No menu items!

முதல்வர் Vs ஆளுநர் …-மிரள வைக்கும் மோதல்கள்

முதல்வர் Vs ஆளுநர் …-மிரள வைக்கும் மோதல்கள்

ரவீந்திர நாராயண ரவியை உங்களுக்குத் தெரியுமா? ‘யாருங்க அவர்?’ என்று நெற்றியைச் சுருக்காதீர்கள். ரவீந்திர நாராயண ரவியை சுருக்கமாக ஆர்.என்.ரவி என்பார்கள். தமிழகத்தின் ஆளுநர்.

ஆளுநரை ஆட்டுத்தாடியுடன் ஒருகாலத்தில் ஒப்பிட்டவர் அறிஞர் அண்ணா. ஆளும் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையில் அந்தக் காலத்திலேயே முட்டல் மோதல்கள் ஆரம்பித்து விட்டாலும்கூட, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்த மோதல்கள் அதிகம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து 2012ல் ஓய்வு பெற்றவர். கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசக ராகவும், நாகாலாந்து மாநில ஆளுராகவும் இருந்தவர்.

தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என்று தெரிந்தபோது பலருக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம்தேதி தமிழக ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என்.ரவி. அவர் பதவியேற்று தற்போது இரண்டு ஆண்டுகள் இனிதே முடிந்து விட்டன. இந்த இரண்டாண்டு காலத்தில்தான் எத்தனை முட்டல்கள்? எத்தனை மோதல்கள்?

பதவியேற்ற உடனே அக்டோபர் 23. டெல்லி சென்ற ரவி, பிரதமர் மோடியைச் சந்தித்தார். தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பாடு குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக செய்தி பரவியது. அது அடைமழைக்கான மேக அறிகுறி என்று அப்போதே தெரிந்துவிட்டது.

அதன்பின் அதகளமாக ஆரம்பித்த முட்டல் மோதல்தான் இப்போது ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் வந்து முடிந்திருக்கிறது.

ஆளுநர் ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே இந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த மோதல்களை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

அக்டோபர் 30, 2021. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஆளுநர். அது தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அறிவிப்பும் இல்லை. அழைப்பும் இல்லை.

நவம்பர் 1, 2021. தமிழ்நாடு விவசாயக் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் சனாதனம் பற்றி பேசிய ஆளுநர், அதே மாதம் 11ஆம்தேதி அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் என்பவரை நியமிக்கிறார்.

டிசம்பர் 9, 2021. பாரதிதாசன் பல்கலையில், தேசியக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கிறார் ஆளுநர் ரவி.

அடுத்து வந்த மோதல்தான் நீட் மசோதா. செப்டம்பர் 13ஆம்தேதி தமிழக சட்ட மன்றத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்படுகிறது. ஆளுநருக்கு அது அனுப்பப்பட, பிப்ரவரி முதல்தேதி, அதை ‘மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்’ என திருப்பி அனுப்புகிறார் ஆளுநர்.

சட்டமன்றத்தில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி, அதை இரண்டாவது முறையாக ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்ப, வேறு வழியில்லாமல் நீட் மசோதாவை, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற, மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறார் ஆளுநர்.

2022, ஏப்ரல் 19ஆம்தேதி. மயிலாடுதுறை தர்மாவரம் ஆதீன மடத்துக்கு வந்த ஆளுநருக்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கருப்புக்கொடி காட்டுகின்றன. ஆளுநரின் வாகனத்தொடர் மீது கல்விழுந்ததாக குற்றச்சாட்டு எழுகிறது.

மே மாதம் பாப்புலர் புரண்ட் ஆஃப் இந்தியாவை பயங்கரவாத இயக்கம் என்கிறார் ஆளுநர்.

மே 31. மீன்வள பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதில் முதல்வரை நியமிக்கக் கோரும் மசோதா, கால்நடை சட்ட மசோதா உள்பட 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் தகவல் வெளியாகிறது. அத்தனை மசோதாக்களும் கிடப்பில் கிடப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.

ஜூன் மாதம் 19ஆம்தேதி வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ (ஏக் பாரத் சிரேஷ்ட பாரத்) என்கிறார் ஆளுநர்.

ஜூலை மாதம் வேலூரில் சிப்பாய் புரட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ‘ஆரியம், திராவிடம் எல்லாம் இனம் சார்ந்தது அல்ல. இடம் சார்ந்தது. விந்திய மலைக்கு வடக்கே இருந்தவர்கள் ஆரியர்கள். தெற்கே இருந்தவர்கள் திராவிடர்கள். ஆரியம், திராவிடம் எல்லாம் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் உருவானது’ என்று பேசுகிறார். சர்ச்சை சரமாரியாகக் கிளம்புகிறது.

