No menu items!

5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு – போராடும் பாஜக – முந்தும் காங்கிரஸ்!

5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு – போராடும் பாஜக – முந்தும் காங்கிரஸ்!

5 மாநில தேர்தல்கள் இறுதி கட்டத்தை நெருங்க, ஜெயிக்கப் போவது யார் என்ற டென்ஷன் அரசியல் கட்சித் தொண்டர்களின் பிபியை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இந்த 5 மாநிலங்களிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பற்றி ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?

தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ்

கடந்த சில மாதங்களாக பாஜக அதிக ஆர்வம் காட்டிய மாநிலங்களில் ஒன்று தெலங்கானா. மோடி, அமித் ஷா, நட்டா என்று அக்கட்சியின் பல தலைவர்கள் தெலங்கானாவில் அடிக்கடி முகாமிட்டு சந்திரசேகர ராவின் ஆட்சியை விமர்சித்து பிரச்சாரம் செய்து வந்தனர். அதேபோல் அமலாக்கத் துறையை பயன்படுத்தி பிஆர்எஸ் ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். சந்திரசேகர ராவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்ற தோற்றம் இருந்தது. ஆனால் கள நிலவரம் வேறாக இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது. உண்மையில் இங்கு காங்கிரஸ் கட்சிக்கும் பிஆர்எஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

ஏபிபி – சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 119 இடங்களில் 48 முதல் 60 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுடன் கடுமையாக போராடிவரும் பிஆர்எஸ் கட்சி 43 முதல் 55 சீட்கள் வரை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானாவில் தாங்கள்தான் முக்கிய எதிர்க்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வரும் பாஜகவுக்கு 5 முதல் 11 தொகுதிகளுக்குள்தான் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதனாலேயே தற்போது அங்குள்ள பாஜக தலைவர்கள் பலரும் இப்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

ராஜஸ்தானை இழக்கும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி இப்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான். ஆனால் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையிலான உள்கட்சி மோதலால், அங்கு காங்கிரஸ் தோல்வியை தழுவ வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி மொத்தமுள்ள 200 இடங்களில் பாஜகவுக்கு 127 முதல் 137 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 59 முதல் 69 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது.

கடும் போட்டியில் மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை அம்மாநிலத்தை பாஜகவிடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி இப்போதைக்கு முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 113 முதல் 125 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், பாஜகவுக்கு 104 முதல் 116 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தாங்கள் பின்தங்கி இருப்பதால், டெல்லி தலைவர்கள் பலரையும் மொத்தமாக அங்கு களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளது. அவர்களின் கடைசி கட்ட பிரச்சாரம் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரியும்.

சட்டீஸ்கரில் போராடும் பாஜக

காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சட்டீஸ்கர். இம்மாநிலத்தில் 2018-ம் ஆண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக கடுமையாக போராடி வருகிறது. இந்த கடும் போராட்டத்தின் விளைவாக பாஜகவுக்கு மொத்தமுள்ள 90 இடங்களில் 39 முதல் 45 இடங்கள்வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 45 முதல் 51 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல்களிலேயே அதிக போட்டி நிலவும் மாநிலமாக சட்டீஸ்கர் இப்போது இருக்கிறது.

மிசோரம் யாருக்கு?

மற்ற 4 மாநிலங்களின் தேர்தலுக்கு கிடைத்துள்ள வெளிச்சம் மிசோரம் மாநிலத்துக்கு கிடைக்கவில்லை. சிறிய மாநிலம் என்பது இதற்கு முக்கிய காரணம். 40 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய கூட்டணி 13 முதல் 17 இடங்கள் வரையும், காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 14 இடங்களும், சோரம் மக்கள் இயக்கத்துக்கு 9 முதல் 13 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இங்கு தொங்கு சட்டசபை ஏற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...