No menu items!

தூது விட்ட ஜோதிமணி திணறும் தமிழிசை – மிஸ் ரகசியா  

தூது விட்ட ஜோதிமணி திணறும் தமிழிசை – மிஸ் ரகசியா  

அண்ணாமலையின் பிரஸ் மீட்டை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தபோது ரகசியா ஆபீசுக்குள் நுழைந்தாள்.

 “என்ன கச்சத்தீவு பஞ்சாயத்து ஓடுதா?”

 “ஆமாம்… பாஜககாரங்க இரண்டு நாளா அதைப்பத்தி மட்டும்தானே பேசறாங்க?”

 “தமிழ்நாடு மட்டுமில்லை. நாடு முழுக்க பாஜக கச்சத்தீவைத்தான் ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கு.”

 “இப்ப அந்தோணியார் திருவிழாகூட இல்லையே. அப்புறம் எப்படி கச்சத்தீவுக்கு திடீர் அந்தஸ்து கிடைச்சது?”

’அது அமித்ஷா ஐடியானு சொல்றாங்க. தமிழ்நாட்டுல உணர்ச்சிபூர்வமா ஒரு விஷயத்தை வச்சு பிரச்சாரம் பண்ணுங்கனு சொல்லிருக்காரு. தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் எதுனு லிஸ்ட் அனுப்புங்கனும் சொன்னாராம்”

”தமிழ்நாட்டுல உணர்ச்சிபூர்வமான விஷயங்கள்னா எல்லாத்துக்கும் பாஜக எதிராதானே இருக்கும்? நீட், இந்தி திணிப்பு..இப்படி சொல்லிட்டே போலாமே?”

”ஆமா, அதுனால கச்சத் தீவை செலக்ட் பண்ணியிருக்காங்க. இலங்கைத் தமிழர் பிரச்சினைல திமுக தமிழர்களுக்கு துரோகம் செஞ்சதுனு பேசலாம்னி சிலர் ஐடியா கொடுத்திருக்காங்க. இலங்கைத் தமிழர் பிரச்சினை இங்க ஓட்டு வாங்கதுனு அதை வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்காங்க”

“கச்சத் தீவு மட்டும் ஓட்டு வாங்கிக் கொடுக்குமா?”

”நம்பிக்கைதானே வாழ்க்கை. அமித் ஷாவே கொடுத்த ஐடியான்றதுனால நிர்மலா சீதாராமன்லருந்து திருப்பதி நாராயணன் வரை எல்லோரும் கச்சத் தீவு பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க.”

“ப.சிதம்பரம் இதுக்கு பதில் சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். 2015ல இதே கச்சத் தீவு பத்தின வெளியுறவுத் துறை ஆர்டிஐ தகவல்ல, கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது. நாம வாங்கவும் இல்லை, திருப்பிக் கொடுக்கவும் இல்லைனு சொல்லியிருக்கு. அதை ப.சிதம்பரம் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதுக்கு மத்திய அரசுகிட்டருந்து பதில் இல்லை. அது மட்டுமில்லாம, பத்து வருஷமா மத்தியில ஆட்சில இருக்கிங்க. கச்சத் தீவை மீட்கறதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்னனு எதிர்க் கட்சிகள் திருப்பிக் கேக்குறாங்க. அதனால கச்சத் தீவு பிரச்சினையை ரெண்டு மூணு நாள்ல பாஜக கைவிட்டுடும்னு பாஜகவிலேயே பேசிக்கிறாங்க”

“மகன் கார்த்தி சிதம்பரத்துக்காக ப.சிதம்பரம் களம் இறங்கி இருக்காரே?. அவர் தப்பிச்சுடுவாரா”

 “உள்ளூர் காங்கிரஸ்காரங்க பலரும் தன் மகனுக்கு எதிரா இருக்கறதால சிவகங்கை தொகுதியில பம்பரமா சுத்திட்டு இருக்கார் ப.சிதம்பரம். இந்த தேர்தல்ல மகன் கார்த்தி சிதம்பரம் ஜெயிக்கறதை தன்னோட கவுரவப் பிரசினையா அவர் பார்க்கிறார். திமுக அமைச்சர்கள் ரகுபதி,  பெரிய கருப்பன், மெய்யநாதன்னு மூணு பேரையும் கார்த்தி சிதம்பரத்தோட வேட்புமனு தாக்கலுக்கு ஒண்ணா கூட்டிட்டு வந்திருக்கார். அவங்ககிட்ட மகனுக்காக உருக்கமா அவர் வேண்டுகோள் விடுத்திருக்காராம். அமைச்சர்களும் அவரைத் தட்டமுடியாம கார்த்திக்கு ஆதரவா களத்துல இறங்கி இருக்காங்க. கார்த்திக்கு திமுக மேலிட ஆதரவும் இருக்கு”

”ஆயிரம் ரூபாய் பத்தி கார்த்தி சிதம்பரம் பேசுனா வீடியோ ஒண்ணு வைரலா சுத்திக்கிட்டு இருக்கே”

“ஆமா. அந்த வீடியோவால திமுககாரங்க ஹேப்பி. ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுத்தா அவங்க உள்ளூர்ல செலவழிப்பாங்க. ஒரு ஊர்ல 20 பெண்கள் இருந்தா 20 ஆயிரம் ரூபாய் அந்த ஊர்ல செலவழிப்பாங்க. அது அந்தப் பகுதி பொருளாதாரத்தை உயர்த்தும்னு ஷார்ட்டா பேசியிருக்கிறார். அதை இப்ப திமுககாரங்களே வைரலாக்கிட்டு இருக்காங்க”

 “செந்தில் பாலாஜியை ஜெயில்ல போய் பார்த்தாதான் தேர்தல்ல வேலை செய்வோம்னு ஜோதிமணிகிட்ட கரூர் திமுககாரங்க சொல்லிட்டு இருந்தாங்களே… அவர் போய் செந்தில் பாலாஜியை பார்த்தாரா?”

