No menu items!

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

“என்னா வெயில்” என்று கையில் வைத்திருந்த பேப்பரால் விசிறிக் கொண்டே உள்ளே வந்தாள் ரகசியா. “நீங்க நல்லா ஏசில உக்காந்திருக்கிங்க” என்று அலுத்துக் கொண்டாள்.

சில்லென்று லெமன் ஜூஸை நீட்டினோம். குளிர்ந்தாள்.

“இதோ..அதோனு சொல்லிக்கிட்டு இருந்த குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் வரப் போகுதுபோல. மகளிர் தின செய்தில முதல்வரே சொல்லிட்டாரே?”

“ஆமா, பட்ஜெட்ல ஆயிரம் ரூபாய் திட்டம் வரப் போகுது. ஆனா எந்த வடிவத்துல வரப் போகுதுனுதான் தெரியல”

“ஏன்?”

”கலைஞர் பிறந்தநாள் அன்னைக்கு அந்த திட்டத்தை தொடங்கிவைக்க முதல்வர் முடிவெடுத்து இருக்காராம். இதுபத்தி அமைச்சர்கள்கிட்டயும், அதிகாரிகள்கிட்டயும் ஆலோசனை நடத்தி இருக்காரு. ஆயிரம் ரூபாயை எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுக்க நிதிநிலை சரியில்லை. அதனால முதல் கட்டமா வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கற குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம்னு நிதியமைச்சர் பிடிஆர் சொன்னாராம். உடனே மத்த அமைச்சர்கள் டென்ஷனாகியிருக்கிறார்கள். எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய்னு சொல்லிட்டு அதில பிரிச்சுக் கொடுத்தா தப்பாய்டும்னு சொல்லியிருக்காங்க. எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாம கூட்டணிக் கட்சிகளும் விமர்சனம் செய்யும்னு எடுத்து சொல்லி இருக்காங்க. முதல்வருக்கு தமிழ்நாட்டோட நிதி நிலைமை தெரியும். அவருக்கு பிடிஆர் முழுமையா விளக்கியிருக்கிறார். அதே நேரம் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். அதனால கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஒரு ஆலோசனை கேட்போம் அப்புறம் முடிவெடுக்கலாம்னு முதல்வர் சொல்லியிருக்கிறார்”

”அப்புறம் என்ன முடிவு எடுத்திருக்காங்க?”

“இப்போதைக்கு எல்லோருக்கும் கொடுத்திடலாம்னுதான் முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனா இந்த முடிவு மாறலாம். பிடிஆர் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கிறார்”

”எப்படியோ குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகுது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மாதிரி குடும்பத் தலைவிகளும் அதிர்ஷ்டம் உள்ளவங்க. சரி, அண்ணாமலையை கடுமையா திட்டுனவங்களை அண்ணா திமுகவுல எடப்பாடி சேர்த்துக்கிறாரே..அது என்ன கணக்கு?”

“நீங்க நிர்மல் குமார், திலீப் கண்ணன் விஷயத்தைப் பத்திதானே கேட்கறீங்க? அவங்கப் போகப் போறதும் அதிமுகவுல சேரப் போறதும் அண்ணாமலைக்கும் அவரது நெருங்கிய வட்டாரத்துக்கும் முதலிலேயே தெரியும். கொஞ்ச காலமாகவே நிர்மல்குமாருக்கும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் நட்பு சரியில்லாம இருந்தது. ஐடி பிரிவு தலைவராக இருந்தாலும் அவரது பேச்சு எடுபடுவதில்லை என்ற வருத்தம் நிர்மல்குமாருக்கு இருந்தது. அது மட்டுமில்லாமல் வார் ரூம் ஆட்களின் சேட்டையும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதிமுகவுக்கு தூது விட்டார். பச்சைக் கொடி காட்டப்படவே உடனே விலகிவிட்டார். போகும்போது அண்ணாமலையை 420மலை என்று சொல்லி கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறார்”

“அதுதான் கேள்வி. அண்ணாமலை மீது விமர்சனங்களை வைத்த நிர்மல் குமாரையும் திலீப் கண்ணனணையும் எடப்பாடி சேர்த்துக்கிட்டாரே எப்படி? கூட்டணிக் கட்சினு கூட பார்க்கலையே?”

“எடப்பாடிக்கு அண்ணாமலை மீது கோபமோ கோபம். ஓபிஎஸ்ஸுடன் இணைந்திருக்கணும்னு அண்ணாமலை சொன்னது அவருக்குப் பிடிக்கல. அது மட்டுமில்லாம பாஜகவின் முந்தைய தலைவர்கள் போல் இல்லாமல் அண்ணாமலை அதிகார தோரணையுடன் நடந்துக் கொள்கிறார் என்று அவரது நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார்.”

“ஆனால் வெளில எதுவும் காட்டிக்கவில்லையே.. என்ன காரணம்?”

