No menu items!

போராளிகளால் கடத்தப்பட்ட பிரிட்டன் பெண் – என்ன நடந்தது?

போராளிகளால் கடத்தப்பட்ட பிரிட்டன் பெண் – என்ன நடந்தது?

கருணாகரன்

பெனிலோப் ஈவா வில்லிஸ்…

இயக்கத்தால் உளவாளி என்ற சந்தேகத்தில் கடத்தப்பட்ட பிரிட்டன் பிரஜை, பெனி. சென்னையிலிருந்து வந்த உத்தரவின்படி முல்லைத்தீவில் கடத்தப்பட்டு இயக்கச்சி வழியாகக் கொண்டு வரப்பட்ட பெனிலோப் ஈவா வில்லிஸ், ஒரு மாதத்துக்குப் பிறகு நல்லூரில் வைத்து விடுதலை செய்யப்பட்டார். விடைபெற்றுச் செல்லும்போது பெனியின் கண்கள் மட்டும் கலங்கவில்லை, எங்களுடைய கண்களும் கலங்கின.

அந்த நாட்கள் அப்படியே நினைவில் உள்ளன.

அன்று சரியாக வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இருட்டு வேறு வளர்ந்து கொண்டிருந்தது. டிராக்டருக்கு லைட்டும் கிடையாது. இருந்தாலும் அதைப் போட முடியாது. இருளே பாதுகாப்பானது. அதைத் தள்ளி இயக்கிக்கொண்டே வந்திருந்தோம்.

மங்கிய ஒளியில் காட்டுப் பாதையில் ஒரு உத்தேசமாக வண்டி போய்க்கொண்டிருந்தது. அப்படியே போய் வெளியில் இறங்கியது. இனித்தான் பிரச்சினை. எந்தப் பக்கத்தால் போவதென்று சரியாகக் கணிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பாதைகள். உண்மையில் அது பாதையே அல்ல. பெரிய வெளியில் அங்குமிங்குமாக ஏராளம் வழிகள் சுழித்தோடின. ஆயிரம் தடவை போய் வந்தாலும் புரியாத மர்மப் பாதைகள்.

எவ்வளவு பரிச்சியமான, தெளிவான ஆளையும் குழப்பும் விதமாக அப்படி அந்தப் பாதையை ஆக்கி வைத்திருந்தார்கள். கள்ள மரம் ஏற்றிப்போகிறவர்கள் செய்த வேலை இது. ஒரு வழியை மட்டும் பயன்படுத்தினால், அந்த வழியில் வந்து அரசாங்க அதிகாரிகளோ காவல்துறையோ மறித்துப் பிடிக்கலாம் என்ற அச்சத்தில், இப்படித் தாறுமாறாக பல வழிகளை உருவாக்கி இருந்தார்கள். இந்த பாதைகளில் சட்டவிரோத மரமேற்றிகளைத் தேடி வருகின்ற அதிகாரிகள் எந்த வழியாக வந்தோம், எங்கே போகிறோம் என்று தெரியாமலே தடுமாறிச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

அந்த நாட்களில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சாலை, சுண்டிக்குளம் வழியாகவே கள்ளமரத்தைக் கடத்திக்கொண்டு வருவார்கள். கோடையிலென்றால் கண்டாவளை கொம்படி, வண்ணாங்குளம் வழியாக. அங்கிருந்து இயக்கச்சி, தர்மக்கேணி, கச்சாய், சங்கத்தானை அல்லது மிருசுவில், வரணி, கப்புது என்று போவார்கள். இயக்கங்கள் வளர்ந்ததற்குப் பிறகு, போலீஸ் இல்லாமல் போனது.

இது கள்ளமரக்காரர்களுக்கு வாய்ப்பானது. காட்டு மரங்களைக் கண்டபாட்டுக்கு வெட்டி விற்பது தவறு என்று தெரிந்தாலும் இயக்கங்கள் ஆரம்பத்தில் அதைக் கட்டுப்படுத்தவில்லை. கள்ளமரம் ஏற்றுகின்றவர்களின் வழியையும் அவர்களுடைய வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ளுகிற தேவை இருந்தபடியால் அப்போது இதையெல்லாம் இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை.

