No menu items!

குஷ்புவின் சேரி அன்பு – கடுப்பான தலைமை – மிஸ் ரகசியா

குஷ்புவின் சேரி அன்பு – கடுப்பான தலைமை – மிஸ் ரகசியா

”என் மேல உங்களுக்கு சேரி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா.

“என்ன, நீயும் குஷ்புவை வம்புக்கு இழுக்கிறீயா? பாவம் ஏதாவது தொடர்ந்து பிரச்சினைல மாட்டிக்கிட்டே இருக்காங்க”

“ஆமாம். அவங்களோட சேரி ட்வீட்டுக்கு பாஜகவுலேயே எதிர்ப்பாம். பிரச்சினை வந்தவுடனேயே அந்த பதிவை நீக்கிட்டு வேற போட சொல்லியிருக்காங்க. ஆனா குஷ்பு பிடிவாதமா, ‘மாட்டேன், நான் எந்த ட்வீட்டையும் மாத்தினதில்லை’னு சொல்லியிருக்காங்க. போலீஸ் கம்ப்ளைண்ட் வரை போகும்னு நினைக்கல”

“போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்களா?”

“சேரி மொழினு சொன்னதுக்காக அவங்க மேல வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்யணும்னு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் கொடுத்திருக்காங்க. எல்லா ஊர்லயும் இப்படி கொடுக்கப் போறாங்க போல”

“குஷ்பு பார்க்காத வழக்கா?”

“கரெக்ட். அவங்க தனிப்பட்ட முறைல வழக்குகளை சந்திச்சா பரவாயில்லை. ஆனா பாஜகவுல இருக்கிற குஷ்பு சேரி மக்களை கேவலமா நினைக்கிறாங்கனு எதிர்க் கட்சிகள் பேசுமேனு பாஜகவினர் கவலைப்படுறாங்க. நீங்க பேசுனதுக்கு விளக்கம் கொடுங்கனு சொல்லியிருக்காங்க”

“ஓ அதான்…அந்த சேரினா ப்ரெஞ்ச் மொழில அன்புன்னு கொடுத்த விளக்கமா?”

“அதே..அதே…இவங்களைலாம் வச்சிக்கிட்டு கட்சி நடத்த வேண்டியிருக்கிறதுனு பாஜகவின் ஆல் பவர்ஃபுல் தலைவர் தன் சகாக்களிடம் சொன்னாராம்”

”அதிமுக தேர்தல் வேலைகளை ஆரம்பிச்சிடுச்சு போல..மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தியிருக்காங்களே..ஏதாவது விசேஷம் உண்டா?”

“உண்டு..உண்டு..உண்டு. எடப்பாடி பழனிசாமியை மாவட்ட செயலாளர்கள் ஒரு விஷயத்துல மடக்கியிருக்காங்க. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் உறவு இல்லனு ஸ்ட்ராங்கா நீங்க சொல்லணும், மக்கள்கிட்ட இன்னும் நம்பிக்கை வரலனு மாசெக்கள் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் தான் கூட்டணி இல்லனு சொல்லிட்டேனேனு எடப்பாடி சொல்லியிருக்கிறார். ஆனா அதை மசெக்கள் ஏத்துக்கல. நீங்க ஏதாவது ஒரு விஷயத்துல் பாஜகவை எதிர்த்தோ மத்திய அரசை எதிர்த்தோ அறிக்கை விடணும். அந்த அறிக்கை ஸ்ட்ராங்கா இருக்கணும்னு சொல்லியிருக்காங்க”

“புரட்சித் தமிழர் என்ன சொன்னாராம்?”

“நிச்சயம் கொடுக்கிறேன். சீக்கிரமே அது போன்ற அறிக்கை வரும்னு உறுதி கொடுத்திருக்கிறார். நீங்க பூத் கமிட்டி வேலையை பாருங்கனு சொல்லியிருக்கிறார். அதுக்கும் மாவட்டச் செயலாளர்கள்கிட்டருந்து சந்தேகங்கள் வந்திருக்கு”

“என்ன சந்தேகம்?”

“பூத் கமிட்டினு நிறைய பேரை போடுறிங்க. அவங்களாம் அதிமுகதானானு அவங்களுக்கு சந்தேகம் இருக்காம். ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆதரவாளர்கள் நிறைய இடங்கள்ல அதிமுக பூத் கமிட்டிக்குள்ள வந்துட்டாங்களாம். அதையெல்லாம் சரி பண்ணணும்னு சொல்லியிருக்காங்க”

“இதுக்கு எடப்பாடி என்ன சொன்னார்?”

