No menu items!

ஏலியன் உடல்களா இது? –மிரண்ட மெக்சிகோ!

ஏலியன் உடல்களா இது? –மிரண்ட மெக்சிகோ!

‘இருக்கிறாங்களா? இல்லையா?’ இறைவன், இறைவிக்கு அடுத்தபடி நமது பூமிவாழ் மக்கள் அதிகம் இந்தக் கேள்வியைக் கேட்பது ஏலியன்களைப் பற்றித்தான்.

‘இவ்வளவு பெரிய பிரமாண்டமான பிரபஞ்சத்தில், ஒரேயொரு ஒற்றைக் கோளிலே மனிதர்களாகிய நாம் மட்டும்தான் தன்னந்தனியே இருக்கிறோமோ? இல்லை. ஏலியன்கள் என்ற பெயரில் நமக்கு வேற்றுலக, விண்வெளிப் பங்காளிகள் இருக்கிறார்களா?’ நீண்டகாலமாக இந்த பூமிப்பந்தை குத்திக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது.

ஏலியன்கள் இருக்கிறார்கள் என்று நமது பூமிப்பந்தில் அடிக்கடி சில ‘ஆதாரங்கள்’ சிக்கும். அந்த மாதிரியான ‘ஆதாரங்களில்’ ஒன்றுதான் பராகாஸ் மண்டையோடுகள்.

தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள பிஸ்கோ பகுதியில் ஒருமுறை 300 பராகாஸ் மண்டையோடுகள் கிடைத்தன. அத்தனையும் பின்பக்கமாக வீங்கிய, நீளமான, வழக்கத்துக்கு மாறான மண்டையோடுகள். சாதா மனித மண்டையோடுகளை விட பராகாஸ் மண்டையோடுகள் 25 சதவிகிதம் பெரியவை. 60 சதவிகிதம் எடைகூடியவை.

விசித்திரமான இந்த பராகாஸ் மண்டையோடுகள் எல்லாம் ஏலியன்களின் மண்டையோடுகள் என்று சிலபேர் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக்காலத்து ஆதி மனிதர்கள் ‘அழகுக்காகவும்’, உயர் குடியினர் என்று காட்டுவதற்காகவும், செயற்கையாக குழந்தைகளுக்கு இப்படி மண்டையோட்டை நீளவைப்பார்கள் என்ற தகவல் வெளியானது. பராகாஸ் மண்டையோடு மர்மம் அதோடு அமிழ்ந்து போனது.

அதேப்போல, ரஷியாவில் 74 வயது பெண்மணி ஒருவர் வளர்த்த, அலோயசென்கா என்ற ‘ஏலியன் குழந்தை’யும் ஒருகாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழுப்பு சாம்பல் நிறத்தில் வெங்காய வடிவத்தில் இருந்த அந்த குழந்தையை, ஆராய்ச்சி என்ற பெயரில் ரஷிய விஞ்ஞானிகள் அப்புறப்படுத்தினார்கள். அவ்வளவுதான். அலோயசென்கா என்கிற அந்த ‘ஏலியன் குழந்தை’ அதன்பிறகு மாயமாகி, அது தொடர்பான பரபரப்பும் மாயமாகி விட்டது.

அந்த வரிசையில்தான், இப்போது புதிய வரவாக வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன ‘இரண்டு ஏலியன் உடல்கள்’.

மெக்சிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில், ஜெய்மி மௌசான் என்ற ஆய்வாளர் இந்த ‘ஏலியன் உடல்கள்’ இரண்டையும் கடந்த 12ஆம்தேதியன்று காட்சிப்படுத்தி, உலகத்தைப் பரபரப்பாக்கி இருக்கிறார்.
பெரிய தலைகள், சின்ன உடல்கள், பின்புறமாக வீங்கிப்புடைத்த தலை, கை, கால்கள் எல்லாவற்றிலும் தலா 3 விரல்கள், ஆமையை மாதிரி நீட்டக்கூடிய கழுத்து, குறைவான எடைகொண்ட லைட்வெயிட் எலும்புகள், பற்கள் இல்லாத வாய்.. இப்படித்தான் இருக்கின்றன அந்த இரண்டு ‘ஏலியன்’ உடல்களும்.

