல்ராமின் அவசரத்தால் மோசமான விபத்து ஏற்படுகிறது. படுகாயமடையும் ஜானகி உயிரிழந்துவிட, மொழி தெரியாமல் தவிக்கும் அந்தக் குடும்பம் ஊர் திரும்ப, டாக்ஸி ஓட்டுநரின் நண்பர்களான அப்துல் மாலிக், பாண்டி (சசிகுமார், புகழ்) இருவரும் உதவுகிறார்கள்.

இனி சர்ச்சைக்கு வருவோம்.

முதலில் ‘அயோத்தி’ படத்தின் டீசர் வெளியானதுமே, எழுத்தாளர் நரன் இந்த படத்தின் கதை தன்னுடையது என குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னுடைய ‘சரீரம்’ என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம்பெற்ற ‘வாரணாசி’ என்ற சிறுகதையின் கதையை திருடி ‘அயோத்தி’ படத்தை எடுத்துள்ளனர் என்பது அவர் குற்றச்சாட்டு. ‘வாரணாசி’ சிறுகதை, ஒரு பெண் தன்னுடைய இறந்த கணவனின் உடலை தகனம் செய்ய வாரணாசிக்கு எடுத்து செல்லும் பயணத்தை சொல்கிறது.

ஆனால், தற்போது படம் வெளியாகியுள்ள நிலையில், எழுத்தாளர் ஜா. மாதவராஜ் 2011இல் தான் எழுதிய ‘அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்’ எனும் பதிவுதான் ‘அயோத்தி’ என்ற படமாக வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஃபேஸ்புக்கில் மாதவராஜ் எழுதியுள்ள பதிவில், ‘‘அயோத்தி’ திரைப்படம் யாருடைய ‘கதை’யும் அல்ல. ஒரு உண்மை நிகழ்வு. ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்றபோது எங்கள் சங்கத் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும் சுரேஷ் பாபுவும் செய்த மனிதாபிமான உதவியை முதன்முதலில் செப்டம்பர் 2011இல் ஒரு கதை போல எழுதி பதிவு செய்திருந்தேன். 2021இல் வெளி வந்த எனது ‘இரண்டாம் இதயம்’ புத்தகத்திலும் இந்த பதிவு இடம் பெற்றிருந்தது.

2011இல் நான் எழுதியது ‘அயோத்தி’ படத்தில் அப்படியே இருக்கிறது. ராமேஸ்வரம் வந்த வடநாட்டு குடும்பம் கார் விபத்தில் சிக்குவது, அந்த குழந்தைகளின் அம்மா இறந்து போவது, நிலமும் மொழியும் வேறான மதுரையிலிருந்து அந்த குடும்பத்தை கடும் சிரமங்களுக்கு இடையே விமானத்தில் எப்படி அனுப்பி வைத்தனர் என்னும் மையக்கதை அப்படியே இருக்கிறது.

திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு கிராம வங்கி ஊழியராக பாதிக்கப்பட்டவரைச் சொல்லி இருந்தேன். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய ஒரு வட இந்திய மனிதரை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு மகள்களும் ஒரு மகனும் என பதிவு செய்திருந்தேன். ஒரு மகளும் மகனும் என காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மனிதர்களாக எங்கள் வங்கியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜோதிக்குமாரையும் சுரேஷ் பாபுவையும் குறிப்பிட்டு இருந்தேன். இதில் விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பனான சசிக்குமாரும் இன்னொருவரும் உதவுவதாக சித்தரித்து இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகை மற்றும் மங்காத்தா பட ரிலீசை ஒட்டிய ரசிகர்களின் கொண்டாட்டங்களாய் வெளியுலகம் இருந்ததை குறிப்பிட்டு இருந்தேன். இதில் தீபாவளி கொண்டாட்டங்களாய் காட்டி இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

சரி, முதலில் கதைக்கு சொந்தம் கொண்டாடிய நரன் நிலை இப்போது என்ன?

இதற்கு பதிலளித்துள்ள நரன், ‘‘படம் பார்த்தாகிவிட்டது. எனது கதையின் சில காட்சிகளும் கதை மாந்தருக்கான Character Designs அதில் அப்படியே இருக்கிறது. இரண்டு கதைக்கும் நிறைய பொதுத்தன்மைகள் இருக்கின்றன. ஆனால், எழுத்தாளர் மாதவராஜின் கதை 75 சதவிகிதம் அப்படியே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் இருந்து நரன் ஒதுங்கிக்கொள்ள ‘அயோத்தி’ படத்தின் திரைக்கதை தன்னுடையது என ஒரு புதிய குற்றச்சாட்டுடன் இந்த களத்துக்குள் வந்தார் சங்கர் தாஸ்.