ஆகஸ்ட் 25ஆம்தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா. அதில், ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை விமர்சனம் செய்கிறார் ஆளுநர். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருக்குறளை வெறும் நடத்தை விதிகளின் புத்தகமாக மாற்றி விட்டார்கள்’ என்கிறார். அதைக் கண்டித்து மறுநாள் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கண்டனக் கருத்துகள் இடம்பெறுகின்றன.

அடுத்ததாக கோவை கார் சிலிண்டர் வெடிப்பு. அக்டோபர் 23ஆம்தேதி நடந்த அந்த சம்பவத்தை ஆளும் தரப்பு காஸ் சிலிண்டர் வெடிப்பு என்று சொல்ல, ஆளுநர் தரப்போ அதை பயங்கரவாதத் தாக்குதலாக சித்தரிக்க ஒரே பரபரப்பு.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தநிலையில், ஆளுநர் ரவியோ, அவர் பங்கேற்ற விழா ஒன்றில், இந்த விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற மாநில அரசு 4 நாட்கள் தாமதம் செய்ததாகக் கூறி பரபரப்பை பற்ற வைக்கிறார். ஒருவாரம் கழித்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து மாநில காவல்துறையிடம் அவர் அறிக்கை கேட்டது தனிக்கதை.

அடுத்த மோதல் ஆன்லைன் சூதாட்டம். ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர மறுத்து அதை திருப்பி அனுப்புகிறார். ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் டிசம்பர் மாதம் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியைச் சந்திக்கின்றனர்.

புத்தாண்டு பூக்கிறது. ஜனவரி 4ஆம்தேதி காசி தமிழ்ச் சங்கமக் கூட்டத்தில் பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாடு என்ற பெயரை விட தமிழகம் என்ற பெயரே பொருத்தமான பெயர்’ என்று கூறி புதிதாக ஒரு சர்ச்சையை சதிராட விடுகிறார். அவரது உருவபொம்மை கொளுத்தப்படுகிறது. பிறகு இந்த தமிழக சர்ச்சை முடிவுக்கு வருகிறது.

ஜனவரி 9ஆம்தேதி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாள். அன்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ஆளுநர் உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்க்கிறார். சில கருத்துகளை உரையில் அவர் சேர்த்துக் கொள்கிறார்.

ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என பேரவையில் தமிழக அரசு சுடச்சுட தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆளுநர் அவையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட, தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளிநடப்பு செய்த பரபரப்பு சம்பவம் நடை பெறுகிறது.

ஆளுநர் வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னத்துக்குப் பதில் தேசியச் சின்னம் இடம்பெறுகிறது. தமிழ்நாடு என்ற அதிகாரபூர்வ பெயர் அச்சிடப்படாமல் தமிழகம் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. ஆளுநரின் குடியரசு தினவிழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகம் என்று மாறி இருந்தது.

அடுத்தடுத்து வந்த சம்பவங்கள் ஆளுநர்-தமிழக அரசு இடையிலான மோதலை இன்னும் உச்சத்துக்குக் கொண்டு போயின.

ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணிக்கின்றன. ‘கிடப்பில் கிடக்கும் மசோதாக்கள் இறந்து விட்ட மசோதாக்கள்’ என்கிறார் ஆளுநர். ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வெளிநாட்டு நிதியுதவியுடன் நடந்தது. மக்களைத் தூண்டி விட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டனர்’ என்கிறார் அவர்.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர ஒரு காலவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்படுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றன.

அடுத்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான சர்ச்சை. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. செந்தில் பாலாஜி மற்றும் 2 அமைச்சர்களின் துறைகளை மாற்ற தமிழக அரசு பரிந்துரைக்க, அதை நிராகரிக்கிறார் ஆளுநர். ‘செந்தில் பாலாஜியை பதவி நீக்கு’ என்கிறார்.
ஜூன் 30ஆம்தேதி செந்தில் பாலாஜியை பதவி நீக்கி ஆளுநர் உத்தரவிடுகிறார். சில மணி நேரங்களில் அந்த உத்தரவை திரும்பப் பெறுகிறார். அதிகார வரம்பை மீறி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் உத்தரவிட்டது அதிர்ச்சியலைகளை அப்போது ஏற்படுத்தியது.

அதே ஜூன் மாதம். வடலூரில் நடந்த வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்தான்’ என்கிறார்.

