No menu items!

முதலீடுகள் மழையில் தமிழ்நாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி!

முதலீடுகள் மழையில் தமிழ்நாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.

முதல் நாளிலேயே எட்டப்பட்ட ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உடன் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனத் தலைவர்களும், 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இரு தினங்களின் முடிவில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரை ஈர்க்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநாட்டின் முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் இரண்டு நாட்களில் எட்டப்படும் என்று நிர்ணயிக்கப்பட்ட 5.5 லட்சம் கோடி இலக்கானது, முதல் நாளிலேயே எட்டப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மாநாட்டின் முதல் நாளிலேயே ஹூண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கவும் அதனை விரிவுபடுத்தவும் முதலீடுகளை வழங்கின. இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் அமர்வு – 300 ஒப்பந்தங்கள்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு மின்வாகனம், விவசாயம், உணவுத்துறை, எதிர்கால பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெற்றது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த அமர்வில் பாரத் பயோடெக் இணை நிறுவனர் சுசித்ரா எல்லா, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்காக தனித்தனி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கவனம் ஈர்த்த ரூ 16,000 கோடி வின்ஃபாஸ்ட் முதலீடு!

இந்த மாநாட்டில் பல நிறுவனங்களும் கவனம் ஈர்க்கும் வகையிலான முதலீட்டை அறிவித்தன. அதில் அதிகம் கவனம் ஈர்த்தது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16000 கோடி முதலீட்டில் நிறுவனப்படவிருக்கும் மின்சார வாகனங்கள் உற்பத்தி மையம். இது தூத்துக்குடியில் நிறுவப்படவிருக்கிறது.

மேலும், தொடக்க நிகழ்வின் போதே, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

மேலும்,

குவால்காம் – சென்னை வடிவமைப்பு மையம் விரிவாக்கம் – ரூ.177.27 கோடி முதலீடு

கோத்ரேஜ் நிறுவனம் – உற்பத்தி மையம் – ரூ.515 கோடி முதலீடு

பெகாட்ரான் – நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் – ரூ 1,000 கோடி முதலீடு

டிவிஎஸ் நிறுவனம் – தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் – ரூ.5,000 கோடி முதலீடு

ஹூண்டாய் மோட்டார்ஸ் – மின்சார கார், மின்கலன்கல் உற்பத்தி நிறுவனம் – ரூ.6,180 கோடி முதலீடு – காஞ்சிபுரம்

JSW Energy- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் – ரூ 12,000 கோடி முதலீடு

டாடா எலக்ட்ரானிக்ஸ் – செல்போன் உற்பத்தி மையம் – ரூ 12,082 கோடி முதலீடு – கிருஷ்ணகிரி

ஆகியவையும் கவனம் ஈர்த்த முதலீடுகள் ஆகும்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வளர்ச்சி பெறும்!

இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “இந்தியாவில் 2ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு விளங்குகிறது.

வாகனம், டயர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு பொருட்களில் 30% பொருட்கள் இங்கு உற்பத்தியாகின்றன. கடந்த ஆண்டு மொத்தமாக 44 ஆயிரத்து 673 கோடி ரூபாய் அளவுக்கு மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை மட்டும் 46 ஆயிரத்து 587 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஆர்.பி. ராஜா, “எதிர்பார்த்ததைவிட முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடைபெறுகிறது. இதுவரை சென்னையை சுற்றிமட்டுமே இருந்துவந்த வளர்ச்சி, தற்போது சென்னை மட்டுமின்றி தென்தமிழகத்திற்கும் கிடைக்கப்போகிறது. இனி சென்னை மட்டுமே வளர்ச்சிபெறுகிறது என யாரும் சொல்ல மாட்டார்கள். தென் தமிழகத்திலும் அதிக முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பரந்தூர் தவிர மேலும் சில விமானநிலையங்கள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

முதலீடுகள் மழை – மகிழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்

தொடக்க நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள். சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு, உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதுடன் எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

தமிழனாக பெருமைப்படுகிறேன் டி.வி.எஸ். வேணு சீனிவாசன்

அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் முதலீட்டாளர்களைக் அழைத்துவந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளான சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெற்றார்கள். மேலும் முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

2015ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 2,42,160 கோடி முதலீடுகளை இருக்கும் விதமாக 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அப்போது,  4 லட்சத்து 70 ஆயிரத்து 65 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன எனக் கூறப்பட்டது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த மாநாட்டில் மூன்று லட்சத்து 501 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது.

இதுவரை நடைபெற்ற மாநாடுகளை மிஞ்சும் வகையில் தற்போது ரூ.5.50 லட்சம் கோடி இலக்கை கடந்து முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்த மாநாட்டில் பேசிய டிவிஎஸ் குழும தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் மாநாடு பற்றி கூறும்போது, “ஒரு தமிழனாக பெருமப்படுகிறேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...