No menu items!

மிஸ் ரகசியா – பாஜகவின் பலே வியூகம்

மிஸ் ரகசியா – பாஜகவின் பலே வியூகம்

இந்த வாரமும் ரகசியா ஆபீசுக்கு வரவில்லை. செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மாமல்லபுரத்திலேயே முகாம் அடித்திருந்தார். ஆனால் எங்கிருந்தாலும் கடமையை செய்ய தவறமாட்டேன் என்ற ரீதியில் காலை 10 மணிக்கு ரகசியாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.

“செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்துவிட்டு பிரதமரே டெல்லிக்கு திரும்பிவிட்டார். ஆனால் நீ இன்னும் ஆபீசுக்கு வரவில்லையே?”

“ஆபீசுக்கு வந்துதான் வேலை பார்க்கணுமா? எங்கே இருந்தாலும் ரகசியாவிடம் இருந்து செய்திகள் வரும். செஸ் பார்த்துக் கொண்டே செய்திகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பெருமை அடித்துக் கொண்டாள்.

“அப்படியா ஒரு சின்ன டெஸ்ட். நேத்து நாடாளுமன்றத்துல மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையா பேசினாங்களே, தெரியுமா?”

“நல்லா தெரியும். கனிமொழிக்கும் ஜோதிமணிக்கும் பதிலளிக்கிறதுக்காக அவங்க பேசினாங்க. அதுவும் தமிழ்லயே பதில் சொன்னாங்க. சரி, அவங்க ஏன் அவ்வளவு காட்டமா பேசுனாங்கனு உங்களுக்குத் தெரியுமா?

“அதை சொல்றதுக்குதானே நீ இருக்கிற. என்ன காரணம் சொல்லு”

“விலைவாசி உயர்வைப் பத்தி திமுக எம்.பி. கனிமொழியும் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் தீவிரமாக பேசுனாங்க. அது எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. அந்த சமயம் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ஒரு குறிப்பு சீட்டு வந்திருக்கு. அதை எம்.பி.க்கள் பார்த்துருக்காங்க. அந்த சீட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா கிட்டருந்து வந்ததுனு சொல்றாங்க. நீங்களும் காட்டமா பதிலடி கொடுங்கனு அந்தக் குறிப்புல இருந்ததாம். அதான் நிர்மலா சீதாராமன் அத்தனை ஆவேசமா பேசுனாங்களாம்”

“பரவாயில்லை செஸ் ஒலிம்பியாட்ல இருந்தாலும் வேலைல கவனமா இருக்கேன்றது தெரியுது. சரி, சென்னைக்கு வந்த பிரதமரை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்தார்களே… அப்போது என்ன பேசினாங்களாம்?”

“ராஜ்பவனில் தமிழக பாஜக தலைவர்களுடன் சுமார் 2 மணிநேரம் பேசியிருக்கிறார் பிரதமர். அப்போது அவர்களிடம் நாடாளுமன்ற தேர்தல் பற்றி கருத்துகளை கேட்டுள்ளார். அவர்களும் கடந்த சில மாதங்களாக கட்சியின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த பிரதமர், ‘எனக்குக் கிடைத்த தகவல்கள்கள்படி கட்சி இன்னும் அந்த அளவுக்கு வலுவடையவில்லை. அதற்கு இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி உள்ளது. வெறும் அறிக்கைகளால் மட்டும் கட்சியை வளர்த்துவிட முடியாது. அதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். முக்கியமாக கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதல்களை மறந்து உழைக்க வேண்டும். ’ வட இந்தியாவில் பாரதிய ஜனதா தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததற்கு காரணம் தொண்டர்களின் உழைப்புதான். நீங்கள் முதலில் தொண்டர்களை அழைத்துப் பேசுங்கள் அவர்களிடம் ஆதரவாக இருந்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.”

