No menu items!

கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்கவில்லை – இலங்கை கருத்து

கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்கவில்லை – இலங்கை கருத்து

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கச்சத்தீவு விவகாரம் பற்றி இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கருத்து சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றும் கச்சத்தீவை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள சில கருத்துகள்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:

கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போது ஏன் பேசலாம் எனக் கேட்கலாம். 50 வருடங்களாக உண்மைக்குப் புறம்பான பிரசாரம் நடந்து வருகிறது. பொறுப்பில்லாத பேச்சு நிறைய வருகிறது. தேர்தலுக்கும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை. நாட்டின் இறையாண்மை தான் முக்கியம்.

1974ல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ‘மீனவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்கிறார் ஒருவர். அது, நமது பொருளாதா மண்டலத்துக்குள் வருகிறது. 74ல் கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்த அந்த 2 பேரும் அப்போதும் கூட்டணியில் இருந்தார்கள். இப்போதும் கூட்டணியில் இருக்கிறார்கள்.

ஒரு தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், 67க்குப் பிறகு இன்று வரையில் தமிழகத்துக்குள் ஆட்சியமைக்க முடியாத அளவில் உள்ளது. மாநிலக் கட்சியின் துணையோடு தான் செயல்படுகிறார்கள். அவர்களின் ஓட்டும் 4 சதவீதமாக குறைந்துவிட்டது. இவர்கள் இருவரும், கச்சத்தீவை ஏன் கொடுத்தோம் என விளக்கம் கொடுக்கட்டும்.

கச்சத்தீவு குறித்து நேரு எழுதிய கடிதத்தில், ‘அது ஒரு தொல்லை. சீக்கிரத்தில் கையைவிட்டுப் போனால் நிம்மதி’ என்கிறார். அந்தக் கடிதத்தைக் கூட நாங்கள் காட்டினோம். ‘அது சிறிய கல்பாறை’ என இந்திரா காந்தி சொல்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:

கச்சத்தீவு தொடர்பாக சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை தற்போது வெளியில் கொண்டு வந்துள்ளோம். கச்சத்தீவை கொடுத்ததற்காக இலங்கையிடம் இருந்து இந்தியாவிற்கு ஏதும் கிடைக்கவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். கச்சத்தீவு தொடர்பாக மேலும் ஒரு தகவலையும்
ஆர்.டி.ஐ.யில் கேட்டுள்ளோம். கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். கச்சத்தீவு விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பா.ஜ.க அணுகி வருகிறது.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர். ஜனநாயகம், நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதா என்பதை போல பாஜக பற்றி மக்கள் யோசிக்கின்றனர்.

அமைச்சர் ரகுபதி:

கச்சத்தீவு தொடா்பான விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்றுள்ளதாகக் கூறும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, கச்சத்தீவை மீட்போம் எனப் பிரசாரம் செய்துவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பேசாமல் இருந்துவிட்டு, இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது, மக்கள் காதில் பூ சுற்றும் வேலையில் அவா் ஈடுபடுகிறார் என்பதை காட்டுகிறது.

திமுக கச்சத்தீவை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பம் முதலே மேற்கொண்டு வந்துள்ளது. அந்த விவகாரத்தில் சா்வதேச நீதிமன்ற உதவியோடுதான் தீா்வு காணப்பட வேண்டும் என்ற சூழல் உள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இலங்கை – சீனா உறவை கருத்தில்கொண்டு கச்சத்தீவு விவகாரத்தில் சமரசத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளது மத்திய பாஜக அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...