No menu items!

அழுத்திய அமித்ஷா அதிர்ந்த அதிமுக! – மிஸ் ரகசியா

அழுத்திய அமித்ஷா அதிர்ந்த அதிமுக! – மிஸ் ரகசியா

”சென்னை திடீர்னு ஊட்டி மாதிரி ஆயிடுச்சு” என்று உற்சாகமாய் உள்ளே வந்தாள் ரகசியா.

“ஆமாம், நேத்து வரை வெயில் கொளுத்திச்சு…இன்னைக்கு சில்லுனு இருக்கு”

“அரசியலும் அப்படிதான் இருக்கு.நேத்து வரை வெளில போய்டுவார்னு சொன்னாங்க. இன்னைக்கு அவர் உள்ளேயே இருக்கப் போறார்னு தெரிஞ்சுருச்சு”

“யாரைச் சொல்ற?”

“பிடிஆர் ஆடியோ பிரச்சினையைதான்”

“முதல்வரை பிடிஆர் சந்திச்சு பேசினாரே என்ன நடந்தது? பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததா?”

“முதல் ஆடியோ வெளில வந்ததுமே முதல்வரை சந்திக்க பிடிஆர் நேரம் கேட்டிருந்தார். ஆனால் நேரம் கொடுக்கப்படல. ரெண்டாவது ஆடியோ வந்ததும் மீண்டும் நேரம் கேட்டிருக்கிறார். ஆனால் அப்போ ஜி ஸ்கொயர் ரெய்ட், முதல்வர் டெல்லி விசிட்னு பரபரப்பா இருந்ததால அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கல. ஆனால் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னால முதல்வர சந்திச்சரணும்னு பிடிஆர் பிடிவாதாம இருந்திருக்கிறார். முதல்வர் சந்திக்கலைனா அமைச்சரவைக் கூட்டத்துக்கு வர மாட்டேன்னு சொன்னார்னு கூட ஒரு தகவல் இருக்கு”

“ஏன் முதல்வர் தவிர்த்தார்? அவர்தானே பிடிஆரை அரசியலுக்கே கொண்டு வந்தது?”

“முதல்வருக்கு அமைச்சர்கள் அத்தனை பேர் மேலும் அதிருப்தி இருக்கு. ஏதாவது பேசி மாட்டிக்கிறாங்க. அது கட்சிக்கு கெட்டப் பேர் கொடுக்குது. பிடிஆர் பேசியதா வந்திருக்கிற ஆடியோ உச்சக் கட்ட கோவத்துக்கு முதல்வரை கொண்டு போயிருக்கு”

“அப்போ அந்த ஆடியோவை முதல்வர் நம்புறரா?”

“நம்புறாரோ இல்லையோ இந்த ஆடியோ கட்சிக்கு ரொம்ப சிக்கலை ஏற்படுத்தியிருக்குனு நினைக்கிறார். அந்தக் கோவத்துலதான் பிடிஆரை சந்திக்காம இருந்திருக்கிறார்.”

“அப்புறம் எப்படி ஒத்துக்கிட்டாராம்?”

“கோபம் கொஞ்சம் தணிஞ்சது..குடும்பத்திலருந்தும் சொல்லியிருக்காங்க…திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் சொல்லியிருக்கிறார். பிடிஆர் அமைச்சரவைக் கூட்டத்துகு வரலனா அது எதிர்க் கட்சிகளுக்கு சாதகமா போய்டும்னு. ஏற்கனவே பிடிஆரை நீக்கிடலாம் சிலர் ஆலோசனை சொன்னபோது துரைமுருகன் தான் தடுத்திருக்கிறார்.”

“முதல்வர் – பிடிஆர் சந்திப்புல என்ன நடந்ததாம்”

“ரொம்ப குறைச்சலான நேரம்தான் சந்திச்சாங்கனு சொல்றாங்க. பிடிஆர் தான் பட்ஜெட், ஜிஎஸ்டி வசூல் பத்தி முப்பதாயிரம் கோடினு சொன்னதை வெட்டி ஒட்டி இப்படி பண்ணிட்டாங்க. நான் கடுமையா பாஜகவை எதிர்க்கிறதுனால பாஜக எனக்கு எதிரா சதி பண்ணுதுனு சொன்னாராம். அது மட்டுமில்லாம, நான் அமைச்சரவைல தொடர்வது உங்களுக்கும் கட்சிக்கும் தர்மசங்கடமா இருக்கும்னா நான் அமைச்சரவைலருந்து விலகிடுறேன்னு சொல்லியிருக்கிறார்”

“முதல்வர் என்ன சொன்னாராம்?”

