No menu items!

கொஞ்சம் கேளுங்கள்: கட்சியை பிடிப்பது வேறு! ஆட்சியை பிடிப்பது என்பது வேறு!

கொஞ்சம் கேளுங்கள்: கட்சியை பிடிப்பது வேறு! ஆட்சியை பிடிப்பது என்பது வேறு!

சென்னை மயிலாப்பூரில் பிரபலமான ஒரு ரோஸ்மில்க் கடை உள்ளது. மாலையில் அந்த கடை வாயிலில் ‘அரசியல் பயிலரங்கம்’ நடக்கும். ‘ஓய்’ என்று பேசுகிறவர்கள் முதல், ‘ஜல்ப்’ பிடித்திருக்கு என்று பேசுகிறவர்கள் வரை ஆர்ப்பாட்டமாக அரசியல் பேசுவார்கள். மக்கள் பல்ஸ் அங்கே புரிந்து விடும்.

“பார்த்திரா ஓய்! எடப்பாடியார் சொன்ன மாதிரியே கட்சியை பிடிச்சுட்டாரு.”

“பின்னே! மூணு பெரிய கிணறு தோட்டத்துல இருந்தும், ஊர்காரர்களுக்கு குடிக்க தண்ணீர் தர மறுத்தவராச்சே பன்னீரு. யார் போவா அவர் பின்னாடி!”

“தோ பாரு, கட்சியை பிடிக்கிறது வேற, ஆட்சியை பிடிக்கிறது வேற தெரிஞ்சுக்க” – ஒரு திட்டவட்டமான குரல்.

“அது உண்மைதானே. பல அரசியல் வரலாறு சொல்வது இதைத்தானே” என்றார் பேசுவதெல்லாம் கேட்டவாறு இருந்த அரசியல் விமர்சகர்.

ஒரு கட்சிக்கு கொள்கையை மட்டும் கருதி வெறியோடு ஆதரவு தரும் அணுக்க தொண்டர்கள் இருப்பார்கள். பிரச்சார பீரங்கிகள் அவர்கள். அடுத்து கட்சிக்கு உழைக்கும் தேனீத் தொண்டர்கள். அதற்கு அடுத்து அனுதாபிகள். அவர்களே கட்சியின் சல்லி வேர்கள். இந்த சல்லி வேர்கள் தமிழ்நாட்டை பொறுத்துவரை பெண்களே.

இது விமர்சகரின் தொடர் பேச்சு.

ஒரு தலைவர் தனது இரும்புப் பிடியில் கட்சியை வைத்திருந்தாலும் ஏதாவது காரணத்தால் சல்லி வேர்கள் சுருண்டால்…! தேனீத் தொண்டர்கள் முதலில் காணாமல் போவார்கள். தேர்தலில் உழைக்க பணம் கொட்டி ஆள் தேடவேண்டியதே. தலைவரின் இரும்புப்பிடி கட்சியை பிடித்து வைத்திருக்கலாம். ஆட்சி கைநழுவி விடும்.

கலைஞரின் இரும்புப்பிடியில் நிரந்தரமாக திமுகழகம் இருந்தது. 25 ஆண்டுகள் திமுக ஆட்சியை அசைக்க முடியாது என்றவர்கள் உண்டு. ஆனால் எம்ஜிஆர் பிரிந்தவுடன்….! திண்டுக்கல் இடைத்தேர்தலிலேயே திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எம்ஜிஆரின் ஆட்சி துவங்கியது.

“எடப்பாடியார் எம்ஜிஆரைப்போல தொப்பியும், கருப்பு கண்ணாடியும் அணிந்து போஸ் கொடுத்தால் ஆயிற்றா. செஞ்சிக் கோட்டை ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜா ஆக முடியாது என்பார் அண்ணா. எடப்பாடியாருக்கும், பன்னீருக்கும் தேனீ தொண்டர்கள் சேர்வது என்பது சல்லி வேர்கள் – அனுதாபிகள் என்கிற பெரும் கூட்டம் இருந்தால் மட்டுமே சாத்தியம்” என்றார் விமர்சகர்.

உதாரணமாக ஒன்று என்று எடுத்து வைத்தார்.

எமர்ஜென்சியை அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் க.ராசாராம் திமுக சார்பில் நின்றார். நல்ல செயல்வீரர். நாடாளுமன்றத்தில் அவர் பணி சிறப்பாகவே இருந்தது. ஊரறிந்தவர். தொகுதியிலும் நல்ல பெயர்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சேலம் கண்ணன் நின்றார். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகிறார். “இவருக்கு தேர்தல் என்றால் என்ன என்று தெரியுமா” என்று நிருபர்களிடம் சவால் விட்டார் ராசாராம். எமர்ஜென்சியில் திமுக பட்டபாடு இவருக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட் என்று கூறப்பட்டது.

நடந்தது என்ன?

ராசாராம் வீட்டு வாசலில் திமுக தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் லாரியில் வந்து இறங்கின. எடுத்து வைக்க ஆட்களைத் தேடுவதை நிருபர்கள் பார்த்தனர். மிஸ்ஸிங் தேனி தொண்டர்கள். ராசாராம் நடை பயணமாக வீடு வீடாக சென்று கொண்டிருந்தார். அவர் பின்னால் தட்டியை தூக்கியவாறு சிறு கூட்டம். திடீரென்று ஓர் அறிவிப்பு, ‘எம்ஜிஆர் அவர்கள் நமது தொகுதியை நெருங்கிவிட்டார்… இதோ வந்துவிட்டா்… வந்துவிட்டார்’ என்றது அறிவிப்பு.

ராசாராம் திரும்பி பார்க்கிறார். பின்னால் வந்தவர்கள் தட்டிகளை கீழே போட்டுவிட்டு பறந்து போய்விட்டார்கள் எம்ஜிஆரை பார்க்க. இதுபோன்ற காட்சிகளை பல தொகுதிகளில் நிருபர்கள் அன்று பார்த்தனர். மக்கள் அனுதாபம் என்ற சல்லி வேர் சுருண்டால்…! தேனீ தொண்டர்கள் கூட்டம் தேட வேண்டியதாகி விடுகிறது. ராசாராம் அந்த தேர்தலில் தோற்றுப்போனார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஒரு நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தோற்கடிக்கப்பட்டபோது இந்திரா அலையில் எம்ஜிஆர் இருந்தபோதே அதிமுகவுக்கும் இது நடந்தது. 1967ல் தமிழக காங்கிரஸ் கட்சியை தனது இரும்பு பிடியில் வைத்திருந்த காமராஜருக்கும் அது நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக புகழின் உச்சியில் இருந்த நேரம்.
“தேனீ தொண்டர்களுக்கும், சல்லி வேர்களுக்கும் கட்சியுடன் தொடர்பு அறுபடுவது அதன் தலைவர்களுக்கு தெரிவதில்லை. ஏதோ ஒன்று அவர்கள் கண்களை மறைத்துவிடுகிறது. அது அதிகார போதையாகவும் இருக்கலாம்.

சல்லி வேர்கள் தோன்றும், மறையும். அனுதாபிகள் என்கிற சல்லி வேர்களே தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பவர்கள். இந்த சல்லி வேர்கள் இல்லாமல் போவதுதான் தேர்தலுக்கு கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி விடுகிறார்கள்” என்று முடித்தார் விமர்சகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...