 “செந்தில் பாலாஜியை ஜோதிமணி நேர்ல போய் பார்க்கலை. ஆனா ஜெயிலுக்கு போய் அவரை அடிக்கடி சந்திக்கறவங்ககிட்ட தன்னோட தரப்பு நியாயத்தைச் சொல்லி இருக்கார்.  ‘நீங்க இல்லாம நான் ஜெயிச்சிருக்க மாட்டேன். நான் எம்பி ஆனதுக்கு காரணமே நீங்கதான். உங்களை தப்பா பேசினதுக்கு மன்னிக்கணும். இனி அப்படி நடந்துக்க மாட்டேன்’ன்னு செந்தில் பாலாஜிகிட்ட ஜோதிமணி சொல்லி அனுப்பி இருக்கார். இந்த தூது ஒர்கவுட் ஆகியிருக்கு. செந்தில் பாலாஜி தன்னோட ஆதரவாளர்களுக்கு  பச்சைக் கொடி காட்ட, அவங்களும் ஜோதிமணிக்காக களத்துல இறங்கி இருக்காங்க. இதெல்லாம் போதாதுன்னு கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரும்  முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டு ஜோதிமணிக்கு உதவுங்கன்னு வேண்டுகோள் விடுத்திருக்கார்.”

 “கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் ஏதோ வருத்தத்துல இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

 “கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அன்புமணியோட மைத்துனர். அவர் பாமக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கார். தான் அன்புமணி ராமதாஸோட மைத்துனர்ங்கிறதால தனக்கு உதவச் சொல்லி  அவர் கேட்டிருக்கிறதா சொல்றாங்க.  இந்த விஷயம் தங்கர் பச்சனுக்கு தெரிஞ்சதும் அவர் அப்செட் ஆகிட்டாராம். இதுபத்தி அவர் ராமதாஸ்கிட்ட பேசி இருக்கார். அவர் தங்கர் பச்சானை சமாதானப்படுத்தி இருக்கார், அதோட கடலூரில் பிரச்சாரம் செய்த அவர், ‘அவருக்கு இவர் சொந்தம். இவர் அவருக்கு வேண்டியவர் என்றெல்லாம் சொல்வார்கள். அதை எல்லாம் நம்பாதீர்கள். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை’ன்னு பேசியிருக்கார். அதோட தங்கர் பச்சனுக்கு வாக்கு சதவீதம் குறைஞ்சா கட்சி நிர்வாகிகளை  கூண்டோடு மாத்திடுவேன்னு எச்சரிக்கை செஞ்சிருக்கார். அதனால விஷ்ணு பிரசாத்தின் தொடர்ப்பு எல்லையில் இப்ப பாமக நிர்வாகிகள் யாரும் இல்லை.”

 “தங்கர் பச்சானுக்கு ஆதரவா வந்த ராமதாஸ், வேலூர்ல ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவா பிரச்சாரம் செய்யலையே?”

 “அவருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையிலான நட்புதான் இதுக்கு காரணம். அரசியலைத் தாண்டி துரைமுருகனும் ராமாதாஸும் நல்ல நண்பர்கள். இரு கட்சிகளின் கூட்டணிக்குகூட ஒரு காலத்துல துரைமுருகன் முயற்சி செஞ்சிருக்கார். அதனால ராமதாஸுக்கு அவர் மேல ஒரு பாசம் உண்டு, இந்த சூழல்ல வேலூர்ல தன் மகனோட வெற்றிக்கு எந்த விதத்துலயும் ராமதாஸ் தடையா இருக்க கூடாதுன்னு துரைமுருகன் கோரிக்கை வச்ச்சாராம். அதனால  அரக்கோணம் வரை பிரச்சாரத்துக்கு வந்த ராமதாஸ், வேலூரை டீல்ல விட்டிருக்கார். இதனால நொந்துபோன ஏ.சி.சண்முகம் டெல்லி பாஜக தலைவர்கள்கிட்ட இதுபத்தி புலம்பி இருக்காராம்.”

 “பாஜக சைட் பிரச்சாரம் எப்படி இருக்கு?”

 “கோவை, தேனி, ராமநாதாபுரத்துல ஆர்பாட்டமா பிராச்சாரம் செய்யறாங்க. ஆனா மத்த பகுதிகள்ல சொல்லிக்கற மாதிரி இல்லை.”

 “தமிழிசை கூடவா நல்லா பிரச்சாரம் செய்யலை?”

 “தமிழிசை பிரச்சாரமெல்லாம் நல்லாதான் செய்யறார். ஆனா அவர் சரியா பணத்தைக் காட்டாததால கட்சிக்காரங்க அவர் மேல அதிருப்தியில இருக்காங்களாம். அவர் ஒரு டீ கூட வாங்கித் தரலைன்னு கட்சிக்காரங்க புகார் சொல்றாங்க. கேட்டா, ‘இன்னும் செலவுக்கு பணம் வரலை. வரட்டும்’ன்னு சொல்றாராம். டீ காசுக்குகூட பணம் இல்லாமலா அக்கா தேர்தல்ல நிக்காறாங்கன்னு அவர் காதுபடவே பாஜககாரங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க.அதனால அவர் பிரச்சாரம் கொஞ்சம் திணறிக்கிட்டு இருக்கு”

“தேர்தல் பத்திரங்கள்ல கிடைச்ச காசை தமிழிசைக்கு கொடுக்கலையா?”

“தமிழுக்கு எங்க காசு கிடைச்சிருக்கு சமஸ்கிருதத்துக்குதானே டெல்லி காசு போகுது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...