No menu items!

கம்பீர விஜயகாந்தின் கண்ணீர் கதை!

கம்பீர விஜயகாந்தின் கண்ணீர் கதை!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும், மின்சாரம், சாலைகள், 2ஜி சிக்னல் போன்றவை இருந்ததோ இல்லையோ ஆனால் விஜய்காந்தின் ரசிகர் மன்றங்கள் இருந்தன.

எந்த கிராமத்திற்கு சென்றாலும் விஜயகாந்த் கம்பீரமாக நிற்கும் கட் அவுட்கள் வரவேற்றன.

அந்தளவிற்கு திரைப்பட ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் விஜயகாந்த் வியாபித்து இருந்தார்.

‘கம்பீரமும், தைரியமும்தான் விஜயகாந்தின் டி.என்.ஏ.’ என்று சொல்லுமளவிற்கு ஒரு ஆளுமையாக விஜய்காந்த கொண்டாடப்பட்டார்.

இதுவே அவரை 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக்கி அழகுப் பார்த்தது. அவருடைய படங்களில் அவருடைய கதாபாத்திரம் எதிர்க்கொள்ளும் பெரிய பிரச்சினையைப் போலவே, நடிகர் சங்கத்திலும் அவருக்கு ஒரு பிரச்சினை காத்திருந்தது. அப்போது நடிகர் சங்கம் பெரும் கடனில் மூழ்கியிருந்தது.

கொஞ்சமும் அசராமல், நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவற்றில் கிடைத்த லாபத்தை வைத்து நடிகர் சங்க கடனை அடைத்தார்.

இதுபோதாது, நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு வறுமையில் வாடக்கூடாது என்பதற்காக நலிந்த கலைஞர்களுக்காக ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தினார். பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் பணத்தை ஓய்வூதியமாக அளிக்க ஏற்பாடு செய்தார்.

2022-ல் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் இல்லை என கர்நாடகா முரண்டுப் பிடித்த போது, தமிழ் திரையுலகையே ஒன்று சேர்த்து, ‘காவிரி நீரை தராத கர்நாடகாவுக்கு, தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கப்படும் மின்சாரம் இல்லை’ என்று நெல்லையில் கம்பீரமாக முழக்கமிட்டார்.

ஏதாவது ஒரு நல்லதை செய்ய வேண்டுமென்றால், சினிமா மீது மக்களுக்கு இருக்கும் மோகம் போதாது. அதிகாரம் வேண்டும். அதற்கு அரசியல்தான் ஒரே களம். இப்படியொரு எண்ணத்தோடு, 2005-ம் ஆண்டு செப்டெம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைப்பெற்ற மாபெரும் மாநாட்டில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை’ தொடங்கினார்.

சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டு, காட்டன் சட்டை வேட்டி என ஒரு முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.

2006-ம் ஆண்டில் இருந்து தனது பிறந்த நாளை அவர் ‘வறுமை ஒழிப்பு தினம்’ ஆக பின்பற்ற தொடங்கினார். ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்கே’ என்ற முழக்கத்தோடு எளியவர்களுக்கு உதவ ஆரம்பித்தது அவரது விசுவாசிகளின் படை.

2006 -ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனியொருவனாக சட்டசபைக்குள் நுழைந்தார். சிங்கிள் சிங்கமாக கர்ஜித்தார்.

2011-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவரது தேமுதிக 29 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராக பலம் காட்டினார் விஜயகாந்த்.

இப்படியொரு வரலாறு இருக்கையில்….

வெள்ளித்திரையில் தீவிரவாதிகளையும், வில்லனின் ஆட்களையும் மெஸ்ஸி ப்ளஸ் பீலேவையும் கலந்தடித்த பாணியில் ஒரே ‘கிக்’கில் பந்தாடிய அட்ரெனலின் ஆக்‌ஷன் ஹீரோ விஜயகாந்தை…

கபினி அணை, முல்லைப் பெரியாறு அணை போல ரசிகர்கள் பட்டாளத்தை தங்கள் வசம் தேக்கி வைத்திருந்த ரஜினி மற்றும் கமல் என்ற வசீகர நட்சத்திரங்களையும் மீறி, தமிழகத்தின் கடைகோடி கிராமங்களிலும் தனக்கென ரசிகர்கள் மன்றத்தைப் பெற்றிருந்த புரட்சிக்கலைஞரை…

பத்திரிகைகளின் பேட்டி என்றால், யோசித்து யோசித்துப் பேசி புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயற்சிப்பதை விட மனதில் பட்டதை டென் தவுசண்ட் வாலா போல தெறிக்கவிட்ட தேமுதிக தலைவரை…

இப்போது பெரிய சலனம் எதுவுமில்லாமல், தளர்ந்துப் போய், பேச முடியாமல் அமர்ந்திருக்கும் அவரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இப்பொழுது மீண்டுமொரு உடல்நிலை பிரச்சினை. கடந்த 18 நவம்பர் 2023 அன்று விஜயகாந்த் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைப் பெற்று வரும் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது.