பின்னாளில் நிலைமை மாறி, மரம் வெட்டுவது இயக்கத்தால் தடுக்கப்பட்டது. அதை மீறி கள்ளமரம் ஏற்றிய வாகனங்களுக்கு இயக்கமே தீ வைத்து எரித்தது. பிறகு காட்டிலேயே இறங்க முடியாத சட்டங்கள் எல்லாம் வந்தன. மட்டுமல்ல, அனுமதியில்லாமல் மரத்தை வெட்டியோர் கைது செய்யப்பட்டு, ஆறு ஏழு மாதங்கள் காட்டில் நின்றே மரநடுகையைச் செய்ய வேண்டும். அந்தக் காலப்பகுதியில் வீட்டுக்குக்கூடப் போக முடியாது. அந்தளவுக்கு இயக்கம் சிறப்பாகச் செய்தது.

இப்போதையைப் போல ஒரு மரத்தை நடுவதற்கே பெரிய செலவு, பெரிய ஏற்பாடு, பெரிய கூட்டம், பெரிய பேனர் எல்லாம் கட்டி, பந்தாக்கள் காட்டப்படவில்லை. திருவிழாச் செய்யவில்லை. இது அரசியல்வாதிகளின் நாடகமல்லவா, அப்படித்தானிருக்கும்.

அப்பொழுது போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சத்தமில்லாமல் மர நடுகை நடந்து கொண்டிருந்தது. அது போராளிகளின் நடவடிக்கையல்லவா, அப்படித்தானிருக்கும்.

இன்றும் அந்த மரங்கள் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முழங்காவில், பூனகரி, விசுவமடு, ஒட்டுசுட்டான், புளியங்குளம், முள்ளியவளை, மாங்குளம் போன்ற பல பகுதிகளில் வளர்ந்து சோலையாக நிற்கின்றன. இதை விட ஊர்கள் தோறும் ஆயிரக்கணக்கான மரங்கள் காற்றில் தலை வீசுகின்றன. வான் நோக்கி தங்கள் தோழர்களைப் பார்ப்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

சரி, பெனி கடத்தலுக்கு வருவோம்.

எந்தப் பக்கம் போவதென்று கணிக்க முடியாமல் குழம்பியிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா…

அன்றைக்கு கள்ளமரம் ஏற்றிப் போகிறவர்களையும் காணவில்லை. ஆளரவமே இல்லாத வெளியில் யாரிடம் பாதையின் விவரத்தைக் கேட்க முடியும்? எனவே, ஏதோ போகிறபோக்கில் போவோம், எப்படியாவது அந்தக் காட்டு ஊருக்குக் கிட்டவாகப் போய்ச் சேரலாம் அல்லது கடல் முகத்தில் ஏறலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

வண்டி காடு தாண்டி, தரவையில் போய்க்கொண்டேயிருந்தது. நான் சரியான வழியில்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்று வண்டியிலிருந்தவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் சாரதி மட்டுமல்ல, வழிகாட்டியும்கூட. ஆனால், வழிகாட்டிக்கே வழி சரியாகத் தெரியவில்லை என்பது எனக்கு மட்டும் தெரிந்த கதை.

அதிர்ஷ்டவசமாக சரியாகப்போய் உரிய திடலில் ஏறினேன். ஊரின் ஒதுக்குப் புறமாக களப்பின் ஓரமாக இருந்தது திடல். திடலின் கீழே விரிந்த நீர்ப்பரப்பு. இருளுக்குள்ளும் அலைகளில் மினுங்கிக் கொண்டிருந்தது நீர்.

ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் அகலமுடைய பரப்பு. அதற்கப்பால் சதுப்புக் கூடிய நிலம். அதைக் கடந்தால் பச்சையாக விரியும் வயல்வெளி. அதுதான் கண்டாவளை. அங்கங்கே சிறிய வீடுகள். எல்லாமே மண்குடிசைகள். அநேகமாக பனையோலையால் வேய்ந்தவை. எங்காவது ஒன்றிரண்டு ஓட்டுக்கூரைகள். வண்டியில் வந்தவர்கள் அங்கேதான் போகவேணும். ஆனால், வீடுகளுக்கல்ல. அதற்குமப்பால்.

