No menu items!

கொஞ்சம் கேளுங்கள்… மாரிமுத்து – அவர் என் மண் – என் மக்களில் ஒருவர்!

கொஞ்சம் கேளுங்கள்… மாரிமுத்து – அவர் என் மண் – என் மக்களில் ஒருவர்!

அங்கே அமர்ந்து சற்று நேரம் ஆகிவிட்டது! அமைதி நீடித்தது! நடிகர் மாரிமுத்து மறைவின் பாதிப்பு இங்கேயும்!

“நெருநல் இருந்த ஒருவன் இன்றில்லை என்கிற பெருமை உள்ள உலகம்’ என்றார் வள்ளுவர். நேற்றிரவு 10 மணிக்கு டி.வி.யில் பார்த்தவர். மறுநாள் காலை எழுந்தவுடன் இல்லை என்கிற சேதி வருகிறது. இன்னும் வேகம்! தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அவர் மறைவு செய்தி பாதித்தது போல முன்னெப்போதும் நடந்ததில்லை. பிபி ஏறி டாக்டர்களை நாடியவர்கள் ஏராளம். டாக்டர்களுக்கு காரணம் புரியவில்லை” என்றார் இலக்கியவாதி.

“மாரிமுத்து, தமிழ் கிராமத்து வயல் வரப்புகள் பெற்று தரும் வெள்ளந்தியான மனிதராக அல்லவா இருந்தார். அவரை பற்றி படிக்க படிக்க அப்படித்தானே அவர் நமக்குக் காட்சி தருகிறார். முண்டாசு, பனியன், லங்கோடு அணிந்து அவர் ஏர் தூக்கி செல்வதுபோல எனக்குத் தெரிந்தார். நடிகராக அல்ல!” என்றார் இடதுசாரி மூத்த தலைவர்.

“உண்மை! கிராமத்து மண்ணின் மைந்தர்களுக்கு இருந்த சுபாவம் மாரிமுத்திடம் இருந்தது. எந்த நிலையிலும் அவர்கள் நிதானம் தவறமாட்டார்கள். உண்மையை அலசுவார்கள். அவர்கள் போராடுவது மற்றவர் கண்ணுக்குப் புலப்படாது” – இலக்கியவாதி. அவரே தொடர்ந்தார்…

“பாருங்கள்…. இளம் வயதில் கிராமத்து வீட்டை விட்டு புறப்படுகிறவர் சொல்லிக் கொள்ளாமல் ஓடவில்லை. கரிக்கட்டையை எடுத்து சுண்ணாம்பு அடித்த வீட்டுச் சுவரில் பார்டர் கட்டி ‘நான் சினிமாவில் நடிக்க சென்னைக்குப் போகிறேன்…. பிறகு தொடர்பு கொள்வேன்’ என்று அச்சுபோல எழுதிவிட்டுக் கிளம்புகிறார். அந்த வீட்டில் அது அழிந்தும் அழியாமலும் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒருவருடைய சென்னை முகவரியைத் தெரிந்து வைத்திருக்கிறார். நேராக ஹோட்டல் நடத்தும் அவரிடம் போகிறார். அவரும் கிராமத்து ஆசாமிதான். ‘நம்மூர்க்காரர்’ என்று வரவேற்று வேலை தருகிறார். பாத்திரங்கள் கழுவும் வேலை. மாரிமுத்து அந்த வேலையைச் செய்துகொண்டு ஹோட்டல் கணக்கு வழக்குகளையும் ஒரு நோட்டில் எழுதுகிறார். அவருடைய கையெழுத்து முத்தாக இருக்கிறது. ஹோட்டல்காரர் வியந்து அவரை கல்லாவில் உட்கார வைத்துவிடுகிறார். முதல் வெற்றி! அந்த முத்தான கையெழுத்துதான் கவிஞர் வைரமுத்துவிடம் பின்னர் சினிமாவுக்கும் கொண்டு சேர்க்கிறது” – இலக்கியவாதி அலசுகிறார்.

”பல விதங்களில் பலவாறு மோதுகிறார் முன்னேற! எதிலும் கிராமத்து மக்களுக்கே உரிய நம்பிக்கை, நிதானம். வெற்றிக்காற்று வீசுகிறது.”

“இந்த இந்திய கிராமத்து அதிசய மனிதர்களைப் புரிந்துகொள்ளத் தெரிந்தவர்களே தலைவர்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தியடிகள் தேச விடுதலை போராட்டத்தை நடத்த மேல்தட்டு மக்களின் துணை மட்டும் போதாது என்று புரிந்துகொள்கிறார். இந்தியா கிராமத்தில் வாழ்கிறது என்று அவரது உள்ளம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. அவர்களைப் புரிந்துகொள்ளப் புறப்படுகிறார். இது ஒரு நிஜமான யாத்திரை. ரயிலில் 3ஆம் வகுப்பில் பயணம். ரயில் பெட்டியிலும் வெளியேயும் பார்க்கும் காட்சிகள் அடிகளார் மனதில் ஏற்கெனவே இருந்த மௌன புரட்சியைப் பலப்படுத்துகிறது” – இடதுசாரி தலைவர் விவரிக்கக் கவனத்துடன் கேட்கிறார்கள்.

