No menu items!

இருளில் புதுச்சேரி – யார் காரணம்?

இருளில் புதுச்சேரி – யார் காரணம்?

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் நேற்று (2-10-2022) மாலை சூரிய வெளிச்சம் மறைந்ததும் எரிய வேண்டிய விளக்குகள் எரியவில்லை. காரணம், மாலை 5 மணிக்கு திடீரென மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அப்புறம் திரும்ப வரவில்லை. அதன்பின்னர் ஒரு சில ஏரியாக்களில் மட்டும் இரவு 12.30 மணிக்கு திரும்பியது; சில ஏரியாக்களில் இப்போது வரை (3-10-2022) மின்சாரம் இல்லை.

நேற்று மட்டுமல்ல கடந்த ஒரு வாரமாகவே இதுதான் புதுச்சேரியின் நிலை. முன்னறிப்பின்றி திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதும், அதன்பின்னர் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருப்பதும், சில கிராமப் பகுதிகளில் ஒரு வாரம் முன்பே துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் வராமலும் என மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். சில இடங்களில் கோபத்தில் மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.

அரசாங்கம், மின்வாரிய ஊழியர்களை கை காட்டுகிறது. ஊழியர்கள், தங்கள் மேல் மக்கள் கோபத்தை திருப்ப அரசாங்கமே மின்சாரத்தை துண்டிக்கிறது என்கிறார்கள்.

என்ன காரணம்? புதுச்சேரி மின்துறையில் என்னதான் நடக்கிறது?

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதனையடுத்து, மின்சார வினியோகத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் அறிவிப்பினை புதுச்சேரி அரசு வெளியிட்டது.

அதில், ‘புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கவும், விநியோகத்தில் நூறு சதவீத பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலதாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்த வேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்க வேண்டும். இந்த முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ஆம் தேதி இறுதிநாள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவு பார்த்து மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம், கடந்த பிப்ரவரி மாதம்தான், புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அப்போது அவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து, “தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம்”, என்று முதலமைச்சர் ரங்கசாமி வாக்குறுதி அளித்ததை ஏற்று மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில்தான், பிப்ரவரி மாதம் அளித்த உறுதிமொழிக்கு மாறாக, தற்போது அரசு டெண்டர் அறிவித்ததும், கோபமடைந்த மின்வாரிய ஊழியர்கள் அதை எதிர்த்து, ‘மின்துறை தனியார்மய எதிர்ப்பு அனைத்து ஊழியர் போராட்டக்குழு’ என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை தொடங்கினர்.

புதுச்சேரி மின்வாரிய பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள், மின்சார பராமரிப்பு ஊழியர்கள் என புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி தொடங்கிய மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் மின்அளவீடு செய்வது, மின்கட்டணம் வசூல், புதிய இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் ஒட்டுமொத்த புதுச்சேரியும் ஒரே நேரத்தில் இருளில் மூழ்கியது, பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.. “16 துணை மின்நிலையங்களில் மின்சாரத்தை துண்டித்ததுடன், பீஸ் கட்டைகளையும் மின்வாரிய ஊழியர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்” என்கிறது அரசாங்கம். போராட்ட குழுவினரோ, “அரசாங்கமே மின்சாரத்தை துண்டித்துவிட்டு எங்கள் மேல் பழியை போடுகிறது” என்கிறார்கள்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, புதுச்சேரி மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச் செயலாளர் வேல்முருகன், “டெல்லி மின்வாரிய நிறுவனம், 50 சதவீதம் நஷ்டத்தில் சென்றதால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் மின்வாரியம்  லாபகரமாகத்‌தான் இயங்கிக் கொண்டு வருகிறது. இதை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.‌ ஆனாலும், அரசு தனியாருக்கு விற்க துடிக்கிறது.

இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே மின்வாரியத்தை தனியார்மயமாக்கக்  கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். அப்போது எங்களுக்கு உறுதியளித்துவிட்டு, தற்போது திடீரென தனியார்மயத்துக்கான டெண்டர் விட்டுள்ளனர். அதில் 100 சதவீத பங்குகளையும் தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த மின்துறையும், அதில் பணி‌புரியும் ஊழியர்களும் தனியாரிடம் வேலை செய்யும் சூழல் ஏற்படும். மின்துறை ஊழியர்கள் அரசு‌ ஊழியர்களாக நீடிக்க மாட்டார்கள். எங்களுடைய சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படும்.

