No menu items!

பானுமதி திறமையான நடிகை ஆனா……?

பானுமதி திறமையான நடிகை ஆனா……?

படவுலகில் பணியாற்றி வரும் உங்கள் லட்சியம் என்ன?

 “எனக்கு துளிக்கூட பிரியமில்லாத ஒரு தொழிலைத்தான் நான் இதுவரை செய்து வந்திருக்கிறேன். விசித்திரமான நிலை! ஆனாலும் நான் கூறுவது உண்மைதான். இன்றுகூட நான் படவுலகில் விருப்பமில்லாமல்தான் பணியாற்றி வருகிறேன். இதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விலகிவிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகிவிட வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.”

 விருப்பமில்லாத ஒரு துறையில் எப்படி சிறப்பாக பணியாற்றி வர முடியும்.?

 ” நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ… நாம் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டால் அதைச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதைத்தான் முடிந்தவரை செய்து வருகிறேன்.”

 ‘பேசும் படம்’  1959 பிப்ரவரி இதழுக்கு பானுமதி பேட்டியில் இடம்பெற்றுள்ள பகுதி இது.

 இதுதான் பானுமதியின்  சுபாவம். எதையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என நேருக்கு நேராகவே பேசி விடுவார்.

   நீங்கள் அவருக்கு  எந்த அளவு  மரியாதை தருகிறீர்களோ, அந்த அளவுக்கு  அவரும் தருவார்.

  பெரிய ஹீரோ, பெரிய டைரக்டர் என யாரிடமும்  பணிந்து, குனிந்து  பேசுவதெல்லாம் கிடையாது. ஐஸ் வைத்து பேசும் பழக்கமும் கிடையாது.

பிடிக்காதவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் திரும்பிக்கூட பார்ப்பத்தில்லை இதுதான் பானுமதி.

பானுமதி ஒரு திமிர் பிடித்த நடிகை என்று அன்றைய  திரையுலகம் அவருக்கு சான்றிதழ் அளித்திருந்தது. அதனாலேயே அவர் தமிழில் நிறைய படங்கள் நடிக்க முடியாமல் போனது. அதில் முக்கியமான ஒரு படம் ‘மிஸ்ஸியம்மா’ அந்தப் படத்தில்  பத்து நாள் வேலை பார்த்திருந்தார்.   திடீரென்று மிஸ்ஸிம்மாவில் இருந்து பானுமதியை தூக்கிவிட்டார்கள்.அதன்பிறகுதான் அப்படத்தில் சாவித்திரி நடித்தார்.  பானுமதிக்கு அந்த கதாபாத்திரம் மிஸ் ஆனது அவரது திமிரால்தான் என்று சொல்லப்பட்டது.

 அவரிடம் கதைச் சொல்லி அவ்வளவு சீக்கிரத்தில்  ஓகே  வாங்கி விட முடியாது.  நிறைய கேள்விகளைக் கேட்பார்.  திரைக்கதை, வசனம், பாடல், இசை என எல்லாவற்றையும் கேட்ட பிறகுதான் ஓகே சொல்வார்.

தமிழில் ஹீரோயினாக 32, துணை கதாபாத்திரத்தில் 13 படங்களைச் செய்திருக்கிறார்.     எத்தனை பெரிய ஸ்டார் நடிகர் என்றாலும் மிஸ்டர்  எம்ஜிஆர், மிஸ்டர் கணேசன்,  மிஸ்டர் என்.டி.ஆர். என்று பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார்.

காதல் காட்சியில் நடிப்பதற்கு நிறைய கண்டிஷன்களைப் போடுவார்.    ஹீரோ குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் தொட வேண்டும்,  கண்டபடி  கட்டிப்பிடிக்கக் கூடாது. என்றெல்லாம் கண்டிஷன் போடுவார்.  அவருடைய விருப்பம் இல்லாமல் அவரைத் தொடக்கூடாது.

ஒரு படத்தில் சிவாஜி பானுமதியின் மடியில் படுத்துக்கொண்டு காதல் வசனம் பேசுவது போன்ற காட்சி. இந்த காட்சியை  டைரக்டர் சிவாஜியிடம் விளக்கினார். அதற்கு சிவாஜி, “முதல்ல பானுமதிம்மா கிட்ட போய் இதுக்கு அனுமதி வாங்கிடுங்க. இந்த சீன் இப்படி வருதுனு சொல்லுங்க. இதுல உங்களுக்கு சம்மந்தமான்னு  கேட்டுக்குங்க.  அவங்க சம்மதிச்சால்  நடிக்கலாம். இல்லன்னா அந்த காட்சியை நீங்கள் மாற்ற வேண்டியதுதான்’ என்று சொல்லிவிட்டார்.

