No menu items!

செந்தில் பாலாஜி அரெஸ்ட் – கோபத்தில் அமித்ஷா! – மிஸ் ரகசியா

செந்தில் பாலாஜி அரெஸ்ட் – கோபத்தில் அமித்ஷா! – மிஸ் ரகசியா

“உடம்பு கொஞ்சம் சரியில்லை. டாக்டர்கிட்ட போறேன். 2 மணிநேரம் லேட்டாதான் ஆபீசுக்கு வருவேன்” என்று காலையிலேயே மெசேஜ் ஆனுப்பியிருந்தாள் ரகசியா.

சொன்னபடி 12 மணிக்கு வந்த ரகசியாவுக்கு முதலில் இஞ்சி டீ கொடுத்தோம்.

“அரசியல்வாதிகளுக்குதான் ரெய்ட் பயத்தால் உடம்புக்கு ஏதாவது வந்துடுது. உனக்கு என்ன?”

“செந்தில்பாலாஜி விவகாரத்தால 2 நாளா ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, காவேரி மருத்துவமனைன்னு சுத்திட்டு இருந்தேன்ல. அதான் ஏதோ வைரஸ் தாக்கிடுச்சு. டாக்டர்கிட்ட போயிட்டு வர்றேன்.”

“நீ மட்டுமா அரசு ஆஸ்பத்திரியில இருந்தே… மொத்த அமைச்சரவையும் அங்கதானே இருந்துச்சு.”

“ஆமா. மருத்துவமனையா? கோட்டையான்னே சந்தேகமா இருந்துச்சு. பாதுகாப்பு காரணங்களால மருத்துவமனையில சாதாரண மக்கள் ரொம்ப பாதிக்கப்பட்டாங்க. ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் தலைவர்கள்னு அவங்க ரொம்பவே சிரமப்பட்டாங்க. இப்ப காவேரி ஆஸ்பத்திரிக்கு அவரை மாத்தின பிறகுதான் அங்க நிலைமை சீராச்சு.”

“முதல்வர், உதயநிதி, சபரீசன்னு எல்லாரும் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாங்களே?”

“செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சரா இருந்தப்ப வாங்கின பணத்தைப் பத்தி மட்டும் விசாரிக்கலைங்கிற தகவல் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. செந்தில்பாலாஜியை வச்சு முதல்வர் குடும்பத்தை ரவுண்ட் கட்டறதுதான் அமலாக்கத் துறையோட திட்டம்னு அவங்க தெரிஞ்சு வச்சிருக்காங்க. அதனாலதான் அவங்க மருத்துவமனைக்கு போய் செந்தில்பாலாஜியை சந்திச்சிருக்காங்க. முதல்வரும் செந்தில் பாலாஜியோட மனைவியை சந்திச்சு பேசி இருக்கார்.”

“இந்த விஷயத்தை மத்த ஆமைச்சர்கள் எப்படி பார்க்கறாங்க?”

“செந்தில் பாலாஜி விஷயத்தில் முதலமைச்சரோட இந்த தீவிரத்தை மூத்த அமைச்சர்கள் அவ்வளவா ரசிக்கல. பல கட்சி மாறி வந்தவருக்காக எதுக்கு இவ்வளவு போராட்டம்னு அவங்களுக்குள்ள பேசிக்கறாங்க. அதோட, ‘தேவையில்லாம அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலதான் இப்ப இவ்ளோ பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கு. அவரால ஆட்சிக்கும் கெட்ட பெயர். அவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கட்சி மாறாம இங்கேயே இருக்கிற மூத்த அமைச்சர்களுக்கு கொடுத்திருக்கலாம்’னும் புலம்பறாங்க. சமூக வலைதளத்துல முதல்வர் வெளியிட்ட வீடியோவையும் அவங்க ரசிக்கல.”

“செந்தில் பாலாஜி கைதால இரண்டு அமைச்சர்களுக்கு புது இலாகாக்கள் கிடைச்சிருக்கே?”

“ஆமாம் தன் கிட்டருந்த தொழில் துறையை மாத்தி கொடுத்ததுல தங்கம் தென்னரசு வருத்தத்துல இருந்தார். அதே மாத்ரி சிஎம்டிஏவை சேகர் பாபுக்கு கொடுத்ததுல முத்துசாமி சோகமா இருந்தார் இப்ப ரெண்டு பேரையும் கூல் பண்ணியாச்சு. செந்தில்பாலாஜி பதவிக்கு ஆபத்து நெருங்குதுங்கிற பேச்சு வந்தப்பவே மின்சாரத் துறை தங்கம் தென்னரசுக்கு கிடைக்கும்னு சொல்லிட்டுதான் இருந்தாங்க. ஆனா மதுவிலக்குத் துறைதான் யாருக்குன்னு ஒரு குழப்பம் இருந்தது. கடைசியில வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கிடைச்சது. இந்த ரெண்டு பேருக்குமே தங்களுக்கு சரியான துறை இல்லைன்ற வருத்தம் இருந்தது. இப்ப து தீர்ந்ததது”

“அமைச்சரவை மாற்றம் விஷயத்துலயும் ஆளுநர் முரண்டு பிடிச்சிருக்காரே?”

“செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கணும்னு ஆளுநர் ஏற்கனவே முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கார். ஆனா அப்படியெல்லாம் செய்ய முடியாதுன்னு முதல்வரும் அதுக்கு உடனே பதில் அனுப்பி இருந்தார். இப்ப முதல்வர் கொடுத்த பரிந்துரைப்படி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சரா தொடர்வார். இது தொடர்பான கடிதத்துல செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லைன்னு மட்டும் குறிப்பிட்டு இருந்துச்சு. அவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அந்தக் கடிதத்தில் குறிப்பிடல. இதைத்தான் ஆளுநர் misleading and incorrect-னு குறிப்பிட்டு திருப்பி அனுப்பி இருக்கார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு, இலகா மாற்றம் என்பது முதல்வர் முடிவு இதில் ஆளுநருக்கு தலையிட உரிமை இல்லை-ன்னு பதில் அனுப்பி இருக்கு. ஆனால் ஆளுநரை பொறுத்தவரை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கார்னு சேர்த்தால்தான் இலகா மாற்றத்துக்கு ஒப்புதல் தருவேன்னு உறுதியா இருக்கார்.”

”கொலை குற்ற வழக்கு இருக்கும் அமித்ஷாவை தன்னோட அமைச்சரவைல மோடி சேர்த்துக்கலையானுன் ஆர்.எஸ்.பாரதி கேக்குறாரே?”

“இது மாதிரி உதாரணங்கள் இருக்கு. எல்லோருக்கும் தெரியுது இது அரசியல் பழிவாங்கல்னு. அவசரப்பட்டுட்டோமோனு மத்திய அரசு யோசிக்குதுனு டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. அமலாக்கத் துறை தலைமையை அமித்ஷா கோபித்துக் கொண்டதாகவும் நியூஸ் இருக்கு”

“ இருக்காத பின்ன. செந்தில் பாலாஜி விஷயத்தால தேசிய அளவுல எதிர்க்கட்சிகள் திரும்பவும் ஒண்ணாகி இருக்கே. மம்தா பானர்ஜில ஆரம்பிச்சு காங்கிரஸ் வரை எல்லாரும் எதிர்த்து குரல் கொடுக்கறாங்களே?”

“அதனாலதான் அமலாக்கத் துறை மேல அமித் ஷா கடும் அதிருப்தியில் இருக்காராம். முறையா நோட்டீஸ் கொடுத்து அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வரச் சொல்லி இரண்டு மணி நேரம் விசாரணைங்கிற பேர்ல உட்கார வச்சுட்டு அதுக்குப் பிறகு செந்தில் பாலாஜியை கைது செஞ்சிருக்கலாம். அப்படி செஞ்சிருந்தா இந்த நெஞ்சு வலி டிராமா எல்லாம் நடந்திருக்காது. செந்தில் பாலாஜி விஷயத்துல அமலாக்கத் துறை சொதப்பிடுச்சு. அதனாலதான் இது தேசிய அளவிலான பிரச்சினை ஆயிடுச்சுன்னு அமித் ஷா ஃபீல் பண்றாராம்.”

“இன்னொரு விஷயமும் அவரை டென்ஷன் ஆக்கினதா கேள்விப்பட்டேனே?”

“சரியா மோப்பம் பிடிச்சிருக்கீங்க. அண்ணாமலையோட ஜெயலலிதா பத்தின ஆங்கில பத்திரிக்கை பேட்டியை அவர் ரசிக்கலையாம். அவர் மட்டுமில்ல… மேலிடத்துல இருக்கிற பல தலைவர்கள் அதை ரசிக்கலை. அண்ணாமலையோட பேட்டி இப்படி மாநிலத் தலைவர் மீது தோழமைக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு ஒரு நிலையை ஏற்படுத்தும்னு அவங்க எதிர்பார்க்கலை. இதைத்தொடர்ந்து அதிமுக தலைவர்கள் கிட்ட பேசி சமாதானம் செய்யச்சொல்லி தமிழக மாநில பொறுப்பாளர் சிடி ரவிக்கு நட்டா உத்தரவு போட்டிருக்கார். அவர் விரைவில் அதிமுக அலுவலகத்துக்கு வந்து அதிமுக நிர்வாகிகளை சந்திப்பார்னு சொல்றாங்க.”

”சமாதான தூதா? அதிமுகவினர் ஏத்துப்பாங்களா?”

”வேற வழி என்ன இருக்கு அவங்களுக்கு. அரசியல் இல்லாம ஒரு நியூஸ் சொல்றேன். காஞ்சி மடத்துல அடுத்த வாரிசைத் தேடிக்கிட்டு இருக்காங்க. விஜேயேந்திரருக்கு அடுத்து இளைய சங்கராச்சாரியாரா யாரை கொண்டு வருவதுன்ற விவாதங்கள் மடத்துல ஓடிக்கிட்டு இருக்காம். ரொம்ப சீக்கிரம் வாரிசு அறிவிக்கப்படுவார்”

“இவ்வளவு நாள் ஏன் செய்யலை? இளைய மடாதிபதியை தேர்வு செய்திருக்கணும் இல்லையா?”

“ஆமாம். ஆனால் அதற்கு காலக் கெடு எதுவும் இல்லை. இப்பதான் அந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...