”ஓ..அதோட ரியாக்‌ஷன் தான் தமிழ்நாட்டுல ஒரு கோடி தேசியக் கொடியை வீடுகள்ல ஏத்துற திட்டமா? ஒரு கோடி தேசியக் கொடியை தமிழ்நாடு முழுவதும் பாஜக வழங்கப் போகுதுனு செய்தி பார்த்தேன்”

“ஆமா, கரெக்ட். இன்னொரு ஷாக்கையும் கொடுத்திருக்கார். அது மட்டுமில்லாம திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் வைப்பது மக்கள் கிட்ட எடுபடாது என்றும் சொன்னாராம். இதுவரைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை, அவருக்கு மக்கள்கிட்ட நல்ல இமேஜ் இருக்கிறது என்று எனக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன. அதனால் திமுகவை அட்டாக் பண்ணா வளர்ந்திரலாம்னு மட்டும் நினைக்காதிங்க. அது மட்டுமே வளர்ச்சி தராது, வேற வழிகளை பாருங்கனு சொல்லியிருக்கார். இதை கேட்ட தமிழ் நாட்டு பாஜககாரங்களுக்கு ஷாக்.”

“கூட்டணி பற்றி ஏதும் சொல்லியிருக்கிறாரா?”

“கூட்டணி பத்தி கவலைப்படாதிங்க. நல்ல கூட்டணி இருக்கும்னு சொன்னாராம். அதை விட முக்கியமானது நாடாளுமன்றத் தேர்தல்ல 26 இடங்கள்ல பாஜக போட்டி போடும்னு சொல்லியிருக்கார். இது கட்சிக்காரங்களுக்கே ஆச்சர்யம்.”

”அத்தனை இடங்கள்ல போட்டியிட அவங்ககிட்ட ஆளுங்க இருக்காங்களா? கூட்டணி இல்லாம இது சாத்தியமா?”

”கூட்டணிக்கும் மேலிட பாஜக ஒரு வியூகம் அமைச்சிருக்குனு சொல்றாங்க. ஏர்போர்ட்ல ஓபிஎஸ்ஸை பார்க்கும்போது, ‘வீணா பயப்படாதிங்க, ஒண்ணும் ஆகாது’னு தைரியம் கொடுத்திருக்கார். அதுக்கப்புறம்தான் ஓபிஎஸ் முகத்துல மகிழ்ச்சி வந்திருக்கு”

“தேவர் அமைப்புகள்லாம் ஓபிஎஸ்-சசிகலா இணையணும்னு சொல்லி கடிதம் எழுதியிருக்காங்களே?”

“அதுவும் பாஜக ஏற்பாடுதான். நீங்க, தினகரன், சசிகலா ஒண்ணா சேருங்க. அப்புறம் எடப்பாடியைப் பாத்துக்கலாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ள ஒன்றுபட்ட அதிமுக வேணும்கிறது பாஜகவோட இலக்குனு சொல்றாங்க. அதை நோக்கிதான் எல்லாம் நடக்குது. பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்திச்சதும் இந்தப் பின்னணிலதான்”

”எப்படி சொல்ற?”

“ஓபிஎஸ் முக்குலத்தோர் சமூகத்தை ஒருங்கிணைக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் அவர் மூலம் வன்னியர் சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கலாம் என்று சசிகலா கருதுகிறார். வடக்கிலும் மேற்கிலும்தான் எடப்பாடி வலிமையாக இருக்கிறார். அதை குறைப்பதற்கான முயற்சி இது”
“எல்லாம் பலே வியூகங்களாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில் பலன் தருமானுதான் தெரியல. சரி, எடப்பாடி இதற்கெல்லாம் சரிபட்டு வருவாரா?”

“சரி, இதுக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துப்பாரா?

“ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்கிற சூழலை உருவாக்குறாங்க. எடப்பாடிக்கு எதிரான 4000 கோடி ரூபாய் டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கு வாய்தாவில் போய்க்கொண்டிருக்கிறது. அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்று சில விவரங்களுடன் எடப்பாடி மீது குற்றம் சுமத்தி அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மீது ரெய்ட் நடக்கிறது. இதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாருங்க. எடப்பாடி வழிக்கு வருவார் என்பது உங்களுக்குப் புரியும்” என்று சிரித்தாள் ரகசியா.

“திமுக கூட்டணில அதிருப்தினு செய்திகள் வருதே?”