எல்லோரும் இறங்கினார்கள். திடலின் இன்னொரு பக்கமாக உள்ள சிறிய பற்றைக்குப்போய், அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் படகை இழுத்து வந்து களப்பில் இறக்கினோம். வந்தவர்கள் படகை இழுத்துக்கொண்டு போனார்கள். ஆழமற்ற நீர்ப்பரப்பு என்பதால் படகை ஓட்டிச்செல்ல முடியாது. மழை அதிகமாக இருந்து நீர்ப்பெருக்குக் கூடினால் மட்டுமே இயந்திரத்தைப் பொருத்தி பயணிக்க முடியும்.

நான் வண்டியைத் திருப்பி, ஆத்தியடிக்குப் போனேன். அங்கேதான் கணபதிப்பிள்ளை இருக்கிறார். அந்த ஆழக்கிராமத்தில் ஒரு பெரிய வளவு. பத்துப்பிள்ளைகள். மூன்றோ நான்கு பிள்ளைகள் மணம் முடித்து அயலூருக்குப் போய் விட்டனர். இரண்டு பிள்ளைகள் அங்கேயே குழந்தை குட்டிகளுடன் இருந்தனர். மற்றவர்கள் வயலையும் மாடுகளையும் பார்த்துப் பராமரித்துக் கொண்டிருந்தனர்.

பள்ளிக்கூடப் படிப்பெல்லாம் கிடையாது. எழுத, வாசிக்க என்று ஐந்தாம் வகுப்புவரை போக்கறுப்புப் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறார்கள். அதற்கு மேல் படிப்பதாக இருந்தால்…? அது வெளிநாடு போய்ப் படிப்பதற்குச் சமன். ஆகவே அதைப்பற்றி கணபதிப்பிள்ளை யோசிக்கவேயில்லை. அவரைப் பொறுத்தவரை அது தோதுப்படாத ஒன்று.

வாழ்க்கைக்கும் வருமானத்துக்குமாக மாடுகள் நூறுக்கு மேலுண்டு. வயலும் காணியும் அப்படித்தான். “எல்லை எது என்று எனக்கே தெரியாது” என்பார் கணபதிப்பிள்ளை.  உண்மையும் அதுதான். அங்கே யார்தான் போய் குடியிருக்கப் போகிறார்கள்?

கணபதிப்பிள்ளையிடம் ஒரு டிராக்ரரும் சைக்கிள் ஒன்றும் நின்றன. வாரத்துக்கு ஒரு தடவை பளைக்குப்போய், கூட்டுறவுக் கடைக்கு பொருட்களை எடுத்து வரும் டிராக்டர். கொடிகாமத்துக்கோ சாவகச்சேரிக்கோ போவதென்றால் எட்டுக் கிலோ மீற்றர் தொலைவுக்கு நடந்து வந்து இயக்கச்சியிலிருந்து சைக்கிள் மிதிப்பார். அல்லது அவருடைய மகன்கள் போய் வருவார்கள்.

ஆத்தி மரத்தின் கீழே, தள்ளி இயக்குவதற்கு ஏற்றமாதிரி டிராக்டரை நிறுத்திவிட்டு வளவினுள்ளே சென்றேன். மாட்டு மொச்சையும் சாணி வாடையுமடித்துக் கொண்டிருந்தது.  வாசலில் வந்து வரவேற்றார் கணபதிப்பிள்ளை.

கிணற்றடியில் முகத்தைக் கழுவி விட்டுத் தலைவாசலில் நுழையும்போது, “பயங்கரவாதிகள் பிரிட்டிஸ் பிரஜையான சுற்றுலாப் பயணி ஒருத்தரை முல்லைத்தீவில் வைத்துக் கடத்திச் சென்று விட்டார்கள்” என்று இரவு ஒன்பது மணி இலங்கை வானொலிச் செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.

