No menu items!

கவர்னரை மறுக்கும் தமிழ்நாடு போலீஸ் – மிஸ் ரகசியா

கவர்னரை மறுக்கும் தமிழ்நாடு போலீஸ் – மிஸ் ரகசியா

“குண்டர் தடுப்பு சட்டத்துல உள்ள போடாம இருக்க மாட்டாங்க போல” என்றபடி ஆபீசுக்குள் வந்தாள் ரகசியா.

“யாரைச் சொல்றே?”

”அமர் பிரசாத் ரெட்டியைத்தான் சொல்றேன். பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற வந்த போலீசுக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி மேல போலீஸார் தொடர்ந்து வழக்குகளை போடுட்டு வர்றாங்க.”

“வழக்கு போடுறாங்கனு சொல்ற ஆனா அவருக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்துருக்கே”

“ஆமா. அது செஸ் ஒலிம்பியாட் நடந்துச்சுல..அதுல தமிழக அரசு ஒட்டுன போஸ்டர்ல மோடி படத்தை ஓட்டுனார்னு ஒரு வழக்கு. அதுல நிபந்தனை ஜாமீன் கொடுத்துருக்காங்க. ஆனா வள்ளுவர்கோட்டம் பக்கத்துல நடந்த பாஜக போராட்டத்துல காவல்துறை அதிகாரிகளுடன் தகராறு செஞ்சார்னு இன்னொரு வழக்கு இருக்கு. அதுல அமர் பிரசாத் ரெட்டிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் கொடுத்துருக்காங்க.”

“அப்போ குண்டாஸ் போட்டுருவாங்களா?”

“அதுக்குதான் முயற்சி நடக்குதுனு பேச்சு. ஆனா, வழக்கு மேல வழக்கு போட்டு அவரை உள்ளேயே கொஞ்ச நாள் வச்சிருங்கனு உத்தரவு வந்துருக்காம். எப்படி பார்த்தாலும் இந்த வருஷ தீபாவளி அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜெயில்லதான்னு சொல்றாங்க”

“பாவம். பாஜகவுல என்ன சொல்றாங்க?”

“அமர் பிரசாத் ரெட்டிக்கு பெரிய ஆதரவு இல்லை. அண்ணாமலையை மட்டுமே அவர் மதிச்சதுனால மத்த தலைவர்களுக்கு ரெட்டி மேல கோவம் இருக்கு”

“அண்ணாமலையும் ஒண்ணும் பண்ணலையே?”

“அவரால என்ன பண்ண முடியும். என் கூட இருந்தா இதெல்லாம் வரும் தாங்கிக்கணும் கூட இருக்கிறவங்ககிட்ட சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாம தமிழ்நாடு காவல் துறையில் சில உயரதிகாரிகள் கிட்ட பேசுனதாகவும் தகவல் வருது. ஆனா அவங்க யாரும் அமருக்கு உதவ முன் வரலையாம்”

“ஆமா, போலீஸ்தான் ஆளுநருக்கு எதிராகவே பிரஸ் மீட் வைக்கும்போது அண்ணாமலைக்கு ஆதரவா எப்படி வருவாங்க”

“கரெக்ட். போலீஸ் அதிகாரிகளுக்கு பாஜக மீது முதல்வர் கடுமையான கோவத்துல இருக்கிறார்னு தெரிஞ்சுருக்கு. ஆளுநர் மாளிகை கிட்ட பெட்ரோல் குண்டு வீசுன விவகாரத்துல கவர்னர் மாளிகை சொன்ன குற்றச்சாட்டுக்களை மறுத்து பிரஸ் மீட் வைக்க சொன்னதே முதல்வதான். இதுக்கு முன்னாடி கவர்னருக்கு எதிரா அதிகாரிகள் பிரஸ் மீட் வச்சதில்லை. சில அதிகாரிகள் பிரஸ் மீட் வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. ஆனால் முதல்வர் அதை ஏத்துக்கல. முதல்ல கவர்னரை நேர்ல சந்திச்சு விளக்கம் கொடுங்கனு கமிஷனர்கிட்ட சொல்லியிருக்கிறார். அதுக்கடுத்துதான் இந்த பிரஸ் மீட்”

