No menu items!

மனைவி சொல்லே மந்திரம்! – ஆன்மிகவாதியாக மாறிய கோலி

மனைவி சொல்லே மந்திரம்! – ஆன்மிகவாதியாக மாறிய கோலி

“நான் கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன். நான் நடத்துனராக இருந்தபோது எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது. காலையிலேயே பாயா, ஆப்பம் , சிக்கன் 65 சாப்பிடுவேன். சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது. இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றிவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது இது.

ரஜினிகாந்த் மட்டுமல்ல, பலரது வாழ்க்கை அவர்களின் திருமணத்துக்குப் பிறகு மாறியிருக்கிறது. திருமணம் வரை ஒரு ரூட்டில் பயணித்தவர்கள், மனைவி வந்த பிறகு அவர்களின் அறிவுரைப்படி டிராக்கை மாற்றி புது ரூட்டில் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். அப்படி ரூட்டை மாற்றிய கணவர்களின் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் விராட் கோலி.

2017-ம் ஆண்டில் அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யும் வரை விராட் கோலியின் குணமே வேறு. மைதானத்தில் சக வீரர்களையே அடிக்கடி திட்டுவது, கோபத்தில் கத்துவது, அவுட் ஆகி வெளியில் செல்லும்போது பேட்டைத் தூக்கி வீசுவது, எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது என்று மைதானத்தில் ஆக்ரோஷமாக இருப்பார் விராட் கோலி. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுள் நம்பிக்கை கொஞ்சம்கூட இல்லாத நபராக இருந்தார். கிரிக்கெட் போட்டிகளின்போது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும். ஆனால் விராட் கோலிக்கு எந்த செண்டிமெண்டும் கிடையாது. மைதானத்துக்கு வந்தோமா… ரன்களைக் குவித்தோமா என்று போய்க்கொண்டே இருப்பார்.

2016-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் செய்தியாளர் ஒருவர் கோலியிடம், “போட்டிகளின்போது பதற்றம் ஏற்படாமல் இருக்க தியானம், பூஜை போன்றவற்றை செய்வீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவரைப் பார்த்து புன்னகைத்த கோலி, ‘என்னைப் பார்த்தால் பூஜை செய்பவரைப் போல் இருக்கிறதா?’ என்ரு நக்கலாக கேட்டுள்ளார். அந்த அளவுக்கு ஆன்மிகத்துக்கும் கோலிக்கும் இடையேயான தூரம் அதிகம்.

ஆனால் அனுஷ்காவை கரம்பிடித்த பிறகு ஆளே மாறிப்போனார் கோலி. கோபம் குறைந்த கோலியை மைதானத்திலும் பிரஸ் மீட்களிலும் பார்க்க முடிந்தது. வழக்கமாக தனக்குப் பிடிக்காத ஏதாவது கேள்வியை செய்தியாளர்கள் கேட்டால் பிரஸ் மீட்டில் அவர்கள் மீது எரிந்து விழுவது முன்பு கோலியின் வழக்கம். ஆனால் திருமணத்துக்குப் பின் முழுக்க முழுக்க சாந்த சொரூபியாக மாறினார். கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம் இழந்த நிலையில் இதைப்பற்றி செய்தியாளர்கள் விமர்சித்தாலோ, கேள்விகளைக் கேட்டாலோகூட அமைதியாக பதில் அளித்தார்.

இந்த காலகட்டத்தில் மற்றொரு பெரும் மாற்றம் கோலிக்குள் நிகழத் தொடங்கியது. அது கடவுள் நம்பிக்கை. கோலிக்கு நேர் எதிராக கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவராக அனுஷ்கா இருந்தார். கோலி அவுட் ஆஃப் பார்மில் ரன்களைக் குவிக்க திணறிக்கொண்டு இருந்த நேரத்தில் அவருக்குள் கடவுள் நம்பிக்கையை விதைத்தார். அத்துடன் அவரும் பல கோயில்களுக்கு சென்று வேண்டுதலுக்கு வந்தார்.

அனுஷ்காவின் வேண்டுதலோ அல்லது கோலியின் திறமையோ.. ஏதோ ஒன்றால் கிரிக்கெட் உலகில் மீண்டு வந்தார் விராட் கோலி. கடந்த சில மாதங்களாக பழைய பன்னீர்செல்வமாக மாறி மைதானத்தில் எதிரிகளை பந்தாடி வருகிறார். ஆனால் போட்டிக்குப் பிறகு பார்ட்டிகளுக்கு போவது நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பது என்ற ஃபார்முலாவை மாற்றி, ஓய்வு நேரங்களில் மனைவியுடன் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்.

தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம், நீம் கரோலி பாபா கோயில், உஜ்ஜயினி மாகாளி கோயில் என்று கோலி – அனுஷ்கா தம்பதியினர் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு கோயிலைச் சுற்றி வருகிறார்கள். அதிலும் இஐபி தரிசனங்களை மறுத்து மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தரிசனம் செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அனுஷ்காதான் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கல் சொல்கிறார்கள்.

கோலி அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த காலத்தில், தனது வேண்டுதல்களும், கடவுள் நம்பிக்கையும் விராட் கோலியை மீட்டுவரும் என்று அவரிடம் கூறியுள்ளாராம் அனுஷ்கா. ஆனால் அப்போது அதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இப்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்ததும் அதைப்பற்றி கோலியிடம் சொன்ன அனுஷக்கா, அப்போதைய தன்னுடைய வேண்டுதல்களை நிறைவேற்றத்தான் இப்போது கோலியை கோயில் கோயிலாக அழைத்துச் செல்கிறார் என்கிறார்கள். மனைவி சொல்வதில் உண்மை இருப்பதாக நம்பும் கோலியும், அவர் பின்னால் கோயில் கோயிலாக சுற்றுகிறார்.

‘மனைவி சொல்லே மந்திரம்’ என்ற ரூட்டில் செல்லும் கோலி இன்னும் எப்படியெல்லாம் மாறப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...