“ஒரு செப்டம்பர் மாதம் நடந்த புரட்சி அது. எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நினைவுக்கு வரும். அந்த 1921 செப்டம்பர் 21ஆம் தேதி காந்தி சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம்…. கிராமப்புறங்கள் வரும்போது வெளியே சில காட்சிகளைப் பார்க்கிறார். வயல்களில் லங்கோடு மட்டுமே அணிந்த விவசாயிகள் கடும் வெயிலிலும் உழுகிறார்கள். ஒரு இடத்தில் ரயில் மெதுவாகச் செல்கிறது…

அந்த காட்சியை கற்பனையில் பார்க்கிறார்கள் அங்கே. ஆலமர கிளைகளில் தூக்கணாங்குருவி கூடுகள். நடுவே தூளியில் ஒரு குழந்தை. பக்கத்து நிழலில் புடவை முந்தானையால் மனைவி வெயிலை மறைக்கக் கணவர் கூழ் அருந்துகிறார். இருவரும் இடை இடையே குழந்தைகளைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள்.

இப்போது மகாத்மாவின் கவனம் பயணிகள் நிரம்பி வழியும் பெட்டிக்குள். முழு உடையோடு வம்பளந்தவாறு பயணிகள். ‘நாம் ஏன் கதர் ஆடை அணியக்கூடாது. இந்த அந்நிய ஆடைகளை தவிர்த்தால் நமது நெசவாளி பிழைப்பானே’ என்கிறார் காந்தி. ‘கதர் ஆடை விலை அதிகம். கட்டுப்படியாகாது’ என்று பதில். அது பொய் என்பது காந்திக்குப் புரிகிறது. மனதில் ஆழமாகப் பதிந்து விட்ட விஷயங்களை மாற்றுவது எளிதல்ல. காந்தியின் சிந்தனையில் ஓர் எண்ணம். சமீபகாலமாக அழுத்திக் கொண்டிருந்தது. அவர் ஒரு முடிவுக்கு வருகிறார்” – இடதுசாரி தலைவர் நிறுத்தினார்.

“மறுநாள் செப்டம்பர் 22. மதுரையில் அவர் மேலமாசி வீதியில் அன்று கருமுத்து தியாகராஜ செட்டியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் ஒரு அறையில் தங்கியிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் புறப்பட அவர் திரும்பி வந்தபோது – வரவேற்க வந்தவர்கள் அவரை பார்த்துத் திகைத்தனர். உடுப்பு மாறிவிட்டது. இடுப்பில் கதர் வேட்டி. மார்பை மறைக்கப் போர்த்திய கதர் துண்டு. காந்தி இந்திய மண்ணின் மனிதராக நடந்து வருகிறார். காந்தி அந்த கிராமத்து உடையுடன் மக்களின் ஆரவாரத்திற்கிடையே பேசிய இடம் காந்தி பொட்டல் என அழைக்கப்படுகிறது.

இந்திய மண்ணின் மனிதர்களுடன் கைக்குலுக்கி விட்டார் காந்தி. ‘அவர் நம்மவர்’ என்று மக்களுக்குப் புரிந்தது. அந்த மக்களுக்குப் பொய் பேசத் தெரியாது. காந்திக்குச் சத்தியம்தானே கடவுள். அவர்கள் சோகங்களைப் பொறுத்துக்கொண்டு தைரியமாக நிற்பார்கள். மகாத்மாவும் அப்படித்தானே.

காந்தியின் இந்த அரைகுறை ஆடை வெள்ளையர்களுடன் போராட உதவுமா என்ற சந்தேகம் ராஜாஜிக்கே இருந்தது. வழக்கமான பாரிஸ்டர் உடைக்கு மாற வற்புறுத்தினார் ராஜாஜி. காந்தி எடுத்த முடிவு எடுத்ததே.

வெள்ளையர்கள் – சர்ச்சில் – ‘அரை நிர்வாண பக்கிரி’ என்று அவரை கேலி செய்தார். காந்தி லண்டன் சென்றபோது இந்த அரை நிர்வாண உடையுடன்தான் பிரிட்டிஷ் மன்னரைச் சந்திப்பேன் என்றார். ‘எனக்கும் சேர்த்துத்தான் மன்னர் உடையணிந்திருக்கிறாரே’ என்றார் காந்தி. காந்தியின் உடை புரட்சிதான் தேச விடுதலைக்கான முதல் திறவுகோலாயிற்று.” – முடித்தார் இடதுசாரி தலைவர்.

இலக்கியவாதி கூறினார்: “மாரிமுத்துக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. அவரது பேட்டிகளைப் படித்தால் அவர் எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறார், குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதெல்லாம் புரிகிறது. மற்றவர்கள் திறமையிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். காலத்தை வீணாக்கவில்லை. இயக்குநராக வரவேண்டும் என்பது தனக்குச் சரிப்பட்டு வராது என்று புரிந்தவுடன் ‘தொல்லைப்படுத்திய அந்த ஆசையின் வாலை சுருட்டி மூலையில் தள்ள படாதபாடு பட்டேன்’ என்று கூறியிருக்கிறார்… இவையெல்லாம் கிராமத்து மண் அவருக்குள் சேர்த்த உரம்.” இலக்கியவாதி நிறுத்த அரசியல்வாதி கூறினார்:

“சரியாக சொல்கிறீர்களே. என் மண் என் மனிதர்களின் திடமான சாட்சி மாரிமுத்து. இந்த மண்ணையும் இந்த மண்ணின் மனிதர்களையும் நாட்டை ஆளுவோரும் ஆள நினைப்பவர்களும் முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேற இவர்கள் ஒவ்வொரு அடியெடுத்து வைப்பதிலும் அவர்கள் காட்டும் பொறுமை, முயற்சி! அதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது எப்போது?”

முடிவுக்கு வந்தது அன்றைய சந்திப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...