No menu items!

தமிழ் சினிமாவில் ஐடி ரெய்ட்! – யாருக்கு குறி?

தமிழ் சினிமாவில் ஐடி ரெய்ட்! – யாருக்கு குறி?

தமிழ் சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. காரணம் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள், பைனான்ஷியர் சம்பந்தபட்ட அலுவலகங்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் எதிர்பாராத ரெய்ட்.

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஃபைனான்ஷியரான அன்புசெழியன், பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் பெற்ற தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, வித்தியாசமான படங்களை எடுப்பதில் மும்முரம் காட்டும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு, சூர்யாவை வைத்து பல படங்களை எடுத்த க்ரீன் ஸ்டுடியோவின் ஞானவேல் ராஜா, பாரம்பரியமிக்க சத்ய ஜோதி ப்லிம்ஸின் தியாகராஜன் உள்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் சம்பந்தபட்ட இடங்களில் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்திருக்கிறது வருமான வரித்துறையின் ரெய்ட். மதுரை மற்றும் சென்னையில் அன்பு செழியனுக்கு சொந்தமான 20 இடங்களில் தீவிர சோதனை நடந்திருப்பதால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தமிழ் திரையுலகம் பீதியில் இருக்கிறது.

ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டில் அன்பு செழியன் சம்பந்தபட்ட இடங்களில் வருமான வரித்துறையின் ரெய்ட் நடந்தது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல முன்னணி தயாரிப்பாளர்களுக்கு அவர் ஃபைனான்ஸ் செய்தது தொடர்பான விவரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாயின. இவரிடம் ஃபைனான்ஸ் பெற்ற தயாரிப்பாளர்கள் பட்டியலில், தமிழ் சினிமாவில் இன்று பரபரப்பாக இருக்கும்  90% தயாரிப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பு செழியனிடம் ஃபைனான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோருக்கு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த ரெய்ட் நடந்த பின் அன்பு செழியன் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் செய்வதை கொஞ்சம் குறைத்திருந்தார்.  இதனால்தான் கொஞ்ச நாட்கள் தமிழ் சினிமா சோர்வடைந்திருந்தது என்பது தமிழ் சினிமா புள்ளிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீராகி வருகையில், தற்போது வருமான வரித்துறை தனது கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டிருக்கிறது. இந்த முறை வருமான வரித்துறை களத்தில் இறங்க இரண்டு காரணங்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.

முதலாவது காரணம் விக்ரம் திரைப்படம். இந்தப் படம் சமீபத்தில்   இருநூறு கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் பார்த்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘விக்ரம்’ திரைப்படத்தின் உண்மை வசூல் என்ன, அப்படத்தை முதலில் வெளியிட இருந்தவர் யார், அவரிடமிருந்து இப்படத்தின் வெளியீட்டு உரிமை எப்படி கைமாறியது. அந்த வியாபாரத்தில் நடந்தது என்ற பல கேள்விகளுக்கான பதில்களைத் தேடிதான் இந்த ரெய்ட் நடப்பதாக தயாரிப்பு வட்டாரங்களில் பேச்சு இருக்கிறது.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு கமல் நடித்து வெளியான ‘விக்ரம்’ படத்தை முதலில் அன்பு செழியன் வெளியிடுவதாக இருந்ததாகவும், பின்னர் அப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது என்ற பேச்சும் கோலிவுட்டில் உலா வந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.  

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவரும் உதயநிதிக்கு சிக்கல்களை ஏற்படுத்த இந்த ரெய்டினால் முடியும் என்று கூறுகிறார்கள்.   

பல மேடைகளில் தனது பகட்டு இல்லாத பேச்சினால், மக்களை எளிதில் சென்றடையும்  வகையில் உதயநிதியின் சினிமா பயணம் அமைந்திருப்பது, அரசியல்ரீதியாகவும் பார்க்கப்படுகிறது.  திரைப்பட விழா மேடைகளிலும், புதிய படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்கள் உதயநிதியைப் பாராட்டி பேசுவது, சமூக ஊடகங்களை அந்த காணொலிகள் ஆக்ரமித்து இருப்பது  அவருடைய இமேஜை கடைக்கோடி மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த பிம்பம் உதயநிதி ஸ்டாலினின் தற்போதைய தீவிர அரசியலுக்கு பலன் கொடுக்கும் என்று எதிரணியினர் கருதுகிறார்கள். தமிழ் சினிமா புள்ளிகளின் மீதான இந்த ரெய்ட் மூலம், மறைமுகமாக உதயநிதியை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, சமீபகாலமாக முக்கியமான தமிழ்ப் படங்களை வெளியிட்டு வரும் ‘ரெட் ஜெயண்ட்டின் வேகத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டு, உதயநிதி ஸ்டாலினின் முயற்சிகளுக்கு தடையெற்படுத்தலாம் என்ற கருத்தும் கோலிவுட்டில் இருக்கிறது.

இரண்டாவதாக சமீபகாலமாக சமூக தளத்திலும், அரசியல் களத்திலும் தனது மனதில் பட்டவற்றை வெளிப்படையாக பேசி வரும் சூர்யாவை செக்மேட் செய்யவே இந்த ரெய்ட் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக தனது கருத்துகளை மிக அழுத்தமாக பதிவு செய்து வருகிறார் சூர்யா. மேலும் அவரது மனைவி ஜோதிகா ஒரு விழாவில் கோயில்களுக்கு செலவிடும் பணத்தை கொண்டு பள்ளிக்கூடங்கள் திறந்தால் என்ன என்று பேசியதும் வலதுசாரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

இது போன்று அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த விஷயங்களில் வெளிப்படையாக பேசும் சூர்யாவை அமைதி காக்க வைக்கவே, அவருக்கு நெருக்கமான சினிமா புள்ளிகள் மீது ரெய்ட் நடந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். குறிப்பாக ஞானவேல் ராஜா மற்றும் எஸ்.ஆர். பிரபு இருவரும் சிவகுமாருக்கு உறவினர்கள். அடுத்து கலைப்புலி தாணு தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை தயாரித்து வருகிறார். இவர்களை வைத்துப் பார்க்கும்போது சூர்யாவுக்கு நெருக்கமானவர்கள் மீதும் வருமானவரித் துறை சோதனை நடக்கிறது.

இந்த சோதனைகளுக்கு காரணங்களாக இவற்றை குறிப்பிட்டாலும் நேர்மையாக எந்த வில்லங்கமும் இல்லாமல் கணக்கு வழக்குகள் இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. குறி வைத்தாலும் தாக்க முடியாது.

ஆனாலும் தமிழ் துறையில் இப்போது ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது. சமீபத்தில் சூடுபிடித்த தமிழ்த் துறையை இந்த சோதனைகள் முடக்கிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...