‘‘பெடியள் ஆரோ வெள்ளைக்காரரைக் கடத்தியிட்டினமாம்” என்று விளக்கினான் கணபதிப்பிள்ளையின் மகன்களின் ஒருத்தன்.

இதை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. ஒன்றுமே தெரியாததைப்போலப் பேசாமல் படுத்திருந்தோம்.

அன்றிரவு பன்றி இறைச்சிக் கறியோடு பருப்பும் சோறும் சாப்பிட்டேன். பிறத்தியாட்கள் யாராக இருந்தாலும் பனை ஓலையில் செய்யப்பட்ட தட்டுவத்தில்தான் சாப்பாடு. சுடுசோறும் பச்சைப் பனையோலை வாசமும் தூக்கலாக இருந்தது.

திண்ணைக் குந்தில் மான்தோலை விரித்துப் போட்டார்கள். இன்னொரு தோலில் கணபதிப்பிள்ளை சாய்ந்து படுத்துக்கொண்டு நாட்டு நடப்புகளையும் வெளிப்புதினங்களையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஆழத்திலிருக்கும் கிராமம் என்றபடியால் அவருக்கு நாட்டு நிலவரங்கள் அதிகமாகத் தெரியாது. அரசியலில் அவருக்கு ஆர்வமும் இல்லை. ஆர்வம் இருந்தாலும் இந்த ஒதுக்குக் கிராமத்தில் அதனால் என்னதான் பயனுண்டு?

இயக்கங்களின் போக்குவரத்துக் கூடிய பிறகே அங்கே புதிய வாகனங்களையும் புதுப்புது ஆட்களையும் காணத் தொடங்கினார்கள். யார் அங்கே போனாலும் எல்லோருக்கும் சாப்பாடிருந்தது. எந்த இயக்கம் என்ற வேறுபாடுகள், வித்தியாசமெல்லாம் அவருக்குத் தெரிவதில்லை. கணபதிப்பிள்ளையின் வீட்டில் மட்டுமல்ல, அங்கே இருந்த யாருடைய வீட்டிலும் அப்படித்தான். காலையில் என்றால் அரிசிமாப் பிட்டு அல்லது பழைய சோறும் பழைய மீன்குழம்பு அல்லது பழைய இறைச்சிக்கறியும்.

மதியமும் இரவும் சுடச்சுடச் சோறும் இறைச்சியும். சிலவேளை மீன்குழம்பு. இடையில் மோர். அல்லது பழந்தண்ணி என்ற சோற்றுக் கரைசல். தாகமேறிய வழியில் வருகின்ற இயக்கப்பெடியளுக்கு அது பெருங்கொடை.

பேசிக்கொண்டிருந்த கணபதி உறங்கி விட்டார். நான் தூங்கவில்லை. சென்றவர்கள் உரிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்களா? உரியவர்களைச் சந்தித்தார்களா? எதுவுமே தெரியவில்லை.

வெளியே வந்து முற்றத்தில் நின்று வானத்தைப் பார்த்தேன். விருச்சிகம் மேற்கில் சாய்ந்திருந்தது. பின்சாமப்பொழுது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் விடிந்து விடும். விடிவதற்குள் வந்து விடுவதாகத்தான் சொல்லி விட்டுப்போனார்கள். களப்புக் கரைக்குப் போகலாமா என்று யோசித்தேன். அப்படிப் போவதாக இருந்தால் டிராக்டரைத் தள்ளியே இயக்க வேணும். உதவிக்குக் கணபதியரை எழுப்ப மனசு வரவில்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். ஏற்றத்தில் டிராக்டரை நிறுத்தியிருந்ததால் நானே தனியாக வண்டியை இயக்கிக்கொண்டு களப்புக்கு வந்தேன். களப்பில் அசுமாத்தமே இல்லை. கரையில் நண்டுகள் ஓடின. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி கரைவழியே நடந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் யாரையும் காணவில்லை. மறுபடி டிராக்டரை இயக்கிக் கொண்டுவந்து கணபதியர் வீட்டில் நுழைந்தேன்.