ஆனால் செயற்கை சுவாசம் குறித்து வெளியான தகவலில் உண்மை இல்லை என தேமுதிக கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருக்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.’ என்றார்.

விஜயகாந்திற்கு கணையத்தில் கற்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம், சிறிய கொழுப்புக்கட்டிகள் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பினால் நிலைக்குலைந்து போயிருக்கிறார்.

விஜய்காந்தா இது என்று ஒவ்வொருவரையும் முதல் முறையாக கேள்வி கேட்கத்தூண்டிய தருணம்..கலைஞரின் சமாதிக்கு அவர் வருகைத் தந்த அந்த நிமிடங்கள்தான்.

சில வருடங்களுக்கு முன்பு, கலைஞரின் ’நிரந்தர ஒய்வு’ இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது, எடுக்கப்பட்ட வீடியோவில் பார்த்த அனைவருக்கும் ஹை வோல்டேஜ் ஷாக் அடித்திருக்கும் என்பது நிச்சயம். ‘ பார்க்கவே கஷ்டமா இருக்கு …பாவம்’ என முணுமுணுக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த சூழ்நிலையிலும், கலைஞர் மறைவையொட்டி விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்ட அந்த வீடியோ, அவரை வைத்து சமூக வலைதளங்களில் பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கும், மீம்ஸ் க்ரியேட்டர்களிடமும் கூட ஒரு பரிதாபத்தை உருவாக்கிவிட்டதை உணரமுடிந்தது

நாலு அடியெடுத்து வைத்தாலே மூச்சு வாங்கும் உடல்நிலை பஞ்சாயத்துகள் இருந்தாலும், பப்ளிக் வந்துவிட்டால் விறுவிறுவென சிங்க நடையோ அல்லது சிங்கார நடையோ போட்டுவிட்டு, சுவற்றுக்குப் பின்பக்கமாக போய் அக்கடா என உட்காரும் ஹீரோக்கள் ஹீரோயின்கள் அதிகம். காரணம் நட்சத்திரங்களுக்கு இமேஜ் முக்கியம். உற்சாகமூட்டும் எனர்ஜி டிரிங்குக்கு கூட இன்ஸ்பிரேஷன் நம்ம தலைவருடைய எனர்ஜிதான் என ரசிகன் சிலாகிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் நட்சத்திரங்களே அல்ல என ரசிகர்களே முடிவு செய்துவிடுவார்கள்.

ரிட்டயர்ட் வயதைத் தாண்டியிருந்தாலும், நாற்காலி இனி கிடைக்குமா என சந்தேகமிருந்தாலும், கட்சிகாரர்களை விழிப்புடனேயே வைத்திருக்கும் நடைப்பயணம், போராட்டம், பரபரப்பான அறிக்கை என 24×7 பொலிடிக்கல் பொடிமாஸ் போடுவதில் மும்முரமாக இருந்தால்தான் அவர் ’வருங்கால தமிழகம்’. இல்லையென்றால் உடன்பிறப்பும் உடனடியாக ட்ராப் ஆகிவிடும்.. ரத்தமும் சுண்டிவிடும்.. தோழர்களும் நொந்து விடுவார்கள்..தம்பிகளும் பம்மிவிடுவார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், பரபரப்பான ஆக்‌ஷன் ஹீரோ, எதிர்பார்ப்பை கிளப்பிய அரசியல் தலைவர் என தமிழக அரசியலில் தனது இருப்பை அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் காட்டிய விஜயகாந்த், கலைஞருக்கு அஞ்சலி செலுத்த மெரீனாவுக்கு வந்தார்.