மத்திய அரசிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தைக் குறைந்த விலைக்குப் புதுச்சேரி மாநில அரசு மக்களுக்கு கொடுத்து வருகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.5.50க்கு வாங்கி, ரூ.1.90க்கு கொடுக்கிறோம். இதே மத்திய அரசு தனியாருக்கு மின்சாரம் விற்பனை செய்யும்போது அரசுக்குக் கொடுத்த விலையை‌ காட்டிலும் கூடுதல் விலைக்குதான் கொடுப்பார்கள்.‌ அதனை வாங்கும் தனியார் நிறுவனம் குறிப்பிட்ட லாபம் வைத்துத்தான் மக்களுக்கு விற்பனை செய்யும். பெரும்‌ முதலீட்டில் மின்துறையை‌ வாங்கும் நிறுவனம், மக்கள் நலன் குறித்து யோசிக்காது. லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும். ஆகவே, பொது மக்களுக்கு இப்போது ரூ.1.90க்கு கிடைக்கின்ற மின்சாரத்துக்கு ரூ.7க்கு மேல் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் இலவச மின்சாரம் பாதிக்கப்படும். ‘ஒரு குடிசை ஒரு விளக்கு’ திட்டமும் பாதிக்கும். மேலும் சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரம் விற்கப்பட்டால் அவற்றால் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஆனாலும், தற்போது புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர். இதனால்தான் தற்போது காலவரையற்ற போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என்கிறார் போராட்டக்குழு பொதுச் செயலாளர் வேல் முருகன்.

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தாலும் அரசு தன் முடிவில் பின்வாங்காமல் உறுதியாக உள்ளது. புதுச்சேரி உள்துறை மற்றும் மின்துறை அமைச்சரான நமச்சிவாயம், “இந்த டெண்டரை திரும்பப் பெற சாத்தியமில்லை. ஆரம்பத்திலிருந்து மின்துறை ஊழியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஆனால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஒரு சில விஷயங்களில் அவர்கள் தீர்க்கமாக இருக்கின்றனர். எல்லா விஷயங்களிலும் அரசாங்கத்தை நிர்பந்திக்க முடியாது. அவர்களது கோரிக்கையை அரசு கேட்கலாமே தவிர, இப்படித்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று அவர்கள் சொல்ல முடியாது. எது நல்லது, கெட்டது என்பதை அரசாங்கமே முடிவெடுக்கும். புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு.  

கடந்த சில நாட்களாக மின்சார வாரிய ஊழியர்கள் செயற்கையான மின்தடையை ஏற்படுத்தினர். வில்லியனூர், பாகூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்சார ஒயர்களை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்திருக்கின்றனர். சில இடங்களில் பியூஸ் கேரியர்கள் பிடுங்கிச் செல்லப்பட்டுள்ளன. இதனால் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனாலும் அரசாங்கம் பொறுத்துக்கொண்டு அதனை சரி செய்து வந்தது.

தற்போது மாற்று ஏற்பாடாக மத்திய பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் துணை மின் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மின்துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும், “போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன், போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்களை காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர். மின்துறை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை குண்டுகட்டாக காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து அவர்கள் காவலர் சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் துணை ஆட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், ‘மின் துறை சொத்துக்களை சேதப்படுத்த மாட்டோம்; அறவழியில் போராடுவோம்’ என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி மின்வாரியத்தை தனியார்மயமாக்குவது குறித்து, பாஜகவைச் சேர்ந்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் அமைச்சர் நமச்சிவாயமும் பேசிவரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி நிலைப்பாடு என்ன என்பதுதான் இப்போது அனைவரது கேள்வியாகவும் உள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, “முதலமைச்சரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.

இதனிடையே, இரண்டு நாட்கள் முன்பு ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் ரங்கசாமி, மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், ‘மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு புதுச்சேரியில் அரசியல் மாற்றத்தைக்கூட உண்டு பண்ணலாம்” என்கிறார், புதுச்சேரி பத்திரிகையாளர் ஒருவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...