No menu items!

200வது ஆட்டம் – தோனி சிஎஸ்கேவின் புதிய சாதனை!

200வது ஆட்டம் – தோனி சிஎஸ்கேவின் புதிய சாதனை!

சிஎஸ்கே அணிக்கும் ‘தல’ தோனிக்கும் இன்றைய நாள் முக்கியமானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200-வது முறையாக களம் இறங்குகிறார் தோனி. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு ஒரு கேப்டன் இத்தனை போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது புதிய சாதனை. இடைப்பட்ட காலத்தில் 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்று சென்னை ரசிகர்களின் ஆக்‌ஷன் ஹீரோ நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் தோனி.

சென்னையும் தோனியும் தங்கள் பாசப்பிணைப்பைக் கொண்டாடும் நேரத்தில் சிஎஸ்கே அணிக்குள் தோனி நுழைந்த கதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.,..

2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உருவான காலத்தில் ஒவ்வொரு நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டு 8 கிரிக்கெட் அணிகள் தொடங்கப்பட்டன. இதில் மும்பைக்கு சச்சின், டெல்லிக்கு ஷேவாக், கொல்கத்தாவுக்கு சவுரவ் கங்குலி, பஞ்சாபுக்கு யுவரா சிங், பெங்களூருவுக்கு திராவிட் என்று ஏற்கெனவே நட்சத்திர வீரர்கள் இருந்தனர். அவர்களை தலைமைப் பதவியில் வைத்து அணிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த காலத்தில் சென்னைகென்று பெரிய அளவில் நட்சத்திர வீரர்கள் இல்லை. இந்த சூழலில்தான் 2007-ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த தோனியை எந்த விலைகொடுத்தாவது வாங்குவது என்ற வைராக்கியத்தில் சிஎஸ்கே அணி ஏலத்தில் நுழைந்தது.

முதலாவது ஐபிஎல் ஏலத்தில் தோனியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பல்வேறு அணிகளும் அவருக்காக குரல் கொடுத்தன. ஏலம் களை கட்டத் தொடங்கியது. 1 மில்லியன் டாலருக்கு மேல் தோனியின் ரேட் ஏற மற்ற அணிகள் பின்வாங்கின. ஆனால் சென்னையும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தோனியை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டின. இதனால் தோனியின் மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தோனியின் ரேட் ஏறத் தொடங்கியதும் மும்பை அணி யோசிக்கத் தொடங்கியது. ஏலம் மேலும் அதிகரித்து தோனிக்கு 15 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டிவந்தால், அப்போதைய பிசிசிஐ விதிப்படி அதைவிட 15 சதவீதம் அதிகமாக, அதாவது 16.5 கோடி ரூபாயை ‘லெஜண்ட்’ வீரரான சச்சினுக்கு கொடுக்க வேண்டி வரும். ஒவ்வொரு அணிக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையே 60 கோடி ரூபாய்தான். இதில் சச்சினுக்கும், தோனிக்கும் மட்டுமே 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மற்ற வீரர்களை வாங்க பணம் இருக்காதே என்று யோசித்தது.

இதன் காரணமாக கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பின்வாங்க, 11.33 கோடி ரூபாய்க்கு தோனியை தட்டித் தூக்கியது சென்னை ரூப்பர் கிங்ஸ். அன்றிலிருந்து சிஎஸ்கே அணி மட்டுமின்றி சென்னையின் பெருமைமிகு ‘தல’யாகவும் மாறினார் தோனி.

சென்னை மீதான தோனியின் பாசம், சிஎஸ்கே அணிக்கு 2016 முதல் 2017 வரை 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட காலத்தில் வெளிப்பட்டது. இந்த காலகட்டத்தில் புனே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். அப்போது உடலளவில் புனேவுக்கு சென்றாலும், மனதளவில் சென்னையிலேயே இருந்தார் தல தோனி.

இதுபற்றி பின்னாளில் கருத்து தெரிவித்த மஹேந்திர சிங் தோனி, “2016-ம் ஆண்டில் சென்னைக்காக ஆடாமல் புனே அணிக்காக ஆடும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. அதிலும் போட்டியில் ஆடுவதற்காக புனே அணியின் சீருடையை அணிந்து சென்றபோது மஞ்சள் நிற சீருடையை அணியாமல் இருந்தது மனதை வருத்தியது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 ஆண்டுகள் ஆடியிருந்தேன். திடீரென்று அந்த பந்தம் அறுந்துபோனது மனதை அழுத்தியது. மிகவும் சோகமாக இருந்தது. அதே நேரத்தில் நான் ஒரு தொழில்முறை ஆட்டக்காரன் என்பதால் என் மனதை தேற்றிக்கொண்டேன். என் அப்போதைய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக முழுமனதுடன் விளையாடத் தயாரானேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தடைக்கு பின் சிஎஸ்கேக்கு ஆடவந்த 2018 ஐபிஎல் தொடரில் பழைய சகாக்களை ஒன்றுவிடாமல் அணியில் சேர்த்தார். அதில் பலருக்கும் வயதாகி இருந்தது. அதைப்பார்த்து ‘டாடீஸ் ஆர்மி (Daddy’s Army)’ என்று சிஎஸ்கேவை கிண்டலடித்தனர். ஆனால் அதைப்பற்ரிக் கவலைப்படாத தோனி, அந்த அப்பாக்களின் படையுடன் கோப்பையை தட்டித் தூக்கினார். அவரது வெற்றிகள் இன்னும் தொடர்கின்றன.

கடந்த ஆஅண்டு ஐபிஎல்லின் இறுதியில், ‘இதுதான் உங்களுக்கு கடைசி ஐபிஎல்லா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ‘டெபனட்லி நாட்’ என்று இதற்கு பதிலளித்த தோனி, சென்னை மண்ணில் தன் கடைசி போட்டியை ஆட விரும்புவதாக தெரிவித்தார். அந்த அளவுக்கு சென்னை மண்ணை விரும்புகிறார் தோனி.

தமிழகத்தில் இன்று பல தொழில்களில், பல வேலைகளில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலைப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் என்று சென்னையின் முகத்தை மாற்றும் பல வேலைகளில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் கிரிக்கெட் மேப்பில் சென்னையின் முகத்தையே மாற்றி வெற்றிமுகமாக்கிய பெருமை ஜார்கண்ட்டைச் சேர்ந்த தோனி என்ற இந்த வடமாநிலத்தவருக்கு நிச்சயம் உண்டு.

ஆனால், உண்மை என்னவென்றால் தோனியை வட மாநிலத்தை சேர்ந்தவராக தமிழ் ரசிகர்கள் கருதுவதில்லை.

தல தோனி ஒரு ஸ்பெஷல் தமிழர்தான் அவர்களுக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...