விஜயகாந்த் பொதுவெளிக்கு வந்த அந்த தருணத்தில் அவரது கால்கள் இடறுகின்றன. கேப்டன் என கம்பீரமாக வலம் வந்தவர் தடுமாறுகிறார். நான்கு அடிகள் நடந்ததுமே அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. கைகள் எங்கோ செல்கின்றன. மச்சான் அந்த கைகளை லாவகமாகப் பற்றி கொள்கிறார். மறுபக்கம், நிற்க தடுமாறும் தருணத்தில் சட்டென்று கணவரைப் பிடித்து தாங்குகிறார் மனைவி. அனல் தெறிக்க வசனம் பேசும் அவரால் அந்த தருணத்தில் பேசவே முடியவில்லை. ஆக்‌ஷனில் பாய்ந்து மிரட்டும் அவரால் நடக்கவே முடியவில்லை. தனது கர்ஜனையிலேயே எதையும் கட்டுப்படுத்தி பழக்கப்பட்ட, விஜயகாந்திற்கு அவரது உடல் உறுப்புகளே கட்டுப்பட மறுக்கின்றன.
கண்களைத் தவிர…

மெரீனாவின் அலையோசையின் பின்னணியில் ஒய்வெடுத்து கொண்டிருக்கும் கலைஞரின் ‘நிரந்தர ஓய்வு’ இடத்திற்கு அவர் வந்தபோது…

விஜயகாந்தின் மனதிற்குள் இருந்ததை, அப்படியே கண்ணீராய் காட்டிக்கொடுத்தன அந்த கண்கள்.
இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஆக்ரமித்து இருப்பவை, ஆக்‌ஷனில் கலக்கிய விஜயகாந்த் எந்தவித ரியாக்‌ஷனும் காட்டமுடியாமல் தவித்த அந்த பதபதைப்பான நிமிடங்கள்தான். விஜயகாந்த் ஒரு குழந்தையைப் போல நடந்து வந்ததது முதல் அனைத்தும் வீடியோ கேமராக்களில் முழுமையாக பதிவு செய்யப்பட்டன. அவரது மனைவியோ மச்சானோ தடுக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ஒருவேளை அவர்கள் அதை ஒரு செய்திக்கான வாய்ப்பாக எடுத்து கொண்டிருக்கலாம்.

ஆனால்…விஜயகாந்த் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களுக்கு, கேமராக்களின் சூட்சுமமும் அத்துபடி. என்ன கேமரா.. என்னென்ன லென்ஸ்கள், எந்த ரேஞ்சில் எப்படி ஃப்ரேமில் வரும் என்பதை அவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட அனுபவம் இருந்தும் தனது மச்சானின் கைகளைப் பிடித்து தடுமாறி நடந்து வந்ததை பற்றி அவர் கவலைப்படவில்லை. இப்படி பரிதாபமாக இருப்பவரால், இனி அரசியலில் தீவிரமாக ஈடுபடமுடியுமா? ஆட்சியைப் பிடிக்க முடியுமா? அப்படியே ஆட்சியைப் பிடித்தாலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியுமா? இவருக்கு ஒட்டு போட்டால் வெயிட்டா இல்லை வேஸ்ட்டா என்ற கூட்டிக்கழித்துப் பார்க்கும் மக்கள் மனதில் தனது எதிர்காலத்தைப் பற்றி பல கேள்விகள் எழும் என்பதை விஜயகாந்தும் அறிவார். தான் தடுமாறி நடப்பது, தனது அரசியல் வாழ்க்கையையே தள்ளாட வைக்கக்கூடும், தனது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதையும் அறிந்தவர்தான் விஜயகாந்த். ஆனாலும் கூட, அவர் எதையும் கண்டுக்கொள்ளவில்லை என்பதையே அவரது வருகை அப்போது காட்டியது..

தனது உடல்நிலையை மறைத்தோ, சிகிச்சைகளை காரணம் காட்டியோ இப்படி ஒரு பரிதாபமான நிலையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்திருக்கலாம்..ஆனால்.. கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நிமிடங்களில்… அந்த மெரீனாவில்… உண்மையிலேயே ஒரு கேப்டனாக உயர்ந்து நின்றார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் கன்னங்களில் வழிந்தோடிய அந்த கண்ணீரில் நடிப்பில்லை. நான் இப்படிதான் என உணர்த்திய அந்த அசல் விஜயகாந்த் எப்பொழுதும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோதான்..

அன்று தனது பாசத்திற்குரிய தம்பி விஜியைப் பார்த்து, கருணாநிதியின் ஆன்மா கூட கண்ணீர் வடித்திருக்கும்.

நீங்கள் விட்ட அந்த கண்ணீர் வீணாகாது. மீண்டு வாருங்கள் கேப்டன்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...