இரவு வரவேண்டியவர்கள் ஒழுங்கு சரியில்லாத காரணத்தினால் வரவில்லை. பகலில் களப்பில் இறங்க முடியாது. ஹெலிகாப்டரின்  தாக்குதலுக்கு வாய்ப்புண்டு. ஆகவே, தங்களால் வரமுடியாது என்று தெரிவித்திருந்தார்கள். அந்தத் தகவலோடு காலையில் நான் நின்ற இடத்திற்கு வேறு ஆட்கள் வந்தனர். வரும்போது பாணும் பணிசும் வாங்கி வந்தார்கள்.

கணபதிபிள்ளை வீட்டில் அதைக் கொடுத்தோம். மரை வத்தற் கறியோடு சோறு கிடைத்தது. பொழுதிறங்க, களப்புக்குப் போனோம். படகு கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. கரையை நெருங்கி வந்த படகிலிருந்து, ஒரு பெண் வந்திறங்கினாள். சுமார் நாற்பது வயதிருக்கலாம். ஐந்தரை அடிக்கும் கூடுதலான உயரம். முழங்கால் வரை நீண்டிருந்த புள்ளிச் சட்டையை  அணிந்திருந்தாள். கையில் சிறியதொரு கைப்பை.

இறங்கியவளை அழைத்துக் கொண்டு வந்து டிராக்டரில் ஏறினோம். ஐ.பி.ரி அவளிடம் கேட்டார், “எப்படியிருக்குப் பயணம்?” என்று.

பெருவிரலை உயர்த்திக்காட்டி, “வெரி நைஸ். வெரி பியூட்டிஃபுல் லகூன்”  என்றாள். தானொரு கைதியாகக் கடத்தப்பட்டுள்ளோம் என்ற எந்தப் பதட்டத்தையும் காண முடியவில்லை.

டிராக்டர் புறப்பட்டது. வழியில் கணபதிபிள்ளை மாடுகளோடு வந்து கொண்டிருந்தார். வந்தவருக்கு எங்களைக் கண்டதும் ஆச்சரியம். உண்மையில் எங்களைப் பார்த்து அவர் ஆச்சரியப்படவில்லை. டிராக்டரில் இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததே அவருக்கு ஆச்சரியம்.

வெள்ளைக்காரப் பெண் அவருடைய ஊருக்கும் வந்திருப்பதென்றால்…! “கடத்தப்பட்ட அந்த வெள்ளைக்காரி இவர்தானே!”

கையை அசைத்துக் காட்டியபடியே போய்க்கொண்டிருந்தோம். திரும்பிப் பார்த்தபடியே அசையாமல் சில நொடி அப்படியே நின்றார் கணபதிப்பிள்ளை

லைட் இல்லாமல் இருளில் இரைந்துகொண்டு சென்ற டிராக்டரைப் பற்றி அந்தப் பெண் எதையோ சொல்லிக் கேட்டது. தன் வாழ்நாளில் அப்படியொரு பயணத்தை அன்றுதான் செய்திருப்பாள் என நினைக்கிறேன்.

வெளியும் காடுமான வழியில் பயணித்து, சக போராளியான சிறியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கே ரின் மீன் சம்பலும் பாணும் பருப்புக் கறியும் தயாராக்கி வைத்திருந்தனர். பப்பாசிப் பழமும் வாழைப்பழமும் இன்னொரு தட்டில் இருந்தன. தூங்கிக் கொண்டிருந்த கைவிளக்கின் மங்கல் ஒளியில் அந்தப் பெண் அங்கிருந்தவர்களையும் அங்கிருந்தவர்கள் வந்த பெண்ணையும் வேடிக்கை பார்த்தனர்.

உணவு பரிமாறப்பட்டது.

இரவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது இலங்கை வானொலி சொன்னது: “பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பிரிட்டிஸ் பிரஜையைப் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவருடைய உடல் நிலை குறித்து பயங்கரவாதிகளுக்கு ஒரு அறிவுறுத்தல். அவருக்குரிய மருந்துப் பொருட்களையும் சிகிச்சையையும் தவறாமல் செய்ய வேண்டும் என்பதை அறியத்தரப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.”

