No menu items!

JN.1 – மிரட்ட வரும் புதிய கொரோனா

JN.1 – மிரட்ட வரும் புதிய கொரோனா

2019-ம் ஆண்டில் தோன்றிய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து கடந்த ஓராண்டாகத்தான் இந்த உலகம் கொஞ்சம் விடுபட்டிருந்தது. அதற்குள் புதிய வகை கோரோனா அழையாத விருந்தாளியாக வந்து பயம் காட்டுகிறது. இந்த கொரோனாவுக்கு Corona JN.1 என பெயரிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள்.

இந்தியாவில் தற்போது இந்த புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்ட சிலரை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். ஒருபுறம் நோயின் பாதிப்பால் என்ன ஆகுமோ என்ற அச்சமும், மறுபக்கம் இதனால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்ற பொருளாதார பயமும் மக்களைச் சூழ்ந்துள்ளது.

ஜேஎன்.1 வைரஸ் எங்கு தோன்றியது?

இந்த புதிய வகை கொரோனா முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பர்க்கில் கண்டறியப்பட்டது. இதற்கு முன் பரவலாக இருந்த ஒமைக்ரான் வகை கொரோனாவில் இருந்து உருமாற்றம் பெற்று இந்த புதிய வகை வைரஸ் உருவாகி உள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 38 நாடுகளில் இந்த ஜே.என்.1 வைரஸ் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் இந்த வைரஸின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. அம் மாநிலத்தில் நேற்று மாலை நிலவரப்படி 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோல் கோவா மாநிலத்தில் 19 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் மருத்துவ வல்லுநர்கள் இருக்கிறார்கள்.

ஜேஎன்1 கொரோனாவின் அறிகுறிகள் என்ன?

இந்த புதிய வகை கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், “இந்த கொரோனா நோய்த் தொற்றின் முதல் அறிகுறி காய்ச்சல். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும். கடுமையான இருமல் மற்றும் சோர்வும் இருக்கும். இந்த அறிகுறிகளில் இருந்து முழுமையாக மீண்டுவர 3 வாரங்கள் வரை ஆகும்” என்கிறார்கள்.

உயிரிழப்புகள் ஏற்படுமா?

கொரோனா என்றதும் நாம் முதலில் பயப்படுவது உயிர் இழப்புகள் ஏற்படுமா என்று நினைத்துதான். ஆனால் கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்டதைப் போன்று இந்த வகை கொரோனா வரஸால் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்படாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முழுமையாக ஓய்வு எடுப்பதன் மூலம் இந்த வைரஸில் இருந்து மீண்டு வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் தனிமையில் இருக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் சொல்வது என்ன?:

புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் பேசிய அவர், “”புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...