No menu items!

கொஞ்சம் கேளுங்கள்… செந்தில் பாலாஜியும் கவுண்டமணி எதிர்க்கட்சியினரும்!

கொஞ்சம் கேளுங்கள்… செந்தில் பாலாஜியும் கவுண்டமணி எதிர்க்கட்சியினரும்!

செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்ததையும் அவர் கைது செய்யப்பட்டதையும் ஓட்டு போடும் மக்கள் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த அமைச்சர் சம்பந்தப்பட்ட இடங்கள், வீடுகள், அவரது கிராமங்களுக்கு எல்லாம் போய் தேடுதல் வேட்டைகள் நாட்கணக்கில் நடத்தப்பட்டதை கண்டு ரெய்டு கோஷ்டியினருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்குமா என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர்!

இதற்கு முன் டிடிவி தினகரன் விஷயத்தில் இப்படி பலமுறை ரெய்டுகள் நடந்தன. அவர் பண்ணை வீட்டில் சுரங்கங்களில் பதுக்கல் இருப்பதாக எல்லாம் செய்திகள். தினகரன் மீதுதான் எத்தனை விதமான வழக்குகள். புன்னகை மன்னனாகத்தான் இப்போதும் காட்சி தருகிறார்.

“டிடிவி தினகரனும், திருமதி சசிகலாவும் ‘ரெய்டுகளை சமாளிப்பது எப்படி என்று இன்றைய அரசியல்வாதிகளுக்கு வகுப்பே நடத்தலாம்’ என்று சிரித்தார் ஒரு அரசியல் நிருபர். அல்லது அரசியல்வாதிகள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்” என்றார்.

“செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை அதிமுக தலைவர்கள் ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். திரைப்படங்களில் செந்திலை கவுண்டமணி உதைத்து மகிழ்வதைப்போல! ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர்’எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தமா’ என்கிறார் கவுண்டமணி குரலில் ஆக்ரோஷமாக” – அதே நிருபர் கூறினார். “எடப்பாடியார் ஒரு படி மேலே போய் அமலாக்கத்துறையினர் ஆவணம் கேட்டால் கொடுத்துவிட வேண்டியதுதானே. எப்படி அவர்களை தாக்கலாம் என்றார். அதிமுக அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையிட்டபோது ஆதரவாளர்களை நூற்றுக்கணக்கில் திரட்டி அதிகாரிகளுக்கு பயமுறுத்தல் விடுத்து வழிகாட்டியவர்கள் இவர்கள்தான். கூட்டிய ஆதரவாளர்களுக்கு பந்தல் போட்டு பிரியாணி விருந்து கொடுத்து நாள் முழுக்க காத்திருக்க செய்தார்கள்” என்றார் நிருபர்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டுதானே இருக்கிறது! தலைதூக்கி உத்திரத்தை பார்த்து கொண்டுதான் பேசுகிறார்கள். டெல்லியில் உள்ள பிஜேபி ஆட்சி காப்பாற்றும். வடக்கு அவர்களை வாழவைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

“‘வேணும் கட்டைக்கு வேணும் வெங்கலக் கட்டைக்கு வேணும்’ என்று சிறுவர்கள் பாணியில் செந்தில் பாலாஜி மாட்டிக்கொண்டதை அதிமுகவினர் மகிழ்வது கவுண்டமணி பாணியில்தான் இருக்கிறது” என்று புன்முறுவலுடன் கூறினார் அருகில் இருந்த இன்னொரு நிருபர்.

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்றுதான் எதிர்க்கட்சியினர் கருத்து கூறவேண்டும். முடிவான கருத்து சொல்ல வேண்டியது நீதிமன்றம்தானே! அந்த அமைச்சர் கொள்ளையடித்திருப்பார் என்று இவர்களால் எப்படி திட்டவட்டமாக கூறமுடிகிறது!

ஆனால், இம்மாதிரி கைது செய்யப்படுபவர்கள் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்களாக மட்டுமே இருப்பதுதான் மக்களுக்கு மனதில் கேள்விக்குறியாக எழுகிறது.

அது ஒரு புறம். தொடர்ந்து 18 மணிநேரம் விசாரணை எப்படி நடத்துவார்கள்? அது சாத்தியமா? நள்ளிரவு வரை விசாரணை. அப்புறம் விடியற்காலை 2.30 மணிக்கு கைது. பாவம்! அதிகாரிகள் இடையில் சாப்பிட்டார்களா? டீயாவது குடித்தார்களா? செந்தில் பாலாஜி காப்பியாவது அருந்தினாரா? இப்படி ஒரே பொசிஷனில் சுற்றி பலர் விடாமல் கோபத்துடன் கேள்வி மழை பொழிந்தால் செந்திலாருக்கு இதய படப்படப்பு வராமல் என்ன செய்யும்? எதிர்பாராத நிலைமைதானே. அதிகாரிகளுக்கு மட்டும் என்ன? குறைந்தபட்சம் தலைசுற்றல் வந்திருக்காதா? யாராவது இந்த வெயிலில் தலைவலி மாத்திரைகள் எடுக்காமல் இருந்தார்களா? வியப்புதான்.

“கடைசியில் மலையை குடைந்து எலியை பிடித்த கதையாக, போகப்போக ஒன்றுமே மக்களுக்கு புரியாதவாறு பாதிக்கதையில் திடீர் முற்றும் போடப்படுகிறது! டிடிவி தினகரன் விஷயங்கள், சசிகலா சிறையிலிருந்து சுற்றுலா போன விவகாரம், முன்னாள் பிரதம செயலாளர் ராம் மனோகர் ராவ் வீடு, கோட்டை ஆபீஸ் சோதனை இவையெல்லாம் புதிராக கிடப்பில் கிடக்கிறதே! ஏதோ ஒரு அரசியல் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்குத்தானா இந்த ரெய்டுகள்? மக்களுக்கு இப்படிப்பட்ட எண்ண அலைகள் வந்து போகவே செய்கிறது.” – முடித்தார் அரசியல் நிருபர்.

பதவியில் உள்ள நாடாளும் அரசியல்வாதிகளின் ஊழல் என்பது மிக மிக ஆபத்தானது. தேசத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி – ஏன் நாட்டின் எதிர்காலத்தை அரித்துவிடும் கரையான் புற்றுகளை போன்றதே அரசியல்வாதிகளின் ஊழல்.

இதில் கட்சி சார்பும் கூடாது – தப்பிக்க கட்சி சாயங்கள் பூசக்கூடாது. வேறு ஏதோ எண்ணத்தை நிறைவேற்றும் உள்நோக்கம் என்பது ஜனநாயகத்தை குழி பறிக்கும் செயல்.

அதேநேரத்தில், அரசியல் பின்புலங்களை வைத்து எதிர் குற்றச்சாட்டுகளை வீசி சாமர்த்திய விளையாட்டுகளால் ஊழல்வாதிகள் தப்பித்து விடுவார்களேயானால் – அதுவும் ஜனநாயக வேர்களை பதம் பார்க்கும்.

சொல்லப்போனால் –

செந்தில் பாலாஜி கைதும், அடுத்து நடக்கப்போவதும் இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டப்போவது உண்மை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...