இது குறித்து சங்கர்தாஸ் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், ”இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடத்தில் இயக்குநர் மந்திர மூர்த்தி இரண்டு பக்க கதையோடு வந்தார். எஸ். ராமகிருஷ்ணன் கதை என்றார். இதை சினிமாவாக்க வேண்டும் என்றார். கதை பீகாரில் தொடங்கி இராமேஸ்வரம் போகும் குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்வது; இரண்டு பேர் அவர்களுக்கு உதவுவது பற்றியது. இந்த இரண்டு பக்க கதைக்கு நான் திரைக்கதை வசனம் எழுதக் கேட்டுக்கொண்டனர். ‘உறியடி’ விஜயகுமார் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரைக்கதை எழுதும் போது மந்திர மூர்த்தி கள ஆய்வு செய்து சில தகவல்களைத் திரட்டி வந்தார். மார்ச்சுவரி நடைமுறைகள், எம்பாமிங்க் தகவல்கள், கார்கோவில் பிணத்தை அனுப்புதல், சவப்பெட்டி ஆகிய தகவல்களைக் கொண்டுவந்தார். அவற்றைத் திரைக்கதைக்குள் கொண்டுவந்தேன். அவருடைய உதவி இயக்குநர்கள் சில திருத்தங்கள் சொன்னார்கள். அதையும் செய்தேன். என்றாலும் மந்திரமூர்த்திக்கு திரைக்கதையில் முழுமையான நம்பிக்கை இல்லை. இதற்கிடையில் தயாரிப்பும் பாதியில் நின்றது. சில காலத்திற்குப் பிறகு ‘அயோத்தி’ என்ற தலைப்பில் விளம்பரம் வந்தது.

சரி வேறொரு தயாரிப்பு நிறுவனம், வேறொரு கதை போல என நினைத்தேன்.  ஆனால், படம் பார்த்தபோது 60% திரைக்கதை நான் எழுதியதுதான். அதற்கான முழு ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. அவ்வளவு ஏன் திரைக்கதையை உரிய முறையில் பதிவும் செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், ‘எஸ். ராமகிருஷ்ணன் கதை’ என்று கூறி அவரிடம் கொடுக்கப்பட்டதாக ஒரு கதையையும் வெளியிட்டுள்ளார். அதுவே ‘அயோத்தி’ கதை தன்னுடையதுதான் என்பதற்கான பலமான ஆதாரம் என்கிறார் மாதவராஜ்.

“செப்டம்பர், 2011இல் நான் எழுதிய பதிவில் பீகாரைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு இருந்தேன். முதலில் சங்கர் தாஸிடம் மந்திர மூர்த்தி கொடுத்த கதையில் பீகார் என்றுதான் இருந்துள்ளது. அதை அயோத்தி என நான் மாற்றினேன் என சங்கர்தாஸ் சொல்கிறார். ஆக எஸ். ராவின் கதை என கொடுக்கப்பட்டதில் பீகார் என்றுதான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது” என்கிறார் மாதவராஜ்.

எஸ். ராமகிருஷ்ணன் பதில் என்ன?

இது தொடர்பாக நேரடியாக பதிலேதும் கூறாமல் இருந்த எஸ். ராமகிருஷ்ணன், நடிகர் சசிகுமார் தன்னை சந்திக்க வந்ததைப் பற்றி எழுதியுள்ள பதிவு இடையே, “‘அயோத்தி’ படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்” என்று சுருக்கமாக கூறி இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.

ஆதாரம் வெளியிட்ட மாதவராஜ்

“இது எஸ். ராமகிருஷ்ணனின் கதை என இயக்குனர் மந்திரமூர்த்தி கொடுத்த”தாக சங்கர்தாஸ் வெளியிட்டுள்ள கதையையும் தனது பதிவையும் ஒப்பிட்டு ஒரு பதிவை மாதவராஜ் வெளியிட்டுள்ளார். அது வருமாறு:

‘லக்னோவிற்கு விமானம் இருக்கிறதா என்று விசாரிக்கிறான் கதிர். நேரடி விமானம் இல்லை என்கிறார்கள். பொராமவுண்ட், கிங் பிஃஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கை விரித்துவிட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டுசெல்ல முடியும் என்கின்றனர். (எஸ்.ரா எழுதியது)

சாமுவேல் ஜோதிக்குமாரும் சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். (மாதவராஜ் எழுதியது)

அவர்களது ரத்தக் காயங்களை பார்த்ததும் விமான நிலையத்தில் பயந்துவிடுகிறார்கள். ‘மேலே விமானம் செல்லும்போது காற்று அழுத்தம் கூடும். இவர்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது’ என்று சொல்லி மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட், பனிரெண்டரைக்குள் வாருங்கள் என அவசரப்படுத்துகிறார்கள். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (எஸ்.ரா எழுதியது)

அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்துவிட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. (மாதவராஜ் எழுதியது )

ஏர்போர்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருக்கிறது. அங்கு சென்று விசாரிக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி சர்டிஃபிகேட் தர முடியாது என்று கை விரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றாள் பல கிலோ மீட்டர் செல்ல வேண்டும். கதிர் தனக்கு தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு அந்த ஆம்புலன்ஸில் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறான். (எஸ். ரா எழுதியது )

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )

தீபாவளி கொண்டாட்டங்கள் இயங்கி கொண்டிருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட வேனிற்குள் அந்தக் குடும்பம் நிலை குலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து ரத்தக் காயங்களை துடைத்து சிகிச்சையளித்து சர்டிபிகேட் தந்திருக்கிறார் (எஸ்.ரா எழுதியது )

மங்காத்தா ரசிகர்களும் ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். (மாதவராஜ் எழுதியது )

தீபாவளி என்பதால் எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 11,000 எனவும் கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். ஷியாம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார் (எஸ்.ரா எழுதியது)

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்று சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால் தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். (மாதவராஜ் எழுதியது )

நீங்களெல்லாம் யார் சார் எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் உதவி செய்யனும். நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலைமை என்ன சார்? (எஸ்.ரா எழுதியது)

“நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும்? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” (மாதவராஜ் எழுதியது)

ஆதாரங்களுடன் மாதவராஜ் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கு எஸ்.ரா பதில் என்ன? மெளனம் கலைப்பாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...