இதைத்தொடர்ந்து  டைரக்டர் பானுமதியிடம் “அம்மா ஒரு லவ் சீன்.  உங்க மடியில சிவாஜி படுத்துகிட்டு  பேசுற மாதிரி” என்று  மெதுவாக விளக்கிச் சொன்னார்.

  “அப்படியா… அந்த சீன் ரொம்ப அவசியமா?  ஒருத்தர் பக்கத்துல ஒருத்தர் உட்கார்ந்து பேசினா நல்லா இருக்காதா”  என்று கேட்டார் பானுமதி

இந்த சீன் ரொம்ப அவசியம். இப்படி வந்தா நல்லா இருக்கும். அந்த காதல் காட்சிஅருமையா அமையும்  என்று பணிவாக டைரக்டர் சொன்னதும், பத்து நிமிடங்கள்  யோசித்து விட்டு. சரி செய்வோம் என்றார்   பானுமதி. அதன் பிறகுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டது.

பானுமதி தமிழில் ஒப்பந்தமான முதல் படம் ரத்னகுமார்.  பி.யு.சின்னப்பா ஹீரோ. டைரக்டர்கள்  கிருஷ்ணன் பஞ்சு.

 இந்தப் படத்தில்  சின்னப்பாவுடன் காதல் காட்சியில் நடிக்க பெரிய மோதல் எல்லாம் நடந்தது. ஒருநாள்  யாரிடமும் சொல்லாமல படப்பிடிப்பை விட்டு ஓடி விட்டார் பானுமதி.

 “அந்த ஆளு கிட்டே வந்தாலே வியர்வை நாற்றம் அடிக்குது.   கிட்ட  வந்து வசனம் பேசினாலே பீடி நாத்தம் வீசுது.  நாத்தம் தாங்க முடியல”  என்று பல   டேக்குகளை வாங்கினார். பின்னர் எனக்கு தலைவலி என்று சொல்லிக் கிளம்பிச் சென்றார்.

ஒரு நாள் சின்னப்பா  குடித்துவிட்டு  வந்திருந்தார். அருகில் சென்றால்  சாராய நெடி வீசியது.  உடனே முகத்தை சுளித்துக்கொண்டு.  வேகமாக மேக்கப் ரூமுக்கு  சென்றார் பானுமதி.  அப்படியே பின்பக்கமாகப் போய்  கார் எடுத்துக்கொண்டு வீட்டுக்கே சென்றுவிட்டார்.

அவர் போனது யாருக்கும் தெரியாது.  ‘தலைவலி… மேக்கப் ரூமில் இருக்கிறார்’   என்று அவருடைய உதவியாளர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு போனவிஷயம் தெரிந்து .விசாரித்த போது, “அவர் சாராயம் குடித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த நெடி எனக்கு பிடிக்கவில்லை. தலைவலி.  அதனால் வீட்டுக்கு வந்து விட்டேன்’ என்று சொல்லிவிட்டார். இனி அவரோடு நடிக்க மாட்டேன் என்றும் சொல்லிவிட்டார் பானுமதி.

பிறகு அவருடைய கணவரிடம்  கிருஷ்ணன் பஞ்சு சென்று  சொல்லியிருக்கிறார்கள்.  இனிமேல் அவர் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரமாட்டார் என்று வாக்குறுதி கொடுத்து மறுபடியும் நடிக்க அழைத்து வந்தனர்.

 இதனாலேயே அந்த படம் நான்கு  வருடம் வரை இழுத்துக் கொண்டு போனது .  இதற்கு காரணம் பானுமதி தான் என்று சொல்லப்பட்டது.

மற்றபடி பானுமதி மிக திறமையான நடிகை.தமிழ். தெலுங்கு. ஆங்கிலம்.இந்தி என்று ஐந்து மொழிகளிலும் நன்றாக பேசுவார் . தயாரிப்பு, இயக்கம், நடிப்பு,  இசை,  பாடகர்,  கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முக ஆளுமை கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...