“அவங்க அதிமுகவுக்கு வந்தது மாதிரி நீங்க யாரும் பாஜகவுக்கு போய்டாதிங்கனு சிரிச்சிக்கிட்டே சொல்லியிருக்கிறார். ஆக, அதிமுக தேர்தல் வேலைகளை தொடங்கிடுச்சு”

“திமுகவும் ஆரம்பிச்சுடுச்சு போல அவங்களும் பரபரப்பா கூட்டங்கள் போட்டுக்கிட்டு இருக்காங்களே?”

”அவங்க கூட்டணில தொகுதி பங்கீடுதான் பெரிய சிக்கலா இருக்கப் போகுதுனு சொல்றாங்க. காங்கிரஸ் கட்சிக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல்ல 10 சீட் கொடுக்க முடியாது. புதுச்சேரியையும் சேர்த்து 9 சீட்தான் கொடுக்க முடியும்னு திமுக சொல்லுதாம். அதனால காங்கிரஸ் தலைவர்கள் தவிச்சுப் போய் இருக்காங்க. குறிப்பா திருச்சி தொகுதி கைவிட்டு போயிடுமோன்னு திருநாவுக்கரசர் கவலைப்படறார்?”

“திருச்சிக்கு என்ன ஆச்சு?”

“போன தேர்தல்ல திருச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி இருந்தது. திருநாவுக்கரசர் அந்த தொகுதியில் நின்னு எம்பியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனா இந்த முறை திருச்சியை எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க கூடாதுன்னு அமைச்சர் நேரு உறுதியா இருக்காராம். அதனால திருநாவுக்கரசர் டென்ஷன்ல இருக்கார். எப்படியாவது திருச்சியை வாங்கிடுங்கன்னு கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கறார். இன்னொரு பக்கம் கரூர் தொகுதியையும் விட்டுக்கொடுக்க கூடாதுன்னு திமுக்காரங்க முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்களாம். அதனால ஜோதிமணியும் டென்ஷன்ல இருக்காங்க. இதுபத்தி டெல்லி மேலிடத்துல கேட்டப்ப, ‘கவலைப்படாதீங்க 5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு சாதகமா இருக்கும். அதுல 3 மாநிலத்துல ஜெயிச்சாலும் நாம வலுவாயிடுவோம். பிறகு நாம சொல்றதை திமுக கேட்கும்’னு சமாதானம் சொல்லி இருக்காங்களாம்.”

”திமுக சாதி கணக்கெடுப்பு நடத்துதுனு ஒரு தகவல் வருதே”

“ஆமாம். பூத் கமிட்டி ஆட்களுக்கு அப்படி ஒரு வேலை கொடுத்திருக்காங்க. அவங்க பூத்ல இருக்கிற அத்தனை வாக்காளர்களையும் சந்திக்கணும், அவங்களைப் பத்தி எல்லா விவரங்களையும் கலெக்ட் பண்ணனும் சொல்லியிருக்காங்க. அப்படியே அவங்க சாதி என்னன்றதையும் வாய் மொழியா கேட்டுக்கணும்னு சொல்லியிருக்கிறதா திமுக வட்டாரங்கள் சொல்லுது. ஆனா குறிப்பு புத்தகத்துல சாதி பத்தி ஏதுவும் இல்லை.”

“எதுக்காம் இது?”

“சாதி நிலவரத்துக்கு ஏற்ப அந்தப் பகுதில தேர்தல் வியூகத்தை அமைக்கதான்”

“10 ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கே?”

‘தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுவது மற்றும் விற்பனை செய்வதில் நடந்த முறைகேடுகள் பற்றிய புகாரை தற்சமயம் அமலாக்கத் துறை விசாரிச்சுட்டு வருது. ஏற்கெனவே கனிமவளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையாகிட்ட அவங்க 2 நாள் விசாரணை நடத்தி இருக்காங்க. அதைத் தொடர்ந்துதான் 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி இருக்காங்க. இது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு. ஆளுங்கட்சி செஞ்ச தப்புக்கு நாம அமலாக்கத் துறைகிட்ட கைகட்டி நிக்கணுமான்னு அவங்க புலம்பறாங்களாம். இந்த நிலையில 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழக அரசு முறையீடு தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செஞ்சிருக்கு.”

“இது தொடர்பா கனிம வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாகிட்ட அமலாக்கத் துறை என்ன விசாரிச்சாங்களாம்?”