“ஈரோடு கிழக்கு முடிவுகளுக்காக காத்திருந்தார். அதிமுக வெற்றி பெற்றிருந்தால் பாஜகவுக்கு இன்னும் கடுமையான அதிர்ச்சிகளைக் கொடுத்திருப்பார். 44 ஆயிரம் வாக்குகள் என்பது கிட்டத்தட்ட அதிமுகவின் வாக்கு வங்கி. 2021 தேர்தல்ல 58ஆயிரத்து 300 வாக்குகள் வாங்கியிருந்தாங்க. இப்போ 43 ஆயிரத்து 900 வாக்குகள். 15 ஆயிரம் வாக்குகள் குறைந்திருக்கு. ஆளும் கட்சியின் பணபலம், அதிகார பலத்துக்கு முன்னால இவ்வளவு வாங்கினதே பெரிய விஷயம்னு எடப்பாடிக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு. அது மட்டுமில்லாம ஈரோடு கிழக்குல பாஜக பெருசா பிரச்சாரம் பண்னல. அண்னாமலை சில மணி நேரம்தான் வந்திருந்தாரு. பாஜக பிரச்சாரம் பண்ணியிருந்தா வாக்குகள் குறைஞ்சிருக்கும்னு கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க. பாஜகவை நம்புறது வேஸ்ட்னும் அதிமுககாரங்க நம்புறாங்க. இப்ப இப்படி ஷாக் கொடுத்தா நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு எடப்பாடி போடுற கணக்குதான் இந்த கட்சி மாற்றம்”

”பாஜக கூட்டணி தொடருமா தொடராதா?”

“அது இன்னும் முடிவுக்கு வரல. ‘சசிகலா, தினகரன், ஓபிஎஸ் எல்லாம் வேண்டாம்னு எப்படி உறுதியா இருக்கோமோ, அதேமாதிரி பாஜக விஷயத்துலயும் நாம உறுதியான முடிவு எடுக்கணும். வேணும்னா நாடாளுமன்றத் தேர்தல்ல சில இடங்கள்ல ஜெயிச்ச பிறகு பாஜகவுக்கு ஆதரவு தர்றதைப் பத்தி யோசிக்கலாம்’னு அதிமுக தலைவர்கள் சொல்றாங்க. அதனாலதான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்னு கருத்து சொல்லி இருக்காரு. ஒருவேளை பாஜகவின் டெல்லி மேலிடம் அழுத்தம் கொடுத்தா கூட்டணி இருக்கும்”

“அப்படி செஞ்சா பாரதிய ஜனதா அவங்களை விட்டுவைக்குமா? முன்னாள் அமைச்சர்கள் மேல ஊழல் விசாரணைகளை நடத்தி டென்ஷனாக்க மாட்டாங்களா?”

“டென்ஷன் ஆகாத மாதிரி அண்ணாமலை வெளில காட்டிக்கிறாரு. ஆனா அதிமுக மேல கடுமையான கோவத்துல இருக்கிறார். ‘பா.ஜ.கவிலிருந்து நபர்களை அழைத்து சென்றால்தான் திராவிடக் கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது’ என்று சொன்னாலும் அவருக்கு கட்சியில் பிரச்சினைகள் தீவிரமாகிவிட்டது. அதை எப்படி சமாளிக்கிறதுனு தனக்கு நெருக்கமான டெல்லி தலைவர்களின் உதவியைக் கேட்டிருக்கிறாராம்”

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை வேகமா நடக்குதுனு ஒரு செய்தி வருதே”

”ஆமா, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சில முன்னாள் அதிமுக அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுல கோர்ட்ல நிறுத்தி அதிமுக இமேஜை டேமேஜ் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்காங்க. இப்போதைக்கு அவங்க நத்தம் விஸ்வநாதனுக்கும், விஜயபாஸ்கருக்கும் குறி வச்சிருக்காங்க. அரசு வேலை வாங்கித் தர்றதா ஏமாத்தினதா விஜயபாஸ்கர் உதவியாளர் மற்றும் அவரது ஓட்டுநரை கைது செஞ்சிருக்காங்க. அப்ரூவரா மாறினா தண்டனையில இருந்து தப்பிக்கலாம்னு அவங்களுக்கு அழுத்தம் கொடுத்துட்டு இருக்காங்க. இதேபோல் 908 கோடி ரூபாய் நிலக்கரி இறக்குமதி ஊழல்ல மின்சார வாரியத்தை சேர்ந்த ஆறு பொறியாளர்கள் உட்பட 10 பேர் மேல லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கு. அவங்களும், ‘அமைச்சர் சொன்னார் நாங்கள் செய்தோம்’ங்கிற அளவுல வாக்குமூலம் தர தயாரா இருக்காங்க. அதனால நத்தம் விஸ்வநாதனும் விஜயபாஸ்கரும் விரைவில் கைதாவாங்கன்னு கோட்டையில பேசிக்கறாங்க.”

“திமுக செய்திகள் ஏதாவது இருக்கா?”

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவும் தயாராகிட்டு இருக்கு. திமுகவின் இப்போதைய எம்.பி.க்களோட செயல்பாடுகள் பத்தி விசாரிச்சு அறிக்கை கொடுக்கணும்னு உளவுத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டு இருக்காராம். அதுமட்டுமில்லாம தனியாகவும் விசாரிக்க சொல்லியிருக்காங்க. மாவட்டச் செயலாளர்களும் அறிக்கை கொடுக்கணும்னு முதல்வர் சொல்லியிருக்கிறார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில்தான் நாடாளுமன்ற தேர்தல்ல யாருக்கு சீட்னு முதல்வர் முடிவு எடுப்பாராம்”

“வழக்கமா கேக்குற கேள்விதான்…இதே கூட்டணி தொடருமா?”

“தொடரும்னுதானே கன்னியாகுமரி கூட்டத்துல முதல்வர்
சொல்லியிருக்கிறாரு அப்புறம் என்ன சந்தேகம்?”

“கூட்டணி தொடரலாம்..அதே அளவு சீட்டுகளை கொடுப்பாரா?”

“அது தனி கணக்கு…இப்போதைக்கு சொல்வதற்கில்லை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...