No menu items!

இவன் ஒரு நடிப்பு அசுரன்!!

இவன் ஒரு நடிப்பு அசுரன்!!

செளரப் சச்தேவா.

வீட்டில் இருக்கும் நொறுக்குத்தீனியை கொறித்தபடியே, ஒடிடி-யில் வெப் சிரீஸ்களையும், ஒரிஜினல்களையும் மணிக்கணக்கில் பார்க்கும் ரசிகர்களிடையே இப்பொழுது முணுமுணுக்கப்படும் பெயர் இதுவாகதான் இருக்கும்.

யார் இந்த செளரப் சச்தேவா?

துல்கர் சல்மான், ரானா டக்குபதி, வருண் தவான், அர்ஜூன் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், வாணி கபூர், ஃப்ரீடா பிண்டோ, ஹர்ஷ்வர்தன் ரானே, த்ருப்தி டிம்ரி என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடிப்பைக் கற்றுகொடுத்த ஆக்டிங் கோச்.

இன்று வெப் சிரீஸ் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கும் நட்சத்திர நடிகர்.

இவரது முகம் பலருக்கு பரீட்ச்சயமான ஒரு வித்தியாசமான முகம். ஆனால் இவரது பெயர் வேண்டுமானால் உங்களுக்கு சட்டென்று பிடிப்படாமல் இருக்கலாம்.

அசரவைக்கும் த்ரில்லராக கொண்டாடப்படும் ’Jaane Jaan’ படத்தில் கரீனா கபூரின் கணவராக நடித்திருக்கிறார். மும்பை நிழல் உலகின் டான் தாவூத் இப்ராஹிம்மின் ஆரம்ப கால வாழ்க்கையை கற்பனை கலந்து மிரட்டலாக காட்டும் ‘Bambai Meri Jaan’ வெப் சிரீஸ்ஸில் ஹாஜி கதாபாத்திரத்தில் அலட்டாமல் நடிப்பை வெளிக்காட்டியிருப்பவர்.

’ஓ… அவரா….’ என்றால் அவரேதான் இந்த செளரப் சச்தேவா.

பிரம்மாண்டமான திரையில் நம்மை வசீகரிக்கும் வகையில் ஆடிப் பாடி நடிக்கும் நட்சத்திரங்களின் நடிப்பை நாம் ரசிக்கும்படி மெருகேற்றுபவர்கள்தான் இந்த ஆக்டிங் கோச்சின் வேலை. அப்படி பல நட்சத்திரங்களின் நடிப்புத்திறமையை மேம்படுத்திய செளரப் சச்தேவா, இன்று ஒரு நட்சத்திரமாக களமிறங்கியிருக்கிறார். இவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

இந்த செளரப் சச்தேவா, ஆக்டிங் கோச் ஆக உருவாக காரணமாக இருந்தவர் பேரி ஜான். இங்கிலாந்தில் பிறந்த பேரி ஜான், செட்டிலானது ஏறக்குறைய இந்தியாவில்தான். ‘தியேட்டர் ஆக்‌ஷன் க்ரூப்’ என்ற பெயரில் மும்பையில் ஒரு நடிப்பு பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்த மையத்தில் நடிப்பு பயிற்சிக்காக வந்தவர்தான் செளரப் சச்தேவா.

சில பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்த கையோடு, அதே கல்லூரியில் வாத்தியார்களாக சேருபவர்களைப் போலவே, செளரப் சச்தேவாவும் ஆக்டிங் கோச் ஆனார். ஒரே காரணம் பேரி ஜான்.

ஷாரூக்கான், மனோஜ் பாஜ்பாய், குணால் கபூர், சமீர் சோனி, ரிச்சா சாதா, தியா மிர்ஸா இவர்களெல்லாம் பேரி ஜானின் மையத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள்தான். இங்கேதான் செளரப் சச்தேவாவின் சினிமா வாழ்க்கைக்கான அச்சாரம் விழுந்தது.

’நடிப்பா… நமக்கு செட்டாகாது…’ என்று ஒதுங்கி இருந்த செளரப்பிற்கு அதே நடிப்புதான் பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் பள்ளி சிறுவர்களுக்கு சிறுமிகளுக்கு நடிப்புப் பயிற்சி கொடுக்கவேண்டுமென செளரப் சச்தேவாவிடம் சொன்ன போது பதறிப்போனார் செளரப் சச்தேவா.