“முக்கியமான துறையை பார்த்துக்கிற நீங்க கவனமா இருக்க வேண்டாமா? இனிம ஜாக்கிரதையா இருங்கனு சொல்லி உடனே அனுப்பிச்சிட்டாராம். அத்தோட அந்த விஷயத்தை முடிக்க விரும்புகிறார் முதல்வர். அதனால்தான் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் மட்டமான அரசியல் பண்ண விரும்பல முடிச்சுக்கிட்டார்.ஆனா முன்ன மாதிரி பிடிஆர் கிட்ட முதல்வர் நெருங்கிப் பழகுவது கஷ்டம்னு சொல்றாங்க. இதில சில அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி.”

“பிடிஆரின் நிதியமைச்சர் பொறுப்புக்கு தங்கம் தென்னரசு வருவார்னு சொன்னாங்களே…?”

”ஆமாம். அப்படி ஒரு காய் நகர்த்தல் இருந்தது. ஆனா, 12 மணி நேர வேலை மசோதாவுல தனக்கு சரியான தகவல்களை தரலைனு தங்கம் தென்னரசு மேல முதல்வருக்கு வருத்தம் என்கிறார்கள்.”

“சொல்றதைப் பாத்தா எல்லா அமைச்சர்கள் மேலேயும் முதல்வருக்கு வருத்தம் இருக்குப் போல”
“உண்மை, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதைப் பற்றி துரைமுருகன் காமெடி என்ற பெயரில் கொச்சையாக பேசியது, இன்னைக்கு பொன்முடி ஒரு கூட்டத்துல பேசுனது என திமுகவுக்கு அமைச்சர்களால் பிரச்சினைதான்”

“முதல்வர் என்ன பண்ணப் போறாராம்?”

“அமைச்சரவைக் கூட்டத்துல இது குறித்து பேசியிருக்கிறார். அமைச்சர்கள் கவனமா பேசணும். இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜில எல்லாமே பொதுவெளிக்கு வந்திரும். இனிம இது போன்ற பிரச்சினைகள் வந்தால் அமைச்சர்கள் ராஜினாமா செய்யணும்னு ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கிறார்”

“அமைச்சர்கள் ரியாக்‌ஷன் என்ன?”

“எல்லொரும் கப்சிப். அவர்களே அமைச்சரவைலருது நீக்கிடுவாங்களோனு பயத்துல இருக்காங்க”

“அதானே அமைச்சரவை மாற்றம்னு செய்தி வந்ததே? எதுவும் நடக்கலையே?”

”விரைவில் நடக்கும் என்பதுதான் கோட்டை வட்டாரத்து செய்தி. ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. வேங்கைவயல் பிரச்சினையை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் சரியான முறையில் அணுகவில்லை என்று கூறப்படுகிறது. பால்வளத் துறையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கு அவற்றை ஆவடி நாசர் கவனிக்கலனு முதல்வர் நினைக்கிறார்”

“அப்போ இவங்க ரெண்டு பேரும் நீக்கப்படுவாங்களா? புதுசா யார் வருவாங்க?”

“அவங்க நீக்கப்பட வாய்ப்பிருக்கு. டிஆர் பாலு மகன் டி.ஆர்.பி.பாலு அமைச்சராவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்குனு சொல்றாங்க”

“அண்ணாமலை தரப்புல என்ன சொல்றாங்க..திமுக எதுவும் அதிரடியா பண்ணலையே?

“டெல்லில அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்தபோது அந்த ஆடியோ முழுசாக வெளியிடப் போறேன்னு சொல்லியிருக்கிறார். ஆனால் அமித்ஷா இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டதா அண்ணாமலை ஆதரவாளர்கள் சொல்றாங்க. நேரம் வரும் போது வெளியிடலாம், இப்போதைக்கு இது போதும்னு சொன்னாராம்”

”திமுக – பாஜககிட்ட ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துருச்சா? ஏன் வேண்டாம்னு சொன்னார்?”

“நீங்க நினைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்லை. ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்தான் அரசியல்”

”அதிமுக – பாஜக திரும்பியும் மோதிக்கிறாங்க போல?”

