No menu items!

மெரீனா மீனவர்கள் பிரச்சினை – என்ன நடக்கிறது?

மெரீனா மீனவர்கள் பிரச்சினை – என்ன நடக்கிறது?

சென்னை மெரீனாவில் நடக்கும் மீனவர்கள் போராட்டம் முற்றி வருகிறது. சீமான், திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் அங்கு சென்று மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது?

சென்னை மெரீனாவில் இருக்கும் கலங்கரை விளக்கத்துக்குப் பின்புறம் மீனவர்கள் குடியிருப்புகளின் வழியே ஒரு இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையின் ஒரு பக்கம் கடற்கரையும் மறுபக்கம் மீனவர்கள் குடியிருப்புகளும் இருக்கின்றன. மெரீனா லூப் சாலை என்றழைக்கப்படும் இந்த சாலைதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த சாலையின் இருபுறமும் மீனவர்கள் சிறு சிறு கடைகளை வைத்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று பெட்டிகள், ஒரு குடை இதுதான் மீன் கடை. இது போன்று சுமார் 336 கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் கடைகள் அதிகமாகி வருவதால் அங்கு போக்குவரத்து சிக்கலாகிறது, மெரீனா கடற்கரையின் அழகு பாதிக்கப்படுகிறது என்ற பொதுநல வழக்கை தாமாக முன் வந்து சூ மோட்டாவாக (Sou Moto) சென்னை உயர் நீதீமன்றம் விசாரித்தது.

பொதுநலப் புகாரை தயாரித்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் இணைப் பதிவாளர். கலங்கரை விளக்கத்திலிருந்து பட்டிணப்பாக்கம் வரை உள்ள இணைப்பு சாலையை மீனவர்கள் கடைகள் ஆக்கிரமித்திருக்கின்றன. காலையிலும் மாலையிலும் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மீனவர் கடைகளை ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஏப்ரல் 12ஆம் தேதி மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்த காவல்துறையினர் முற்பட்டனர். சுமார் 55 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போன்ற போரட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

’நீதிமன்றத்துக்கு தங்கள் பலத்தை காட்ட முற்படுபவர்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது’ (We strongly condemn everyone who feel that they can show their strength to the court. People must know that they cannot take law into their hands. We cannot tolerate this kind of behaviour).

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பு மெரீனா சாலை வழக்கில் நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை சொல்லியிருந்தது.

மீனவர்களை தங்கள் சுயநலத்துக்காக சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அது மட்டுமில்லாமல் அந்த சாலையில் இருக்கும் உணவகங்களின் சுகாதாரம் குறித்தும் கடுமையாக விமர்சித்தது. ’நாங்கள் பணம் தருகிறோம். நீங்கள் அங்கே போய் சாப்பிட்டுப் பாருங்கள். நடைபாதையில் சமைத்து நடைபாதையில் சாப்பிட வைக்கிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, ‘பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் மீனவர்கள் உட்கார ஏன் அனுமதிக்கிறீர்கள்? அழகான இடத்தை அவர்கள் கெடுக்கிறார்கள். அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுங்கள்’ என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

மீனவர்கள் மீன் விற்க கடைகள் வளாகம் கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் இருக்கிறது. மீனவர்களின் கடைகளை அங்கே மாற்றலாம். அமைதியான முறையில் மீனவர்கள் கடைகளை இடம் மாற்ற அரசு முயல்கிறது என்று தமிழ்நாட்டு அரசு சார்பில் கூறப்பட்டது.

இன்று இந்த சிக்கலுக்கு இடைவேளை விடப்பட்டிருக்கிறது.

மீனவர்கள் கடைகளை இடமாற்றம் செய்ய இரண்டு மாத அவகாசம் கொடுத்திருக்கிறது நீதிமன்றம். வழக்கு ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

அதுவரை மீனவர்கள் தங்கள் கடைகளை சாலையின் மேற்கு பகுதியில் வைத்துக் கொள்ளாலாம். இருபுறமும் கடைகள் வைக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் சுகாதரமின்றி செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டிருக்கிறது.

சென்னையின் பூர்வகுடிகளில் மீனவர்கள் முக்கியமானவர்கள். சென்னை என்ற பெருநகரத்தின் ஆதிகால குடிமக்கள் இவர்கள்தாம். இவர்கள் வாழ்வாதாராம் கடலிலும் கடற்கரையொட்டிய இடங்களிலும்தான் இருக்கிறது.

இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மீனவர் பகுதியில் ஏழு மீனவர் குடியிருப்புகள் இருக்கின்றன. நொச்சிக்குப்பம், நொச்சிநகர், டுமிங் குப்பம், ராஜீவ் காந்தி நகர், முல்லை குப்பம், சீனிவாசபுரம், நம்பிக்கை நகர் ஆகிய ஏழு குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்புகளின் வழியே செல்லும் இணைப்பு சாலை இரண்டரை கிலோ மீட்டர் நீளம்.

1960களில் இந்த சாலை குடியிருப்புகளுக்கு செல்லும் குறுகலான சிறு செம்மண் சாலையாகதான் இருந்திருக்கிறது. அதன்பிறகு அந்த சாலை சிறிது சிறிதாக விரிவாக்கப்பட்டது. 2014ல் முழு சாலையாக விரிவுப்படுத்தப்பட்டது.

சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்து அதிகமாகும்போது வாகனங்கள் மீனவர்கள் குடியிருப்புகளின் வழியே சென்ற இந்த இணைப்பு சாலையை பயன்படுத்த தொடங்கின. முதலில் இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்புகளின் வழியே பெரிய வாகனங்கள் வேகமாக செல்வது ஆபத்து என்று கூறினர்.

தினமும் இரண்டு மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கிறோம் என்று அப்போது மீனவர்களிடம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அது பின்னர் 24 மணி நேர சாலையாக மாறிவிட்டது. மீனவர்களின் சாலையாக இருந்தது மற்றவர்களின் சாலையாக மாறிவிட்டது.

பொதுமக்கள் அதிகமாக பயணிக்க ஆரம்பித்ததும் அந்த சாலையே மீன் சந்தையாக மாறியது. படகிலிருந்து இறங்கும் மீன்கள் உடனடியாக அங்கு விற்பனைக்கு வந்தன. மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

இதுதான் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் வழக்குக்கும் போராட்டங்களுக்கும் காரணம்.

அரசு மீன் கடை வளாகத்தை அருகிலேயே அமைத்துக் கொண்டிருக்கிறது. எட்டாயிரம் சதுர மீட்டரில் இந்த வளாகம் அமைகிறது. வாகன நிறுத்த வசதிகளுடன் டொம்மிங் குப்பத்துக்கு எதிரிலேயே இந்த வளாகம் அமைந்திருக்கிறது. பத்து கோடி ரூபாயும் இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வளாகம் விரைவில் திறக்கப்பட்டால் இப்போதிருக்கும் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...