”இந்த கவர்னரை மாத்திடாதிங்க. இவர்தான் எங்களுக்கு வசதினு கிண்டலா வேற சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். பெட்ரோல் குண்டு விஷயத்துல கவர்னர் மாளிகை சொல்றது தப்புனு முதல்வருக்கு தெரியும். அதனாலதான் உற்சாகமா அப்படி சொல்லியிருக்கிறார். மக்கள் கிட்ட அதை சொன்னா தன்னைதான் நம்புவாங்கனும் அவருக்குத் தெரியும். கவர்னரோட செயல்களை மக்கள் கிட்ட கொண்டு போய் சேருங்கனு சொல்லியிருக்கிறார். இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் சொல்லணும்”

“என்னது?”

“இப்பதான் நாலஞ்சு நாள் முன்னாடி திமுக ஐடி விங் கூட்டத்துல அவங்களை போர்வாள் ஃபயர் வால்னுலாம் புகழ்ந்தார். ஆனால் அவர் புகழ்ந்த நேரத்துலதான் ஸ்டாலினை கொச்சையா விமர்சித்து எதிர்தரப்பினர் போட்ட விஷயம் ட்ரெண்டானது. இதை சின்னவர் பார்த்துட்டு டென்ஷனாகியிருக்கிறார். இப்பதான் தலைவர் நம்மையெல்லாம் புகழ்ந்தார். ஆனா நம்முடைய எதிர்தரப்பு செய்யறது ட்ரெண்ட் ஆகுதுனு கோபப்பட்டிருக்கிறார். கவர்னர் மேட்டரை அப்படி விட்டுர கூடாது..வச்சு செய்யணும்னு சொல்லியிருக்கிறார்னும் ஒரு நியூஸ் வருது”

”திமுக தலைவர்களும் அவருக்கு அட்வைஸ் பண்ணுவாங்களே? அவங்க கருத்து என்ன?”

”அவங்களும் சில யோசனைகள் சொல்லியிருக்காங்க. ஆலோசனை முடிவுல எந்த மூத்த தலைவரும் இது பத்தி கருத்து சொல்ல வேண்டாம். சட்ட அமைச்சர் ரகுபதி மட்டும் இந்த பிரச்சினையில் பதில் சொன்னால் போதும்னு சொல்லி இருக்காராம் முதல்வர். அதனாலதான் அமைச்சர் ரகுபதிக்கிட்டருந்து மட்டும் ஆளுநர் மாளிகைக்கு பதில் வந்தது.”

“முதல்வர் நம்மளை முன்னிலைப்படுத்துறார்னதும் ரகுபதி குஷியாயிருப்பாரே?”

“இந்த சம்பவம் நடந்தப்ப அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இருந்திருக்கார். அங்கருந்தே டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், அடையார் காவல் துணை ஆணையர்னு எல்லார்கிட்டயும் பேசி விவரங்களை சேகரிச்சு இருக்கார். அவங்க எல்லாரும், ‘பெட்ரோல் குண்டு வெடிகுண்டு ராஜ் பவனுக்குள்ளேயே வீசப்படலை. ரோட்லதான் வீசுனாங்க. அது வெடிக்கல. வீசுனவனை உடனே கைது செஞ்சிட்டோம்’னு சொல்லி இருக்காங்க. இதைத்தொடர்ந்துதான் அமைச்சர் ரகுபதி, ‘இது திமுகவை சிக்க வைக்க நடக்கும் சதி. ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படறார்’னு சொல்லி இருக்கார்”

“கவர்னரை போலீஸ் கமிஷனர் சந்திச்சு விளக்கம் கொடுத்ததா நியூஸ் வந்துச்சே…கவர்னர் என்ன கேட்டாராம்?”

