No menu items!

எங்கே போனார் அண்ணாமலை?  – மிஸ் ரகசியா

எங்கே போனார் அண்ணாமலை?  – மிஸ் ரகசியா

 “ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒருவழியா ஒப்புதல் கொடுத்துட்டாரு போல” என்றவாறு ரகசியாவை வரவேற்றோம்.

 “ஆளுநருக்கு வேறு வழி கிடையாது. இரண்டாவது முறையா மசோதாவை அனுப்பினா அதை ஒப்புக் கொள்ள வேண்டியது ஆளுநரின் வேலை”

“சட்டப்பேரவைல ஆளுநருக்கு எதிரா தீர்மானம் போட்டதும் வேகமாக ஆளுநர் ரம்மி மசோதாவுக்கு சம்மதம் கொடுத்துவிட்டார் என்று கூறுகிறார்களே?”

“அப்படி திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால் கவர்னர் வெள்ளிக்கிழமையே கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டதாக ராஜ்பவன் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்”

“அப்ப எது உண்மை?”

“ரெண்டுமே உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. கவர்னர் வெள்ளிக் கிழமையே கையெழுத்து போட்டிருக்கலாம். ஆனால் அது அரசுக்கு வந்து சேர்ந்த தினம் தீர்மானம் போட்ட நாளாக இருக்கலாம். ஆனா சட்டப்பேரவைல தீர்மானம் போட்டது ஆளுநருக்கு ஒரு அடிதான்”

“பாஜகவுல என்ன சொல்றாங்க?”

“தமிழ்நாட்டு பாஜகவுல இருக்கிறவங்களுக்கு இதுல இஷ்டம் இல்ல. கவர்னருக்கும் சேர்த்து நாம முட்டு கொடுக்க வேண்டியிருக்குன்னு புலம்புறாங்க. அது மட்டுமில்லாம மக்களும் இதை ரசிக்க மாட்டாங்கன்றது அவங்க கருத்து”

 “ஆளுநருக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்துல விஜயதாரணி கலந்துக்கலையே?”

 “ஆமாம். இது திமுக தலைவர்களை கடுப்பேத்தி இருக்கு. இதுதொடர்பா தங்களோட கண்டனத்தை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிச்சிருக்காங்க. அவங்களுக்கு வேற ஏதோ முக்கியமான வேலை இருந்ததுனு சொல்லி சமாளிச்சிருக்காங்க”

 “பிரதமரோட சென்னை விசிட்ல அண்ணாமலையையே காணோமே…என்ன காரணம்? எங்கே போனார்”

”பிரதமர் சென்னைல இருக்கும்போது அண்ணாமலை இருக்கக் கூடாதுனு டெல்லி மேலிடமே சொன்னதா சொல்லி அண்ணாமலை எதிர்ப்பாளர்கள் உற்சாகமாய் சொல்றாங்க…”

“ஆனா, கர்நாடகா தேர்தல் தொடர்பா டெல்லில மீட்டிங்கல இருந்தார்னு அண்ணாமலை தரப்புல சொல்றாங்களே..”

“ஆமா…அந்தக் கூட்டத்துல பிரதமர் கூட அண்ணாமலை  உக்காந்திருக்கிற மாதிரி போட்டோ கூட வெளியிட்டிருக்காங்க. ஆனா பிரதமர் தமிழ்நாடு, கர்நாடாகலாம் விசிட் பண்ணிட்டு டெல்லி போன பிறகுதான் கர்நாடகத் தேர்தல் தொடர்பான அந்தக் கூட்டம் நடந்திருக்கு. பிரதமர் இங்க வந்திருக்கும்போது அண்ணாமலையும் இங்க வந்திருக்கலாமேனு எதிர் தரப்பினர் சொல்றாங்க”

“சரி, எது உண்மை?”

“எடப்பாடி பழனிசாமியை பிரதமர் தனியா சந்திக்கிறார்னு ஒரு நியூஸ் அண்ணாமலைக்கு கிடைச்சிருக்கு. அதை அண்ணாமலை ரசிக்கல. அந்த எதிர்ப்பை காட்டுறதுக்குதான் அவர் சென்னை வரலையாம். இது கட்சி மேலிடத்துக்கு தெரிஞ்சிருக்கு. அதனால கடைசி நேரத்துல தனிப்பட்ட சந்திப்பை கேன்சல் பண்ணியிருக்காங்க. அதிமுக கூட சகவாசமே வேண்டாம்னு டெல்லிக்கு சொல்லிக்கிட்டே இருக்கிறார். ஆனா அவங்க இன்னும் தெளிவா முடிவெடுக்கல”

”அப்போ அண்ணாமலைக்காக எடப்பாடி மீட்டிங்கை கேன்சல் பண்றாங்கனா அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனுதானே அர்த்தம்?”

“ஆமாம். அண்ணாமலைக்கு மேலிடம் இன்னும் முக்கியத்துவம் கொடுக்குதுனுதான் டெல்லி வட்டாரத்தில் தகவல்”

”எல்.முருகன் இப்போ நிறைய தெரிகிறாரே. கட்சிக் கூட்டங்கள்ல கலந்துக்கிறார்”

“2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குதுல. தன்னோட இருப்பைக் காட்டிக்கணும்னு பார்க்கிறார். தனது ஆதரவாளர்களுக்கு பெரிய விருந்து அளிக்கப் போகிறார்”

“விருந்தா?”

