No menu items!

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு முதல்வர் நன்றி

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு முதல்வர் நன்றி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவியும் பங்கேற்றனர். நீட் விலக்கு உட்பட பல்வேறு மசோதாகள் தொடர்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் முதல்வரும் ஆளுநரும் ஒரே மேடையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பேசிய முதல்வர், “காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம், கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதைப் போல, எனது தலைமையிலான ஆட்சிக் காலம் உயர்கல்வித் துறையின் பொற்காலமாக மாற வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிளஸ்2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன” என்றார். மேலும், ‘‘கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால், பல்கலை.யில் கல்வி இன்னும் வளரும், அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்’’ என்றும் பொன்முடி கூறினார்.

டெல்லியில் 49 டிகிரி வெயில்: 1966-க்குப் பின் அதிகபட்ச வெப்பநிலை

டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் நேற்று (மே 15) அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹரியானாவை ஒட்டிய முங்கேஸ்பூர் பகுதியில் தான் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1966-ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லியில் இந்த அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. டெல்லியைப் போல் ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நேற்று மிகக் கடுமையான வெப்பநிலை பதிவானது. வெயில், அனல்காற்று என மக்கள் தவிப்புக்குள்ளாகினர். முன்னதாக வெப்பநிலை அதிகரிப்பதைக் கணித்து ராஜஸ்தான் மாநிலத்துக்கு சிவப்பு அலர்ட்டும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 5-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு: சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம், நாள்பட்ட சிறுநீரக நோய் பரவல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடைபெற்றது. 5,310 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 455 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் நிலை ஆரம்ப நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் இருக்கும் புரதம் வெளியேறும் தன்மை 367 பேருக்கு உள்ளது. இதுவும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான நிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 934 பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

”இந்த ஆரம்பகட்ட கணக்கெடுப்பின் மூலம் தமிழகத்தில் 5-ல் 1 நபருக்கு என்ற  அளவில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...