“சென்னை கமிஷனருக்கு ஆளுநர் மாளிகை எழுதின புகார் கடிதத்தில் ஆளுநர் தனது அரசியல் சாசன கடமையை செய்யவிடாமல் அவரை அச்சுறுத்துவதற்கான முயற்சி இதுன்னு பெட்ரோல் குண்டு சம்பவத்தை பத்தி கடிதத்தில் சொல்லியிருந்தாங்க. ‘அப்படி எதுவும் இல்லை. கருக்கா வினோத் எந்த அமைப்பிலும் கட்சியிலும் இல்லை. அவருக்குன்னு எந்த அரசியல் பின்னணியும் இல்லை’ன்னு நேருக்கு நேர் மறுத்திருக்கார் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்.”

“அவரோட விளக்கத்தை ஆளுநர் ஏத்துக்கிட்டாரா?”

“ஏத்துக்கிட்டாரா தெரியலை. ஆனா யார் அந்த கருக்கா வினோத்? அவருக்கு ஜாமீன் கிடைச்சது எப்படின்னு கேட்டிருக்கார். அதுக்கு காவல் ஆணையர் கருக்கா வினோத்துக்கு நீதிமன்றம்தான் ஜாமீன் கொடுத்தது. எங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு பட்டும் படாமலும் சொல்லியிருக்கார்.”

“பாஜக வழக்கறிஞர்தான் கருக்காவுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்திருக்கார்னு திமுக குற்றம்சாட்டி இருக்கே?”

“அதை பாஜக மறுத்திருக்கு. அவர் இப்போ பாஜக உறுப்பினர் இல்லைனு சொல்றாங்க. திமுக புள்ளிகள்தான் கருக்கா ஜாமீன் வாங்க உதவினதா சொல்றாங்க ஒரே குழப்பமா இருக்கு.”

“சரி, ரஜினி வீட்டு கொலு விழாவுல ஓ.பன்னீர்செல்வம் கலந்துகிட்டு இருக்காரே?”

“அரசியல் வேண்டாம்னு ரஜினிகாந்த் ஒதுங்கினாலும், அவரோட மனைவி லதாவுக்கு அந்த ஆசை இன்னும் இருக்கு. அதனாலதான் தன் வீட்டு கொலுவுக்கு பல தலைவர்களையும் கூப்டிருக்கார். துர்கா ஸ்டாலின், நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா சந்திரசேகர், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஓபிஎஸ்னு பலருக்கு அழைப்பு போயிருக்கு அவங்களும் வந்திருக்காங்க. ஏற்கனவே போன மாசம் ரஜினிகாந்தை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு லதாதான் உதவி இருந்தார். அதனால லதா கூப்டதும் ஓபிஎஸ் தட்டாம வந்திருக்கார்.”

”அங்க அரசியல் பேசுனாங்களா?”

“பேசலனாலும் ஓபிஎஸ்க்கு ரஜினி ஆதரவு மாதிரியான தோற்றம் வருதுல அது போதும் ஓபிஎஸ்க்கு”

“எடப்பாடியைக் கூப்பிடலையா”

“விசாரிச்சேன். அவருக்கும் அழைப்பு போயிருக்கு. ஆனால் அவர் நாசூக்காய் மறுத்து ரஜினி வீட்டுக்கு வரவில்லை. எடப்பாடி இப்ப ரொம்ப தெளிவாகிட்டார். ரஜினி வீட்டுக்குப் போனால் பல பிரபலங்கள் வருவாங்க, அதுவும் பாஜகவுக்கு ஆதரவான ஆட்கள் அதிகம் இருப்பாங்க. அதனால தவிர்த்துட்டார்னு நியூஸ் வருது”

“உஷாராதான் இருக்கார்”

“உஷாரா இருக்கிறதுனாலதான் புரட்சித் தமிழர் எடப்பாடியாரா மாறியிருக்கிறார்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...