‘இந்த 2 அதிசய ஏலியன் உடல்களும், பெரு நாட்டின் குஸ்கோ பகுதியில் உள்ள டயட்டாம் நுண்பாசி சுரங்கத்தில் கல்படிவங்களாகக் கிடைத்த உடல்கள். மெக்சிகோ நாட்டு தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் நடத்தின ரேடியோ கார்பன் ஆய்வில் இந்த ஏலியன் உடல்கள் ஆயிரம் வருஷம் பழமையானவை என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த ஏலியன் உடல்களின் 30 சதவிகித மரபணுக்கள் என்ன என்றே புரியவில்லை. அவை இதுவரை வகைப்படுத்தப்படாத மரபணுக்கள். எக்ஸ்ரே சோதனையில், ஒரு ஏலியனுக்குள்ளே கருமுட்டைகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. காட்மியம், ஆஸ்மியம் மாதிரியான அரியவகை உலோகங்கள் இந்த ஏலியன் உடல்களில் இருக்கிறது. இந்த இரண்டு உடல்களும் மம்மி உடல்கள் இல்லை. காலப்போக்கில் கல்படிவமா, புதை படிவமா மாறின உடல்கள்.

பூமியிலே இருக்கிற பரிணாம வளர்ச்சிக்கும், இந்த உயிர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ஏலியன்கள் அறிவுள்ள உயிர்களாகத் தெரிகிறது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்திலே நாம் தனியாக இல்லை. இது யதார்த்தம். இந்த யதார்த்தத்தை நாம புரிந்து கொள்ள வேண்டும். உலக வரலாற்றை இனிமேல் திருத்தி எழுத வேண்டியிருக்கும்’

இப்படி ஜெய்ம் மௌசன் இந்த உடல்கள் பற்றி நீள….மாக விளக்கம் வேறு அளித்திருக்கிறார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் ஜோஸ் டி ஜீசஸ் சால்ஸ் பெனிடஸ் என்பவர், ‘இந்த ஏலியன்களோட கண்கள், ஸ்டீரியாஸ்கோப் பார்வை உள்ள கண்கள். இந்த ஏலியன்களுக்குப் பற்கள் இல்லாததால், எந்த உணவையும் சவைத்து சாப்பிட முடியாது. குடிக்க மட்டும்தான் முடியும். இந்த உடல்கள் இரண்டும் முழுவளர்ச்சி அடைந்த உடல்கள். மம்மி உடல்கள் இல்லை’ என்று அவர் பங்குக்கு சொல்லியிருக்கிறார்.

மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த இரண்டு உடல்களும் உண்மையிலே ஏலியன் உடல்கள்தானா? எடுத்த எடுப்பில் இப்படியொரு சந்தேகம் கிளம்பியிருக்கிறது. இதற்குக் காரணம், இந்த உடல்களைக் காட்சிப்படுத்திய ஜெய்ம் மௌசன்தான்.

ஜெய்ம் மௌசன் ஒரு ஆர்வக்கோளாறு ஆசாமி. தென் அமெரிக்காவில் பெரு நாட்டிலே இருக்கிற நாஸ்கா பகுதியிலே அடிக்கடி பழமையான மம்மி உடல்கள் கிடைப்பது வழக்கம். அந்தமாதிரி மம்மி உடல்களை கல்லறைத் திருடர்களிடம் இருந்து ஜெய்ம் மௌசன் அடிக்கடி வாங்குவார். கல்லறைத் திருடர்களுக்கு ஜெய்ம் மௌசன் ரெகுலர் வாடிக்கையாளர்.

இப்படித்தான், 2015ஆம் வருஷம், பெரு நாட்டிலே கிடைத்த மம்மி உடல்களை, ஏலியன் உடல்கள் என்று ஜெய்ம் மௌசன் காட்சிப்படுத்தினார். ஆனால், அவை ஏலியன் உடல்கள் இல்லை என்று பிறகு தெரிய வந்தது.

