No menu items!

2000 ஆண்டுகளாக தமிழை காப்பாற்றுவது சாமானியர்கள்: உதயசந்திரன் ஐஏஎஸ் பேச்சு – 2

2000 ஆண்டுகளாக தமிழை காப்பாற்றுவது சாமானியர்கள்: உதயசந்திரன் ஐஏஎஸ் பேச்சு – 2

தூத்துக்குடியில் நடைபெற்ற 4-வது புத்தகத் திருவிழா மற்றும் 2-வது நெய்தல் கலை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரும் அரசின் தொல்லியல் ஆணையருமான உதயசந்திரன் ஐஏஎஸ் பேசியதன் சுருக்கம் இது.

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“தமிழுக்கு வேறு மொழிகளில் இருந்து வார்த்தைகளை மொழியாக்கம் செய்வதில் கலைச் சொல்லாக்கம் செய்வதில் பல நேரங்களில் பண்டிதர்களின் முயற்சியைவிட சாமானியர்கள் முயற்சி காலம் கடந்து நிற்கும் என்பது வரலாறு. மிகச் சிறந்த உதாரணம், ‘மிதி வண்டி’.  பை சைக்கிள் என்பதற்கு பண்டிதர்கள் தமிழில் சூட்டிய பெயர் ‘ஈருளி’. ஆனால், யாரோ ஒரு சாமானியன் கண்டுபிடித்த ‘மிதி வண்டி’ என்ற சொல்தான் காலத்தில் நின்றது.

தமிழுக்கு தூத்துக்குடி வழங்கிய மிக முக்கியமான இன்னொரு கொடையை இங்கே சொல்ல வேண்டும். உலக மொழிகளில் ஐரோப்பாவுக்கு வெளியே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் வெளிவந்தது தமிழில்தான். ‘கார்டில்ஹா’ (Cartilha) என்ற 38 பக்கங்கள் கொண்ட அந்த நூல் 1554ஆம் ஆண்டு வெளிவந்தது. விசுபன் நகரில் அச்சிடப்பட்டது. தமிழில் அச்சு செய்வதற்கான வசதி அக்காலத்தில் இல்லாததால் இந்த நூல் ரோமன் எழுத்துருவில் அமைந்திருந்தது.

‘கார்டில்ஹா’ வெளிவந்த 1554ஆம் ஆண்டை அவ்வளவு எளிதாக நாம் கடந்துவிட முடியாது. ஏனெனில், அப்போது பேரரசர் அக்பர் அரியணை ஏறியிருக்கவில்லை. அதற்கு இரண்டு வருடங்கள் கழித்துதான் அக்பர் அரியணை ஏறுகிறார். உலகப் புகழ்பெற்ற நாடக மேதை ஷேக்ஸ்பியர், அறிவியல் அறிஞர்கள் நியூட்டன், கலிலியோ பிறந்திருக்கவில்லை. தாஜ்மஹால் கட்டுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் இருந்தன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்து 50 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. தமிழில் அச்சு நூல் வெளிவந்த பின்னர்தான் ரஷ்ய, சீன, கிரேக்க மொழிகளில் நூல்கள் வெளிவந்தது.

ஆம், ஐரோப்பாவுக்கு வெளியே மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் நடப்பதற்கு முன்பே தமிழில் அச்சு நூல் வெளிவந்துவிட்டது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் மூன்று பேர். வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ, தோமா த குருசு ஆகிய இம்மூவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். இதற்காக இன்றும் தூத்துக்குடிகாரர்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

தாய் தெய்வ வழிபாடு குறித்து அதிகமாக பேசப்படுகிறது. தாய் தெய்வ வழிபாடு சிந்து வெளி நாகரிகத்திலும் இருந்தது, ஆதிச்ச நல்லூர் நாகரிகத்திலும் இருந்தது. ஒவ்வொரு தாய் தெய்வ வழிபாட்டுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. நல்லதங்காளுக்கு பின்னால் சொத்துரிமை மறுக்கப்பட்ட பெண்ணின் சோகக் கதை இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நிறைய தாய் தெய்வ வழிபாடு இருக்கிறது. இதையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ராஜ ரவிவர்மா சித்திரங்களுக்கு இணையாக இந்த கரிசல் மண்ணில் ஓவியத்திலும் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது காலண்டர் ஓவியங்கள். காலண்டர் ஓவியங்களில் என்ன புரட்சி இருந்துவிடப் போகிறது என்று இதை சாதாரணமாக கடந்துவிட முடியாது. இன்றும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு தூரத்தில் இருந்தே கடவுளர்களை சாமானியர்கள் பார்க்கவும் வணங்கவும் முடியும் என்றிருக்கும் சூழ்நிலையில், அந்த சாமானியர்களின் இல்லங்களுக்குள் கடவுளர்களை அழைத்து சென்றவை காலண்டர் ஓவியங்கள்தான். பெரும்பான்மை சாமானியர்களின் உளவியல் சிக்கல்களுக்கு இந்த காலண்டர் ஓவியங்கள் மருந்தாக அமைந்தன. அதை சாத்தியப்படுத்தியது இந்த கரிசல் மண்தான்.

சங்க காலம் முதல் இன்று வரை செழித்து வளர்ந்த பகுதி வணிகம் இந்த தூத்துக்குடி பகுதியில் தொடர்ச்சியாக இருக்கிறது. பாரதி, வ.உ.சி மற்றும் கரிசல் மண் தந்த இலக்கியம் அளவு தமிழகத்தின் வேறு எந்த பகுதியும் தந்ததில்லை. இந்த முத்துநகர் வரும் காலத்திலும் தமிழ்நாட்டை, தமிழ் இலக்கியத்தை வழி நடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...