No menu items!

எங்கே நிம்மதி? தேடும் வில் ஸ்மித்

எங்கே நிம்மதி? தேடும் வில் ஸ்மித்

“எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…” என்று அலைந்து கொண்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். கோடிக்கணக்கில் பணம், லட்சக்கணக்கில் ரசிகர்கள், உல்லாசமான வாழ்க்கை என்று மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வாழ்க்கை வாழும் வில் ஸ்மித், இப்போது அமைதிக்காக இந்தியாவைத் தேடி வந்திருக்கிறார்.

ஹாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா. ஆஸ்கர் மேடைகளில் ஆண்டுதோறும் நன்றிகள் பகிரப்படும், முத்தங்கள் பறக்க விடப்படும், அரவணைப்புகள் ஆராதிக்கப்படும். உணர்வுபூர்வமான பேச்சுகள் கண்ணீரில் முடியும். ஆனால் இந்த ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு வில் ஸ்மித் கொடுத்த அறையால் ஏகப்பட்ட பரபரப்பு கிளம்பியது.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் க்ரிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியை உருவகேலி செய்ய, மேடையில் ஏறிய வில் ஸ்மித் அவரை ஓங்கி ஒரு அறைவிட்டார்.

மேலும் ‘என் மனைவி பெயரை உன் ’_’ வாயால் சொல்லாதே..’ என வில் ஸ்மித் கோபத்தில் கெட்ட வார்த்தையுடன் சொல்வதும் பலரது காதுகளில் விழுந்தது. இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்த ஆஸ்கர் உள்ளிட்ட அகாடமியின் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டது.

எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘ஹீட்’ என்ற பத்திரிகைதான் இந்த செய்தியை முதலில் வெளியிட்டுள்ளது. “ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மேடையில் ஏறி தொகுப்பாளரை அறைந்து வில் ஸ்மித் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்ட விதம் அவரது மனைவியை பாதித்துள்ளது.

அவர் செய்தது அநாகரீகமான செயல் என்று ஜடா நினைக்கிறார். இதனால் இருவருக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது. இப்போது அவர்கள் இருவரும் பேசுவதுகூட குறைந்துவிட்டது. ஹாலிவுட்டின் மிக மோசமான விவாகரத்துகளில் ஒன்றாக இது இருக்கப் போகிறது.

விவாகரத்து செய்யும்போது ஜீவனாம்ச தொகையாக 350 மில்லியன் டாலர்களை வில் ஸ்மித் வழங்கவுள்ளார்” என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அதேநேரத்தில் வில் ஸ்மித்தின் ஆஸ்கர் சம்பவத்தைத் தொடர்ந்து அவரை வைத்து தயாரிக்கவுள்ள ’பிரைட் 2’ என்ற படத்தைக் கைவிடுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. மேலும் சில நிறுவனங்களும் அவரை வைத்து படம் எடுக்கும் முடிவை கைவிட்டுள்ளன.

ஒருபக்கம் தன்னைச் சுற்றி நிற்கும் சர்ச்சைகள், மறுபக்கம் மனைவியின் பிரிவு, எல்லாவற்றுக்கும் மேலாக ஜீவனாம்சத்துக்காக சொத்தில் பாதியை இழக்கும் நிலை என்று பல்வேறு சோதனைகளால் மன நிம்மதியை இழந்து தவிக்கும் வில் ஸ்மித், இப்போது அமைதியைத் தேடி இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

மும்பையில் உள்ள தனியார் விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய வில் ஸ்மித், அங்கு ரசிகர்களுடன் கலகலப்பாக பேசியுள்ளார். ஆஸ்கரில் அறைவிட்ட சம்பவத்துக்குப் பிறகு பொதுவெளியில் அவர் சகஜமாக தென்பட்டது இதுவே முதல் முறை.

மும்பையின் ஜுஹூவில் உள்ள மாரியட் ஓட்டலில் இப்போது தங்கியிருக்கும் வில் ஸ்மித், சத்குருவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்குருவுக்கும் வில் ஸ்மித்தை மிகவும் பிடிக்கும்.

ஆஸ்கர் ‘அறை’ சம்பவத்தைப் பற்றி சத்குருவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “வில் ஸ்மித் ஒரு நல்ல மனிதர். அதே நேரத்தில் பொது மேடையில் வைத்து ஒருவரைத் தாக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அவர் மட்டுமல்ல வேறு யாரும்கூட இதுபோன்ற செயல்களைச் செய்யக் கூடாது. ” என்று சொல்லியிருக்கிறார்.

வில் ஸ்மித் தன்னைச் சந்திக்கும்போது இதுபற்றி விளக்கமாகச் சொல்லி சத்குரு அவரை பண்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். ஆன்மிக பூமியான இந்தியா வில் ஸ்மித்துக்கு அமைதியை வழங்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...