‘எனக்கு பயமா இருந்துச்சு. கத்துக்கொடுக்குறது ஒரு பொறுப்புள்ள வேலை. அதுமட்டுமில்லாம நான் பள்ளிக்கூடத்துல படிக்கும் போது என்னோட டீச்சர்களை நான் மதிச்சதே இல்ல. நான் மதிச்ச ஒரே ஆள் பேரி சார்தான். ஒரே காரணம் அவர் என்னை நடத்துன விதம். அவர் இல்லைன்னா, டீச்சர்கள் பாடம்தான் கத்துக்கொடுக்காங்க. எனக்கு கத்து கொடுக்கலங்கிற எண்ணம் எனக்குள்ள இருந்துச்சு.’ என்று தனது மனதில் இருந்ததை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் செளரப்.

’ஒரு கட்டத்துல நான் நடிப்பை கத்துகொடுக்க ஆரம்பிச்சேன். அன்றையிலிருந்து நடிப்பு எனக்குப் பிடிச்சு போச்சு. இப்போ 22 வருஷம் ஆகிடுச்சு. இன்னும் நடிப்புப் பயிற்சி கொடுத்துகிட்டுதான் இருக்கேன்.’’ என்கிறார்.

செளரப் சச்தேவாவிற்கு சிறுவயதில் டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருந்திருக்கிறது. இதனால் படிப்பதில் இவ்வளவு எல்லாமுமே பிரச்சினைதான். வார்த்தைகள் உடனே வெளிவராது. சொல்வது சரியாக இருக்காது. இதனால் சின்ன வயதில் இவருக்கு தன்னைப் பற்றி சொல்வது கூட பெரும்பாடாகி இருக்கிறது. இதனால் இவருக்கு மனதிற்குள் ஒரு பயம். தன்னால் மற்றவர்களைப் போல் இயல்பாக இருக்க முடியாதோ என்ற வெட்கம். வேதனை.

‘’உண்மையைச் சொல்லணும்னா, யாரையாவது நேருக்கு நேர் பார்த்து பேச தைரியம் இருந்தது இல்ல. ஒரு பத்திரிகையாளரோ அல்லது விமர்சகரோ ஏதாவது ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு நான் எப்படி பதில் சொல்றது, அவங்களை எப்படி எதிர்கொள்றதுன்னு தயக்கம் இருக்கும். இதெல்லாம் என்னோட சின்ன வயசுல இருந்து வந்தது. சொல்ல நினைக்கிறதை உணர்வுப்பூர்வமா சொல்ற குழந்தையாக நான் இருந்தது இல்ல. என்னைப் பத்தி எனக்குள்ளேயே ஒரு போராட்டம் இருக்கும்,. என் மேலேயே எனக்கு பெரிய நம்பிக்கை இருந்ததும் இல்ல. என்னோட பள்ளிக்கூட வாழ்க்கை சொல்லிக்கிற மாதிரி அமையல். படிப்பிலயும் நாம் ரொம்ப சுமார்தான். டிஸ்லெக்ஸியா சின்ன வயசுல இருந்தே வந்தது.

2016 வரை யாரையாவது எதிர்கொள்ளணும்னா எனக்கு பயம்தான். அப்புறம் சில கோர்ஸ் படிச்சேன். அப்புறம்தான் அதுல இருந்து வெளியே வந்தேன். தொடர்ந்து என் வேலையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமும் மாற ஆரம்பிச்சது. நேர்மையா இருந்ததுதான் என்னோட முயற்சிகளோட முதல் படி. என்னோட மாணவர்கள்கிட்ட, இப்ப நீங்க கோடுக்கு மேலே நிக்குறீங்க. நீச்சல் குளத்துல நீங்க குதிக்கிறதுக்கு முன்னாடி, உங்களுக்கு போதுமான பயிற்சி ரொம்ப அவசியம்னு சொல்வேன்.