“அதைதான் மாத்ருபூமி நிகழ்ச்சில இல்லனு உடைச்சிட்டாரே முதல்வர். இந்த கொள்கை கூட்டணி தொடரும்னு சொல்லியிருக்காரே. அதுக்கு முந்தின நாள்தான் பிரதமர் மோடியுடன் மேடைல சிரித்துக் கொண்டிருந்தார். அடுத்த நாளே பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்து திமுகவின் நிலைப்பாட்டை சொல்லிட்டார்”

“அப்போ திமுக கூட்டணில குழப்பங்கள் இல்லையா?”

“சலசலப்பு இருக்கும் குழப்பம் இல்லை. 2024 நடாளுமன்றத் தேர்தல்ல ராகுல் காந்தி தமிழ்நாட்டுல ஸ்ரீபெரும்பதூர் தொகுதில போட்டியிடப் போகிறார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் அவர் போட்டியிடுவது பெரிய வெற்றியைத் தரும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் திமுக கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார். அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் கூட்டணியில் குழப்பம் என்பது வீண் வதந்தி”

”காங்கிரஸ் சரி, ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோபம் என்கிறார்களே. போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினைல அரசு எடுக்கும் நடவடிக்கைகள் சரியில்லனு சொல்றாங்களே?

“ ஆமாம். போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் இழுத்துக்கொண்டு இருப்பதால் வருத்தத்தில் இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். 3-ம் தேதி நடக்கும் இறுதிகட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு தெரியாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் கம்யூனிஸ்ட் தலைவர்கள். இது தொடர்பாக கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின்போது அவர்கள் ஆவேசமாக பேசியிருக்கிறார்கள். ‘நீங்கள் நல்ல பேர் சம்பாதிக்க மகளிருக்கு இலவசம், மூத்த குடிமக்களுக்கு இலவசம் என்றெல்லாம் அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமை பற்றி அதிகாரிகள் ஒன்றும் சொல்லாமலா இருந்திருப்பார்கள். ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர் ஓய்வு பெற்று விட்டார் என்ற கடிதத்தை வாங்கிக் கொண்டு வெறுங்கையுடன் செல்கிறார். போக்குவரத்து ஊழியர்களும் மக்கள்தானே’ என்றெல்லாம் ஆவேசமாக பேசியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது அவர்கள் அப்படி பேச திமுக தொழிற்சங்கத்தினர் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.”

“தமிழக நிதி அமைச்சர் மீது மாநில அரசு ஊழியர்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். தமிழக நிதி அமைச்சர் தொடர்ந்து தங்களுக்கு எதிரான கருத்துகளை சொல்லி வருவதாக அரசு ஊழியர்கள் நினைக்கிறார்கள். சமீபத்தில் அவர் பேசும்போது, ‘அரசு ஊழியர்கள் ஒரு லட்சம் ரெண்டு லட்சம் என்று சம்பளம் வாங்குகிறார்கள் வரும் வருவாய் எல்லாம் அவர்களுக்கே போய்விடுகிறது மற்றவர்களையும் இந்த அரசு கவனிக்க வேண்டும். அதுதானே சமூகநீதி’ என்று கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து தாங்கள் போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிக்கை வெளியிட, திமுக ஆதரவு அமைப்பான ஜாக்டோ ஜியோ வை அழைத்து முதல்வர் பேசியிருக்கிறார். ‘அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நீங்கள் நடத்தும் மாநாட்டுக்கு வருகிறேன். ஒரு சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்’ என்று சமாதானப்படுத்தி இருக்கிறார். முதல்வர் பேச்சால் ஜாக்டோ ஜியோ தலைவர்கள் சமாதானம் ஆனாலும் அரசு ஊழியர்கள் நமக்கு எதுவும் கிடைக்காது என்று நம்பிக்கை இழந்து பேசி வருகிறார்கள்.”

“வேறு ஏதாவது செய்திகள் இருக்கிறதா?”

“திமுக மக்களவை உறுப்பினர் ரமேஷ் கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார். தற்சமயம் காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் திமுக எம்பிக்கு நெருக்கடி அதிகமாகிறது. இந்த விஷயத்தில் சட்டப்படி என்னவோ அதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டதாம் திமுக தலைமை. புதிதாக ஒரு சர்ச்சையில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பது திமுகவின் முடிவாம். போதுமா செய்திகள்? நாம் அப்புறம் சந்திப்போம்” என்று தொலைபேசியைத் துண்டித்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...