“கனிமவளத் துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவை அந்த துறையில நடந்த சில ஊழல்கள் தொடர்பா அமலாக்கத் துறை விசாரணைக்கு கூப்பிட்டிருக்கு. அப்ப அவர்கிட்ட நேரடியாவே, ‘எங்க டார்கெட் அமைச்சர் துரைமுருகன்தான். அதேசமயம் நீங்களும் பணம் சம்பாதிச்சு இருக்கறதா தகவல் வந்திருக்கு. அதுக்கான சில ஆதாரங்கள் எங்ககிட்ட இருக்கு. நீங்க உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னால் உங்களுக்கு எந்த சேதாரமும் வராம பாத்துக்கறோம்’ன்னு உத்தரவாதம் கொடுத்திருக்கு. இதைத்தொடர்ந்து அவரும் அப்ரூவரா மாறி பல விஷயங்களை அமலாக்கத் துறைகிட்ட சொல்லிட்டாராம். இதுக்கு பிறகு அவர்கிட்ட, ‘விசாரணைல என்ன நடந்ததுன்னு அமைச்சர் துரைமுருகன் கேட்பார். அப்ப அவர்கிட்ட இங்க நடந்ததை அப்படியே சொல்லுங்க. அவரை விசாரிக்கவும் சம்மன் தயாரா இருக்கறதா சொல்லுங்க’ன்னு சொல்லி இருக்காங்க.”
“இதை கேட்டதும் துரைமுருகன் ஷாக்காகியிருப்பாரே?”

“இல்லை. அவர் இது வழக்கமான விஷயம்தான்னு டென்ஷன் இல்லாமல் இருக்கிறாராம். நான் எந்த தப்பையும் செய்யல மத்திய அரசு மிரட்டுறதுக்கெல்லாம் பயப்பட முடியாது, நான் இந்திராகாந்தியையே பார்த்தவன்னு தனது நெருக்கமானவர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார். இன்னும் சில மாதங்கள்ல எலெக்‌ஷன் வந்துரும். அதுக்கப்புறம் எல்லாம் சரியாய்டும்னு அவர் நம்புறார்னு அவருடைய ஆதரவாளர்கள் சொல்றாங்க”

“துரைமுருகனுக்கு எதிரா திமுகவோட கொள்கை பரப்பு துணைச் செயலாளரா இருந்த குடியாத்தம் குமார் வீடியோ எல்லாம் வெளியிட்டு இருக்காரே?”

“குடியாத்தம் குமார் சமீப காலமா வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை பொது வெளியில் கடுமையா விமர்சனம் செஞ்சிருக்கார். நேர்லயும் அவரை பலமுறை வம்புக்கு இழுத்திருக்கார். அதனால அவரை தற்காலிகமா கட்சியை விட்டு நீக்கி இருக்காங்க. அதனால கோபமான அவர் புதுசா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கார். அதில் மணல் கொள்ளையில் துரைமுருகன் 60 ஆயிரம் கோடி கொள்ளையடிச்சு இருக்கிறதா சொல்லி இருக்கார். அந்த வீடியோ இப்ப வைரலாகி இருக்கு. இப்படி வில்லங்கமான ஆட்களை தாஜா செஞ்சு தன்னோட வச்சுக்கத் தெரியாத மூத்த தலைவரா துரைமுருகன் இருக்காரேன்னு வேலூர்ல இருக்கற கட்சிக்காரங்க பேசிக்கறாங்களாம். இப்படி ஒரு பக்கம் அமலாக்கத் துறை, இன்னொரு பக்கம் கட்சியில இருக்கற எதிர்ப்பாளர்கள்னு துரைமுருகனுக்கு சமீபமா நெருக்கடிதான்”

“செந்தில் பாலாஜியை முதல்வர் மருத்துவமனைக்கு போய் சந்திப்பார்னு சொன்னாங்க. ஆனா சந்திக்கலையே?”

“செந்தில் பாலாஜியை சந்திக்க முதல்வர் தயாராத்தான் இருந்தார். ஒரு முதல்வர், உடல்நிலை சரியில்லாத சக அமைச்சரை விசாரிப்பதில் என்ன தவறுங்கிறது அவரோட வாதம். ஆனா செந்தில் பாலாஜி இப்ப ஒரு கைதி. அவரை நீங்கள் சந்திக்கறது தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தும்னு உளவுத் துறை அதிகாரிகளும், மூத்த அமைச்சர்களும் முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதனாலதான் முதல்வர் செந்தில் பாலாஜியை பார்க்கிறதை தவிர்த்திட்டாராம்.”

”மன்சூரலிகான் விவகாரம் சப்புனு முடிஞ்சுரும் போல, த்ரிஷா மன்னிப்பது தெய்வீகமானதுனு சொல்லிட்டாங்களே”

“ஆமாம். மன்சூரலிகான் பிரச்சினையை வளர்த்தா எல்லோர் பத்தியும் ஏதாவது பேசிக்கிட்டு இருப்பார். சட்டுபுட்டுனு பிரச்சினையை முடிச்சுட்டு அவர்கிட்ட மைக்கை நீட்டாம பாத்துக்குங்கனு சினிமாத் துறை உச்சங்கள் இந்தப் பிரச்சினையை முடிச்சு வச்சிருக்காங்க. அவங்க வண்டவாளம்லாம் வெளில வந்துரக் கூடாதுல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...