உதாரணத்துக்கு, வரிக்குதிரைகள் உடம்பு மேல கருப்பு வெள்ளை கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் எல்லாம் கேம்ஃப்ளாஜ் பண்றதுக்காகதான். எல்லா வரிக்குதிரைகளும் கூட்டமா ஒண்ணா நின்னா, வேட்டையாட வர்ற சிங்கத்துக்கு குழப்பமாக இருக்கும். எதை வேட்டையாடுறதுன்னு புரியாது. மனுஷங்களும் அப்படிதான். நாமளும் ஒண்ணா சேர்ந்து நகரத்துல வசிக்கும்போது கேமஃப்ளாஜ் பண்றோம். நீங்க அந்த கூட்டத்தை விட்டு வெளியே வரணும்னு நினைச்சா, சிங்கம் உங்களை வேட்டையாடும் அபாயம் இருக்கும். ஆனால் அதைத் தாண்டி நீங்க வந்துட்டா, உங்களோட கற்பனைத்திறன், விரியும், புதுசா கத்துக்கொடுக்கும். ஆனால் என்னால இதைவிட்டு வெளியே வரமுடியல. இதுதான் என் வாழ்க்கைன்னு வாழ்ந்தேன். இவங்கதான் என்னோட மக்கள்னு நினைச்சேன். ஆனால் நாம் எல்லோரும் சொல்லிக்கிற மாதிரி ஒரு இடத்துல இருக்கணும்னா, இந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தாகணும். வெளியே வந்தா நான் வேட்டையாடப்படலாம். ஆனால் இதுதான் வாழ்க்கை’’ என்கிறார் செளரப் சச்தேவா

ஆக்டிங் கோச் ஆக இருந்து ஆக்டராக மாறியிருக்கும் செளரப்பிற்கு இப்போது ஒரு புது சவால். அது ஒடிடி. வழக்கமான சினிமா, தொலைக்காட்சி தொடர்களை இப்போது ஓவர்டேக் செய்து கொண்டிருக்கும் ஒடிடி. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் மீதான மக்களின் பார்வை முறையையும், கால அளவையும் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போல் விறுவிறுப்பாக்கி இருக்கிறது.

இந்த விஷயத்தில் 90-களின் ரசிகர்கள் ரசித்த நடிப்பு எடுப்படுவதில்லை என்பதை புரிந்து கொண்டிருக்கும் செளரப் சச்தேவா, நடிப்பு முறையையும் மாற்றியிருக்கிறார். ‘’இப்பெல்லாம் யாரும் ரெண்டு மணி நேரம் படம் பார்க்க தயாரா இல்ல. உட்கார்ந்தா சட்புட்னு பார்த்துடணும். வேகமாக இருக்கணும். இல்லைன்னா அடுத்த நொடியே ஸ்கிரீனை ஆஃப் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பாங்க. அதனால நடிகர்களும் அதுக்கேத்த மாதிரி நடிக்க வேண்டியிருக்கு. அப்பதான் ஆடியன்ஸை தக்க வைக்க முடியுது. அதனால் இன்னிக்குள்ள ட்ரெண்ட்டுக்கு ஏத்த மாதிரி நடிப்பு சொல்லிக் கொடுக்குற முறையை மாத்தியிருக்கேன்’’ என்கிற செளரப் சச்தேவா தான் சொந்தமாக நடத்தி வரும் நடிப்புப் பயிற்சி பள்ளிக்கு The Actors Truth என்று பெயர் வைத்திருக்கிறார்.

ஒரு வழியாக தனக்குள் இருந்த பிரச்சினைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவிட்டு, தனது சினிமா பயணத்தில், விருட்டென்று ஹைவேஸ்சில் செல்ல ஆரம்பித்திருக்கும் செளரப் சச்தேவா, ‘’ஆக்டிங் கோச்சிங் எனக்கு மரியாதையைக் கொடுக்குது. சந்தோஷத்தை தருது. ஆக்டிங் நான் எதிர்பார்த்திராத பவரை கொடுக்குது. அதனால இந்த ரெண்டுமே எனக்கு முக்கியம்தான். ஆனா நான் எதையாவது ஒன்றைதான் தேர்ந்தெடுக்கணும்னா, நான் கொஞ்சம் கூட யோசிக்காம ஆக்டிங் கோச் ஆக இருக்குறதைதான் தேர்ந்தெடுப்பேன்.’’ என்கிறார் தீர்மானமாக.

’The Actors Truth’ என்று தன்னுடைய நடிப்புப் பயிற்சி பள்ளிக்கு பெயர் வைத்ததற்கான காரணம் என்ன என்பது இப்பொழுது புரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...