இந்த மோதலில் அடுத்தகட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் நியமனத்துக்காக தமிழக அரசு வழக்கம்போல மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேடல் குழுக்களை அமைக்கிறது. அந்த தேடல் குழு, தகுதியான 3 பேரை இறுதிப் பட்டியலில் கொண்டு வந்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அவர்களில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்வார். இதுதான் நடை முறை.

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னிச்சையாக தலா 4 பேர் கொண்ட மூன்று குழுக்களை அறிவித்து அதிர வைக்கிறார். வழக்கத்துக்கு மாறாக மூன்று பேர்களுடன் கூடுதலாக யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி அதில் இணைக்கப்படுகிறார்.

அதன்பின் தமிழக அரசு புதிய தேடல் குழுக்களை அமைத்து அதை அரசிதழிலும் வெளியிடுகிறது.
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, ‘ஆளுநர் ரவி தேவையற்ற அரசியல் செய்கிறார். தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் தலைமை போல அவர் செயல்படுகிறார்’ என்று விமர்சிக்கிறது.

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் லேட்டஸ்ட் சம்பவம் டி.என்.பி.எஸ்.சி. தொடர்பானது. தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வுக்குழு வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவை தமிழக அரசு பரிந்துரை செய்கிறது. ஆளுநர் அதை ஏற்கவில்லை.

‘எந்த அடிப்படையில் தேர்வு?’ எனக் கேட்டு ஆளுநர் கேள்வி எழுப்புகிறார். தமிழக அரசு பதில் அளித்தபோது, ‘வெளிப்படைத்தன்மை இல்லை’ என்றுகூறி ஆளுநர் மீண்டும் அந்த கோரிக்கையை நிராகரிக்கிறார்.
அதைத் தொடர்ந்து மருதுபாண்டியர் நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘இவர்கள்’ பிரிட்டிஷ் அரசுடன் சேர்ந்து கொண்டு சுதந்திரத்துக்கு எதிராகப் பேசியவர்கள். இங்கே சுதந்திரப் போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக ஆக்கி விட்டார்கள்.’ என்று பேசி சர்ச்சையைக் கிளப்புகிறார்.
ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலு பேச, ஒருமுறை குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்தித்து திமுக எம்.பி.க்கள் ஆளுநருக்கு எதிராகப் புகார் செய்த சம்பவமும் நடந்திருக்கிறது.

‘ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதிநிதி, ஒன்றிய அரசின் ஊதுகுழல், நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் குபீர் நாட்டுப்பற்றாளர்’ என்றெல்லாம் திமுக வசைபாடி முடித்து விட்டது. இருந்தும் ஆளுநர் அரசு மோதல் ஓய்வதாகத் தெரியவில்லை.

இந்தநிலையில் இதன் உச்சகட்ட காட்சிபோல, ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு நடந்திருக்கிறது. குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவர் ஏற்கெனவே சென்னை பா.ஜ.க அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர். அவரை ஜாமீனில் எடுத்தவர் பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வ குமார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் மாளிகை அருகே நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு பா.ஜ.க நடத்தும் நாடகம் என திமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ள நிலையில், ‘ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரத்தை திமுக மிகவும் மென்மையாகக் கையாள்கிறது. கலைஞர் கருணாநிதி இப்போது இருந்திருந்தால் கதையே வேறு’ என்ற கருத்தும் இருக்கிறது.

இந்தநிலையில்தான், ‘ஆளுநர் திமுகவுக்கு ஆதரவாக (!) பிரச்சாரம் செய்வதால் வரும் மக்களவை தேர்தல் வரும் வரை அவரை மாற்ற வேண்டாம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது விரக்தியால் எழுந்த பேச்சா? அல்லது வேடிக்கையான பேச்சா என்பது தெரியவில்லை.

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் என்னென்ன அம்சங்களில் ஏழாம் பொருத்தம் இருக்கிறது என்று பார்த்தால், ஏகப்பட்ட அம்சங்களில் ஏழாம்பொருத்தம்தான்.

தமிழக அரசின் இந்தி எதிர்ப்பும், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பும் ஆளுநர் ரவிக்குப் பிடிக்கவில்லை. மும்மொழிக் கொள்கை, தமிழக அரசின் திராவிட மாடல் பெருமை இவையெல்லாம்கூட முட்டல் மோதல்களுக்கு முழுமுதல் காரணமாக இருக்கின்றன.

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே நடந்துவரும் இந்த மோதலில் இன்னும் என்னென்ன திடீர்த்திருப்பங்கள் காத்திருக்கிறதோ? தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...