No menu items!

தாமஸ் கோப்பை – இந்தியா சாதித்தது எப்படி?

தாமஸ் கோப்பை – இந்தியா சாதித்தது எப்படி?

1983-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பெற்ற வெற்றிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல தாமஸ் கோப்பையில் (Thomas Cup) இப்போது இந்தியா அடைந்திருக்கும் வெற்றி. பாட்மிண்டனின் உலகக் கோப்பையாக கருதப்படும் இந்தப் போட்டியில் இந்தியா முதல் முறையாக கோப்பையைத் தூக்கியிருப்பது  ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை மிக்க சாதனையாக மாறி இருக்கிறது.

தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் போட்டிகள்  1949-ம் ஆண்டுமுதல் நடைபெற்று வருகின்றன. குழு வடிவில் நடத்தப்படும் இப்போட்டியில் பாட்மிண்டனில் சிறந்து விளங்கும் நாடுகள் பங்கேற்பது வழக்கம். இந்தக் கோப்பையின் ஆரம்பக் காலக் கட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போட்டி நடத்தப்பட்டது. 1990-ம் ஆண்டிலிருந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இப்போட்டியில் கலந்துகொண்டாலும், பெரியதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.

இந்தோனேசியா, சீனா, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த விளையாட்டில் இந்திய அணி பெரும்பாலும் ஓரமாகவே நிற்கும். 1979-ம் ஆண்டில் நடந்த தாமஸ் கோப்பை போட்டிகளில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதே இதுவரை இந்தியாவின் மிகச்சிறந்த முயற்சியாக  இருந்தது.

தாமஸ் கோப்பையின் ராஜா இந்தோனேஷியாதான். இதுவரை 14 முறை கோப்பையைத் தூக்கியிருக்கிறது. பலமான இந்தோனோஷியா அணியை வீழ்த்தி இந்த முறை இந்தியா தாமஸ் கோப்பையை வென்றிருக்கிறது.

இப்போது கிடைத்திருக்கும் வெற்றிக்குப் பின்னால் பல வீரர்களின் கடுமையான தொடர் உழைப்பு உள்ளது. கோப்பையை இந்தியா வென்றதற்கு மிக முக்கியமான சில  காரணங்கள் இதோ:

கோபிசந்த் போட்ட விதை:

எந்த ஒரு சாதனைக்கும் ஒரு தொடக்கப் புள்ளி இருக்கும். அந்த வகையில் பாட்மிண்டனில் இந்தியாவின் வெற்றிகளுக்கு தொடக்கப் புள்ளி என்று 2001-ம் ஆண்டில் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் கோபிசந்த் பட்டம் வென்றதைக் கூறலாம்.

கோபிசந்துக்கு முன்பு 1980ல் பிரகாஷ் படுகோன் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றார்.

அப்போதுதான் நாட்டின் கவனம் பாட்மிண்டன் பக்கம் திரும்பியது. ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2001ல் கோபிசந்த் ஆல் இங்கிலாந்து கோப்பையை வென்றது இளைய தலைமுறையினரை பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொள்ள வைத்தது. இந்தியர்களாலும் சர்வதேச அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேர்விடத் தொடங்கியது. கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நெவால், பி.வி.சிந்து, லக்‌ஷயா சென், சாய் பிரணீத் போன்ற பல இளம் வீரர்கள் பாட்மிண்டன் களத்துக்குள் கனவுகளுடன் நுழைந்தனர்.

நாடெங்கும் பயிற்சிக் களங்கள்:

இளம் வீரர்கள் வந்தால் மட்டும் போதுமா? அவர்கள் பயிற்சி பெற களங்கள் வேண்டாமா? இங்கும் முதல் ஆளாக கைகொடுத்தவர் கோபிசந்த்தான்.

ஹைதராபாத்தில் கோபிசந்த் தொடங்கிய பாட்மிண்டன் அகாடமி, சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் என பல இளம் வீரர்களை முருவாக்கியது.

கோபிசந்த்தின் அகாடமியைத் தொடர்ந்து பிரகாஷ் படுகோனின் பிரகாஷ் படுகோன் பாட்மிண்டன் அகாடமி, ஜுவாலா கட்டாவின் குளோபல் அகாடமி ஃபார் பாட்மிண்டன், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாய் பாட்மிண்டன் டிரெயினிங் சென்டர் என பல சிறந்த பாட்மிண்டன் பயிற்சி மையங்கள் இளம் வீரர்களை பட்டை தீட்டின.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்து அதிகம் பேர் ஆடும் ஆட்டமாக பாட்மிண்டன் உருவெடுத்தது. இதிலிருந்து பல இளம் வீரர்கள் தோன்றினர். இந்த விளையாட்டுப் பயிற்சிக்கான கட்டணம் குறைவாக இருப்பதால், பல பெற்றோர் தங்கள் குழந்தைகள் பாட்மிண்டன் ஆடுவதை ஊக்குவித்தனர்.

இந்தியன் பாட்மிண்டன் லீக்:

கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல்லோ, அதுபோல் பாட்மிண்டனுக்காக இந்தியன் பாட்மிண்டன் லீக் தொடங்கப்பட்டதும்   சர்வதேச அளவிலான இந்தியாவின்  வெற்றிகளுக்கு ஒரு காரணமாகி விட்டது. பாட்மிண்டன் வீரர்களாலும் கிரிக்கெட் வீரர்களைப் போல் சம்பாதிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியதுடன், சர்வதேச வீரர்களுடன் ஆடும் வாய்ப்பையும் இந்த தொடர் இந்திய வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தொடரின் மூலம் இந்திய வீரர்கள் பல மடங்கு அனுபவத்தைப் பெற்றனர்.

குழு உணர்வால் கிடைத்த வெற்றி:

சாய்னா நெவால், பி.வி.சிந்து என்று பெண்கள் மட்டுமே ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்த விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக  லக்‌ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் போன்ற ஆண் வீரர்கள் தலையெடுக்கத் தொடங்கினர். தனிப்பட்ட அளவில் பெரிதாக வெற்றிகளைக் குவிக்காதபோதிலும், ஒரு குழுவாக இவர்கள் மிகச்சிறப்பாக ஆடிவந்தனர். பல போட்டிகளில் குழுவாகச் சென்றுவந்ததால் இவர்களிடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டது.

இவர்களுக்கிடையிலான நெருக்கமும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இந்த கோப்பையில் இந்தியா வென்றதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மிக முக்கியமாக அணியில் ஒவ்வொரு வீரரும் முக்கியம்தான் என்ற நிலையை பயிற்சியாளர் விமல் குமார் ஏற்படுத்தினார். இந்த முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோது அணியில் இருப்பதிலேயே இளம் வீரரான பிரியன்ஷு ரஜாவத்தான் கோப்பையை வாங்கினார். அணியில் சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடு இல்லாதது இதில் தெளிவாகிறது. இந்த தன்மை ஒவ்வொரு வீரருக்கும் அணியில் தானும் ஒருவர் என்ற நம்பிக்கையை அளித்தது.

 “இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெற்றிகள் இந்தியாவுக்காக காத்திருக்கின்றன” என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாட்மிண்டன் வீரரும் பயிர்சியாளருமான கோபிசந்த்.

அவர் சொன்னதைப் போல் ஒலிம்பிக் பதக்கங்கள் உட்பட மேலும் பல வெற்றிகளை இந்திய பாட்மிண்டன் வீரர்கள் குவிக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...