“அடேய் நீங்கள் பிடிச்சுக் கொண்டு வந்தது உளவாளியா நோயாளியா?” என்று வேடிக்கையாகக் கேட்டார் தளபதி சண்.

“நாங்கள் வைச்சிருக்கிறது உளவாளியா நோயாளியா எண்டது இருக்கட்டும் அண்ணை. அரசாங்கத்தின்ரை அறிவிப்பைப் பார்த்தால்,,  நாங்கள் இப்ப வைத்தியர்களா மனிதாபிமானிகளா எண்டு குழப்பமாயிருக்கு” என்றான் முடக்கு.

நான்  அந்தப் பெண்ணைப் பார்த்தேன். சிறியனின் (பயங்கரவாதியின்?) அம்மாவிடமிருந்து ஒரு மென்மையான புன்னகையோடு தேநீரை வாங்கிக் கொண்டிருந்தாள் பெனிலோப் ஈவா வில்லிஸ்.

தன்னை எதற்காக ஆயுதமுனையில் கடத்திக் கொண்டு வந்தார்கள்? எதற்காக இப்படி அன்பாக உபசரிக்கிறார்கள் என்றெல்லாம் பெனிக்குத் தெரியாது. பெனியின் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. எந்தப் பதற்றமுமில்லை. அவர் கடத்தப்பட்டு அன்றிரவோடு மூன்று நாட்கள். நான்கு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இனி ஐந்தாவது இடம். சூழவும் ஆயுதம் தாங்கிய போராளிகள். அவர்களில் பலருக்கும் பெனியை யாரென்று தெரியாது. ஆனால், மிக ரகசியமாக ஒரு தகவல் கசிந்திருந்தது, பிரிட்டிஸ் உளவுப் படையைச் சேர்ந்தவர் பெனி என்று.

பெனிக்கு சாப்பாட்டைக் கொடுக்கும் வீட்டாருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு காரொன்றுக்கு பெனி மாற்றப்பட்டார். அதற்குப் பிறகு இருந்த ஒரு மாதத்திலும் அங்கே அவர் விசாரிக்கப்பட்டாரா உபசரிக்கப்பட்டாரா என்று சரியாக அனுமானிக்க முடியாமலிருந்தது. அந்தளவுக்கு அவரோடு எல்லோரும் ஒரு நட்பைப் பேணினோம். பேணினோம் என்று சொல்வதை விட அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டியிருந்தது.

காரணம், சென்னையிலிருந்து வந்த அறிவித்தலே. பிடிக்கப்பட்டிருப்பவர், பிரித்தானியப் பிரஜை. யார் அவரைக் கடத்தி வைத்திருப்பது என்ற விவரத்தை பிரித்தானியா தெரிந்துவிட்டது. ஆகவே அவரை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அது துரிதமாக இறங்கியது. இலங்கை அரசுடன் இதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பதால் இந்தியாவுடன் பிரித்தானியா பேசியது. சென்னையிலிருந்த பாலகுமாரனுக்கு தமிழ்நாட்டு அரசின் மூலமாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டது என்பதை விட அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று சொல்வதே சரி.

ஈவா, உளவாளியா நோயாளியா விருந்தாளியா என்று இந்தக் கணம் வரை எனக்குச் சரியாகத் தெரியாது. சந்தேகத்தில் அவரைப் பிடித்து வந்தார்கள் என்றே எண்ணுகிறேன. இதைப்பற்றி அவர் என்னவெல்லாம் நினைத்தாரோ அறியேன். ஆனால், அவரை ஒரு அன்பாளினியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அந்த நினைவில் கண்கள் பனிக்கின்றன.

1 COMMENT

  1. /:அடேய் நீங்கள் பிடிச்சுக் கொண்டு வந்தது உளவாளியா நோயாளியா?” என்று வேடிக்கையாகக் கேட்டார் தளபதி சண்./:
    அருமையான நினைவலைகள். நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...