“ஆமாம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விருந்து கொடுக்கிறார். தன்னை அண்ணாமலை கண்டுக்கிறதில்லைனு அவருக்கு வருத்தம் இருக்கு. தனக்கான ஆதரவு பலத்தை தக்க வச்சுக்கணும்னு பார்க்கிறார். அதற்கான முயற்சிதான் இது. இந்த விருந்துக்கு அமித்ஷாகிட்டயும் ஒகே வாங்கிட்டாராம். முக்கியமான நியூஸ் என்னனா இந்த விருந்து டெல்லில நடக்குது. ஆதரவாளர்கள் டெல்லிக்குப் போறாங்க!”

”பிரதமர் வருகைபோது கோ பேக் மோடிலாம் பெருசா நடக்கலையே?. திமுககாரங்களே அடக்கி வாசிச்சிருக்காங்களே?”

 “பாஜகவோட சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசோட எந்த மோதல் போக்கும் வேண்டாம்கிறதுதான் முதல்வரோட பாலிசி.  இந்த முறை பிரதமர் சென்னைக்கு வரும்போது ‘கோ பேக் மோடி’ வாசகத்தோட கருப்பு பலூன்களை பறக்கவிட  காங்கிரஸ் கட்சிக்காரங்க திட்டம் போட்டிருக்காங்க. இதைக் கேள்விப்பட்ட முதல்வர், பிரதமரோட பயணத்துல எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது. கூட்டணிக் கட்சின்னாலும் நடவடிக்கை எடுங்கன்னு போலீஸுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டிருக்காரு.  இதைத்தொடர்ந்து போலீஸார் மொத்த கருப்பு பலூன்களையும் அள்ளிட்டு போயிருக்காங்க. அதைப் பறக்கவிட திட்டம் போட்டிருந்த காங்கிரஸ் நிர்வாகியையும் வீட்டுக் காவல்ல அடைச்சிருக்காங்க. அதேமாதிரி  வள்ளுவர் கோட்டத்தில போராட்டம் நடத்தின  கே.எஸ்.அழகிரி உள்ளிட்டவங்களையும் கைது பண்ணி வச்சிருந்து பிரதமர் போன பிறகுதான் விட்டிருக்காங்க.”

 “பிரதமர் ஹேப்பி ஆகியிருப்பாரே?”

 “பிரதமர் ஹேப்பி. அதிமுக ஆட்சிக்காலத்துல ஒருமுறை பாதுகாப்பு மற்றும் எதிர்ப்புகளால சாலையில காரில் அவரால போக முடியலை. ஆனா இப்ப தனக்கு சாதகமா எல்லாம் நடந்ததுல பிரதருக்கு ரொம்பவே சந்தோஷன். இந்த சந்தோஷத்தினால மாநில அரசோட கொஞ்சம் அனுசரிச்சு போகணும்னு கவர்னருக்குகூட அவர் அட்வைஸ் பண்ணியிருக்கார்னு சொல்றாங்க. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததுக்கு இதுவும் ஒரு காரணமாம்.”

“திமுக நியூஸ் ஏதாவது இருக்கா?”

“கட்சியில ரெண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கணும்கிறதுல முதல்வர் உறுதியா இருக்காரு. இதுபத்தி  ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்கள்கிட்டயும் வாரந்தோறும் ரிப்போர்ட் கேட்டுட்டு இருக்கு கட்சித் தலைமை.  மேலிடத்து பிரஷரால உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளை தாஜா பண்ணிட்டு இருக்காங்க.  அதிக உறுப்பினர்களை சேர்க்கிறவங்களுக்கு சிறப்பு பரிசெல்லாம் அறிவிச்சுருக்காங்க. உள்ளூர் நிர்வாகிகளும்  இதுதான் சாக்குன்னு தங்களுக்கு வேண்டிய விஷயங்களை சாதிச்சுக்கறாங்க.”

“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு இதைத்தான் சொல்வாங்க போல.”

”இன்னொரு நியூஸ் சொல்றேன். நாடளுமன்றத் தேர்தல்ல ஒரு நடிகர் தன்னோட செல்வாக்கை டெஸ்ட் பண்ணி பார்க்கப் போறாரு”

”யாரு அவரு. இத்தனை நடிகர்கள் டெஸ்ட் பண்ணி பார்த்து ஓடியிருக்காங்க…இவர் யார்?”

 “விஜய்தான். அவரோட  அரசியல் திட்டங்களைப் பத்தி லேசா புகைய ஆரம்பிச்சிருக்கு. அவரது சார்பாக ரகசிய சர்வேக்கள் எடுத்துக்கிட்டு இருக்காங்க. வருகிற தேர்தல்ல குறைஞ்சபட்சம் மூன்று தொகுதிகள்ல விஜய் ரசிகர்கள் போட்டியிடலாம். இந்த தேர்தல்ல அவங்க வாங்குற வாக்குகளைப் பொறுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள்ள விஜய் கட்சி தொடங்கலாம்னு சொல்றாங்க. யாரை விட்டது ஆசை”  என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...