No menu items!

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் – உண்மையும் உண்மை மறைப்பும்

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் – உண்மையும் உண்மை மறைப்பும்

மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. திறந்து வைப்பவர் பிரதமர் மோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடளுமன்றக் கட்டிடத்துக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. தொடங்கி வைத்தது பிரதமர் மோடி.

அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. இத்தனை பிரமாண்டமான இந்தியாவுக்கு முக்கியமான கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று. ஆனால் எதிர்குரல்கள் கவனிக்கப்படவில்லை. மீண்டும் இப்போது எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்பது எதிர்க் கட்சிகளின் கோரிக்கை.

பாஜக கணக்குப் போட்டுதான் வியூகம் அமைக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வசதியாக நாடாளுமன்றக் கட்டிடத்தை அதற்கு முன் திறக்க வேண்டும் என்பது அதன் இலக்கு. அதனால் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த சூழலிலும் 2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இருக்கிறது.

அடிக்கல் நாட்டும்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தார். அவர் தலித் சமூகத்தை சார்ந்தவர். இந்தியாவின் முதல் குடிமகன். அவர்தான் நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்பது அப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடிதான் அடிக்கல் நாட்டினார். அந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் வரவில்லை. அவர்களது உரைகள் வாசிக்கப்பட்டன. எதிர்க் கட்சிகளும் விழாவை புறக்கணித்தன.

இப்போது மீண்டும் அதே சர்ச்சை. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என பல எதிர்க் கட்சிகள் புதிய நாடளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மொத்தமாக 19 எதிர்க் கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

இந்த சர்ச்சைகளில் சாதிய அரசியலும் பேசப்படுகிறது. அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தை சார்ந்தவர். இன்றைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பழங்குடி சமூகத்தை சார்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களை மத்திய பாஜக அரசு அவமதிக்கிறது என்ற குரல்களும் எழுந்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறக்கும் தினமும் சர்ச்சையாகிருக்கிறது. இந்துத்வ கருத்தாளரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்த தினம் மே 28. அன்றுதான் நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் குருதான் சாவர்க்கர். இவரது பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறப்பதா என்ற கேள்வியை எழுப்புகின்றன எதிர்க் கட்சிகள். ஆனால் இந்த விமர்சனத்துக்கு பாஜக தரப்பிலிருந்து பதில் இல்லை.

இந்த சர்ச்சைகளில் மிக முக்கியமாக இருப்பது, நாடாளுமன்றக் கட்டிடத்தை யார் திறப்பது என்பதுதான்.
அரசமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்ற ஜனநாயக்த்தில் மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பதிவில், ’இந்திய அரசியலமைப்பு பிரிவு 79 படி ஒரு ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் கட்டாயம் இருக்க வேண்டும், அது குடியரசுத்தலைவரையும், இரண்டு அவைகளையும் கொண்டிருக்க வேண்டும். அவை முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று அறியப்படும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை பாஜக மறுக்கிறது. நாடாளுமன்றக் கட்டிடங்களை பிரதமர் திறந்து வைத்ததற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள் அவர்கள்.

1975ல் நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். 1987ல் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார் என்று பழைய சம்பவங்களை இப்போது சுட்டிக் காட்டுகிறார்கள்.

புத்தம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கும் அது தொடர்பான சில கட்டிடங்களை திறந்து வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது எதிர்க் கட்சிகளின் பதில்.

அது மட்டுமல்ல, பாஜகவினர் கொடுக்கும் உதாரணங்களில் உண்மையும் இருக்கிறது உண்மை மறைப்பும் இருக்கிறது.

1975ல் நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தை திறந்து வைத்தது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டியவர் அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. 1970 ஆகஸ்ட் 3ல் கட்டிடம் கட்ட ஆரம்பித்து அக்டோபர் 24, 1975ல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் நாடாளுமன்ற நூலக புதிய கட்டிடத்துக்கு ஆகஸ்ட் 15 1987ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டினார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2002 மே 7 ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாரயணன் திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை நீட்டித்து மற்றொரு இணைப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்துக்கு 2009ல் அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஹமித் அன்சாரி அடிக்கல் நாட்டினார். 2017ல் பிரதமர் நரேந்திர மோடி அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இப்படி நாடாளுமன்றம் தொடர்பான அனைத்து கட்டிடங்களிலுமே குடியரசுத் தலைவரும் பிரதமரும் இணைந்து செயல்பட்ட முன் உதாரணங்களைதான் நாடாளுமன்ற சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

ஆனால் முதல் முறையாக அடிக்கல் நாட்டியதும் திறந்து வைப்பதும் பிரதமரே என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நிகழ்வுகளிலும் குடியரசுத் தலைவர் தள்ளி நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுதான் பாஜகவின் புதிய இந்தியா.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...