“ஆமாம். டெல்லில அமித்ஷா மத்தியஸ்தம் பண்ணியும் சண்டை முடியல. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக 20 சீட் கேக்குறாங்க. அமித்ஷாவே நேரடியா கேட்டிருக்கிறார். அங்க எடப்பாடி பழனிசாமியால எதுவும் சொல்ல முடியல. தேர்தல் வரும்போது பாத்துக்கலாம்னு தலையாட்டிட்டு வந்திருக்கிறார். ஆனா பாஜக அத்தோட நிக்கல, 20 தொகுதிக்கான பட்டியலையும் கொடுத்திருக்காங்க. இப்பவே சொன்னீங்கனாதான் தேர்தல் வேலையை ஆரம்பிக்க முடியும், இன்னும் ஒரு வருஷம்தான் இருக்குன் சொல்லியிருக்காங்க. இதுல அதிமுககாரங்கள் கொஞ்சம் ஷாக்.”

“20 சீட் பாஜகவுக்கு கொடுப்பாங்களா?”

“எப்படி முடியும்? அதனாலதான் இங்க அதிமுகதான் முக்கிய கட்சினு அது தலைமைலதான் கூட்டணினு ஜெயக்குமார் சொல்றார். 1980ல இந்திராகாந்தி காலத்துல திமுகவும் காங்கிரசும் நாடாளுமன்றத் தேர்தல்ல பாதிக்கு பாதி நின்னு ஜெயிச்சாங்க. அது மாதிரி நாமளும் ஜெயிக்கலாம்னு பாஜக தரப்புல சொல்லப்பட்டிருக்கு. அதிமுக ஏத்துக்கிற மாதிரி தெரில”

“ஆனா கடைசில அமித்ஷா சொல்றதுதானே நடக்கும்?”

“அதில என்ன சந்தேகம்? கர்நாடகா தேர்தல்ல பாஜக தோத்துட்டா நமக்கு நல்லதுனு அதிமுககாரங்க வேண்டிக்கிட்டு இருக்காங்க. அங்க தோத்தா நம்ம கிட்ட வாலாட்ட மாட்டாங்கனு சொல்றாங்களாம்” என்று சிரித்தாள் ரகசியா.

“ஜி ஸ்கொயர் ரெய்ட் என்னாச்சு? ஏதாவது விவரம் கிடைச்சதா?”

“ஜி ஸ்கொயர் நிறுவனங்கள்ல பெரிசா எதுவும் கிடைக்கலையாம். ஆனா அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகன், அவரது ஆடிட்டர் தொடர்பான இடங்கள்லதான் நிறைய டாகுமெண்ட்ஸ் மாட்டியிருக்குனு நியூஸ் வருது. இப்படியா டாகுமெண்ட்சை வச்சுக்கிறதுனு சம்பந்தப்பட்டவங்க கோபப்பட்டாங்கனும் நியூஸ் இருக்கு. அந்த டாகுமெண்ட்ஸ் மூலமாதான் ஜி ஸ்கொயரையும் மத்தவங்களையும் மடக்கப் போறாங்கனு வருமானவரித் துறை வட்டாரங்கள் சொல்லுது.”

“அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன? இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரிப்போர்ட் எதுவும் கொடுக்கலையே?”

“மேலிட உத்தரவு வரைக்கும் பைல்கள் பத்திரமா இருக்கு. நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அண்ணாமலை மற்றொரு டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடலாம். அப்போது இன்கம்டாக்ஸ் மேட்டரும் வெளில வரலாம்”

“முதல்வர் வெளிநாடு போவதற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்காங்க போல..எதுக்கு வெளிநாடு போகிறார்?”

“இரண்டு வேலைகள் வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் வாங்குவது ஒரு வேலை. இன்னொன்று லண்டன்ல மருத்துவ பரிசோதனையும் செய்துக் கொள்வார் என்று கூறுகிறார்கள்”

“எந்தந்த நாட்டுக்குலாம் போகிறார்?”

“இங்கிலாந்து போகிறார். ஜப்பானும் போவார் என்று சொல்லுகிறார்கள். இன்னும் முடிவாகத் தெரியவில்லை”

”கூட அமைச்சர்கள் போகிறார்களா?”

“அமைச்சர்கள் தொல்லைகள்ல இருந்து கொஞ்ச நாள் அவர் நிம்மதியா இருக்கட்டுமே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...