2017ஆம் வருஷம், இவர் வாங்கிய சில ‘மம்மி உடல்கள்’, மனித எலும்பு, விலங்கு எலும்பு, காய்கறித் தோல், நார்களைச் சேர்த்து செயற்கை சிந்தடிக் பசையாலே ஒட்டப்பட்ட போலியான உடல்கள் என்று தெரியவந்தது. அதுபோல, ஒட்டகம் மாதிரி கழுத்து நீளமான லாமா விலங்கின் மூளைக்கூட்டில் கொஞ்சம் வேலைப்பாடுகள் செய்து, அதை ஏலியன் உடல் என்று ஜெய்ம் மௌசன் வாங்கி ஏமாந்த கதையும் உண்டு.

2017ஆம் வருஷம் ஜூன் மாதம், ஏலியன் உடல் என்று ஜெய்ம் மௌசன் காட்டிய ஒரு உடல், ஒரு மனிதக்குழந்தையின் உடல் என்று பிறகு தெரிய வந்தது.

இந்தநிலையில்தான் மெக்சிகோ நாட்டில் ஜெய்ம் மௌசன் காட்சிப்படுத்தியிருக்கும் 2 ‘ஏலியன் உடல்களும்’ வழக்கத்தைப் போல சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றன.
நமது பூமிப்பந்தில், அமெரிக்கா வசம் சில ஏலியன் உடல்கள் இருப்பதாக இன்றைக்கும் நம்பப்படுகிறது.

1947ஆம் வருஷம் ஜூலை மாதம், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலே ரோஸ்வெல் நகரத்துக்கு 75 மைல் வடக்கே பாலைவனப் பகுதியில் ஒரு பறக்கும் தட்டு விழுந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பறக்கும் தட்டின் உடைந்த பாகங்களையும், பெரிய தலை, சின்ன கண்களோடு அங்கே கிடந்த விசித்திரமான ஏலியன் உடல்களையும் அமெரிக்க விமானப்படை எடுத்துப்போய், நெவாடா மாகாணத்திலே உள்ள ஏரியா 51 என்கிற ரகசியப் பகுதியில் வைத்திருப்பதாக இன்றைக்கும் நம்பப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிடமே ஒரு பறக்கும் தட்டு இருந்ததாகவும், அந்த பறக்கும் தட்டுதான் ரோஸ்வெல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும்கூட ஒரு வதந்தி உண்டு.

‘ரஷிய அதிபர் ஜோசப் ஸ்டாலின், ஜெர்மன் சகோதரர்கள் இருவரின் உதவியுடன் எச்.ஓ.229 என்ற பறக்கும் தட்டை உருவாக்கி, ஜோசப் மெங்கலா என்ற ஆய்வாளர் உருவாக்கித் தந்த தலைபெருத்த மனிதகுழந்தைகளை அதில் ஏற்றி, அமெரிக்காவை பயமுறுத்த அனுப்பி வைத்தார். அந்த பறக்கும் தட்டுதான் ரோஸ்வெல் பகுதியில் விழுந்தது’ என்ற ஒரு கதையும் உண்டு.

விண்வெளியில் வெனுசியன், ரோஸ்வெல் கிரே, ரெப்டோய்ட்ஸ், நார்ட்டிக், பிளேயட்டியன்ஸ் என்று 40க்கும் மேற்பட்ட ஏலியன் இனங்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.

அண்மையிலே டேவிட் கிரஸ் என்கிற அமெரிக்கர், ‘அமெரிக்காவிடம், பூமிக்குத் தொடர்பில்லாத தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்ட ஏலியன் வாகனங்கள் இருக்கிறது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் வான்வெளிப் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் ரியான் கிரேவ்ஸ் என்கிறவர், ‘அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து வரலாம்’ என்று அண்மையில் எச்சரித்து இருந்தார்.

மெக்சிகோவில் இந்த 2 ‘ஏலியன் உடல்களும்’ காட்சிப்படுத்தப்பட்ட நேரம், இந்த ரியான் கிரேவ்ஸ் அங்கே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பூமியிலே ஏலியன்களோட படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். விண்வெளியிலே இருந்து ஏலியன்கள் படையோடு வந்து பூமியைத் தாக்கலாம்’ என்று ஒருபக்கம் பீதி நிலவும் நேரத்தில், மெக்சிகோவில் இந்த ‘ஏலியன் உடல்கள்’ காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவை உண்மையிலேயே ஏலியன் உடல்கள்தானா இல்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...