No menu items!

காயல்பட்டினம் இப்போது எப்படியிருக்கிறது?

காயல்பட்டினம் இப்போது எப்படியிருக்கிறது?

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு சிறிய நகராட்சி காயல்பட்டினம். அதிகம் பிரபலமல்லாத இந்த ஊரை இப்போது இந்தியா முழுவதும் ஆச்சரியமுடனும் கவலையுடனும் பார்க்கிறார்கள். காரணம் கடந்த ஞாயிறு அன்று பெய்த அதிகனமழை. 24 மணி நேரத்தில் 95 செமீ மழை காயல்பட்டினத்தில் கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் டிசம்பர் 4 அன்று பெய்த 55 செமீ உடன் ஒப்பிட்டால் 40 செமீ அதிகம். சென்னை போன்ற ஒரு பெருநகரத்தாலேயே தாக்குபிடிக்க முடியாதபோது எப்படி ஒரு சிறிய நகராட்சி தாங்கும்?

ஞாயிறு (17-12-24) அதிகாலை காயல்பட்டினத்தில் மழை கொட்டத் தொடங்கியது. அடுத்தநாள் அதிகாலைக்குள், அதாவது 24 மணி நேரத்தில் 95 செ.மீ. மழை காயல்பட்டினத்தில் கொட்டித் தீர்த்திருந்தது.

தமிழ்நாட்டில் 24 மணி நேரங்களில் பெய்த அதிகபட்ச மழை 1992இல் திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் பெய்த 96.5 செ.மீ மழை தான். இரண்டாவதாக 2019இல் அவலாஞ்சியில் பெய்த 91.1 செ.மீ மழையும், மூன்றாவது இடத்தில் 1992இல் மாஞ்சோலையில் பெய்த 82.1 செ.மீ மழையும் இருந்தது. இப்போது இரண்டாவது இடத்தில் காயல்பட்டினம் உள்ளது.

‘‘இது வரை அதிகபட்ச மழை பெய்த இடங்கள் எல்லாம் மலைப்பகுதிகள் ஆகும். அங்கே அதிக மழை பெய்வது அரிதானது அல்ல. ஆனால், இப்போது காயல்பட்டினத்தில் பதிவாகியுள்ள 95 செ.மீ மழை, சம வெளிகளில் இதுவரை பெய்த அதிகபட்ச மழை ஆகும். இந்தியாவின் டாப் 10 அதிகமான மழை பொழிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்” என்கிறார் தனியார்ஆய்வாளர் பிரதீப் ஜான்.

வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது, காயல்பட்டினம்; ஆனால், துயரமான வரலாறு.

இப்போது எப்படியிருக்கிறது காயல்பட்டினம்?

தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை முழுமையாக ஓய்ந்துவிட்டது. இதனால், பல ஊர்களில் தண்ணீர் வடியத் தொடங்கிவிட்டது. ஆனாலும், காயல்பட்டினம் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை.

காரணம், காயல்பட்டினத்தில் ஞாயிறு தொடங்கிய மழை திங்கள்கிழமை காலையும் நிற்கவில்லை. அன்று காலையில் ஆறு மணி நேரத்தையும் சேர்த்தால், காயல்பட்டினத்தில் மட்டும் 30 மணி நேரத்தில் 116 செமீ மழை பெய்திருந்தது.

தொடர்ந்தும் மழை பெய்துகொண்டே இருந்தது. காயல்பட்டினத்தில் திங்கள் கிழமையும் 21 செ.மீ. மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னரும்  மழை தொடர்ந்தது. இன்றும் லேசான மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. இதனால், காயல்பட்டினத்தில் தண்ணீர் முழுமையாக வடிவதில் சிக்கல் நீடிக்கிறது.

“ஞாயிறு காலை கனமழை பெய்யத் தொடங்கியது, சரி நவம்பர்-டிசம்பர் காலத்தில் பெய்யும் பருவ மழை போல தானே என்று நினைத்தோம். ஆனால் இரவு வரை கூட மழையளவு குறையாமல் தொடர்ந்து பெய்த போது தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தோம். பல இடங்கள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிவிட்டன. எனக்கு நினைவு தெரிந்தவரை இப்படியொரு மழை வெள்ளத்தை காயல்பட்டினத்தில் கண்டதில்லை.

இங்குள்ள தெருக்கள் மிகவும் சிறியவை. வீடுகளும் நெருக்கமாகவே கட்டப்பட்டிருக்கும். அருகே கடல் இருப்பதால் எவ்வளவு பெரிய கனமழை பெய்தாலும், தண்ணீர் உடனே வடிந்து விடும். இந்த முறையும் அப்படிதான் என நினைத்தோம். ஆனால், உணவுக்கு கூட சிரமப்படும் நிலை வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நாங்கள் முடிந்தவரை ஜேசிபி மூலமாக சில இடங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்.

காயல்பட்டினம் சற்று தாழ்வான பகுதியாகும். நிலத்தடி நீருக்கு இங்கு பஞ்சம் இல்லை. காரணம் அருகிலுள்ள ஆறுமுகநேரி, குரும்பூர் போன்ற ஊர்களில் இருந்து வரும் நீர் இங்குள்ள கடலில் கலக்கும். இப்போது அதுதான் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீரும் சேர்ந்து முழு ஊரும் வெள்ளத்தில் மிதக்கிறது.

ஊரில் உள்ள பள்ளிவாசல்களில் அனைத்து சமுதாய மக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முடிந்த வரை அவர்களுக்கான உணவை ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். மருத்துவ வசதிகளுக்காக ஆம்புலன்சும் உள்ளது. ஆனால், அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு செல்ல வாகன வசதிகள் இல்லை” என்கிறார்கள் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.

தண்ணீர் முழுமையாக வடியாததால் காயல்பட்டினத்தில் மின் விநியோகம் இன்னும் தொடங்கவில்லை. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, காயல்பட்டினத்திற்கு அரசு உதவிகள் போகத் தொடங்கிவிட்டது என்று கூறினார். ஆனால், காயல்பட்டினம்வாசிகளோ அதை மறுக்கிறார்கள். அரசு உதவிகள் வராததால் ஊர்க்காரர்களே மீட்புப் பணிகளை செய்தவதாக கூறுகின்றனர்.

ஆனாலும், மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கிறது காயல்பட்டினம். பல்வேறு தெருக்களிலும் சாலைகளிலும் வெறும் 50 சதவீதம் வெள்ளம் மட்டுமே வடிந்துள்ளது. தேங்கியுள்ள வெள்ள நீர் கடல் பகுதிக்கு மெல்ல நகர்ந்து வருகிறது. மற்றொரு பக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியும் நிவாரணமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், மக்களும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.

காயல்பட்டினத்தில் சுலைமான் நகர், மங்களா நகர், சல்லி தெரடு, சீதக்காதி நகர், காட்டு தைக்கா தெரு, பரிமார்தெரு, காட்டு மொகுதும் பள்ளி உள்ளிட்ட பகுதிகள் தான் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பே, அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுவிட்டனர். பல தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையானவர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள மசூதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...