No menu items!

ராமர் கோயில் விழாவில் துர்க்கா ஸ்டாலின்? – மிஸ் ரகசியா

ராமர் கோயில் விழாவில் துர்க்கா ஸ்டாலின்? – மிஸ் ரகசியா

”ஜல்லிக்கட்டு வந்தாலே டிவி நியூஸ் ரூம் ஆட்களுக்கு ஹேப்பி’ என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா. டிவியில் ஜல்லிக்கட்டு லைவ் ஓடிக் கொண்டிருந்தது.

“ஏன்?”

“மூணு நாள் வேற நியூஸை தேட வேண்டியதில்லை. பிரேக்கிங் ஸ்டோரி எடுக்க வேண்டியதில்லை. ஜல்லிக் கட்டு லைவ்வை போட்டுட்டு நிம்மதியா ரிலாக்ஸ் பண்ணலாம்ல…ஆனா நீங்க என்னை ஆபிசுக்கு வர வைச்சு நியூஸ் கேக்குறிங்க” என்று செல்லமாய் அலுத்துக் கொண்டாள். தோல் சீவிய கரும்புத் துண்டை நீட்டினோம்.

”நீங்க கரும்பு கொடுக்கிறீங்க. இந்த முறை பொங்கலுக்கு தன்னை சந்திக்க வந்தவங்களுக்கு முதல்வர் நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். கலைஞர் இருந்த போது எல்லோருக்கும் பத்து ரூபாய் கொடுப்பார். பத்து மடங்கு உயர்ந்திருக்கு.”

“சந்தித்தவர்கள் ஹேப்பியாகியிருப்பாங்களே”

“முதல்வரை வீட்டில் சந்தித்தவர்கள் அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும். அவங்களுக்கு பத்து மடங்கு உயர்ந்தது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. முதல்வரை சந்திச்சது மட்டும்தான் மகிழ்ச்சி”

“ஆமாம் அதுவும் கரெக்ட்தான்”

“தன்னை சந்திச்சவங்களை வீடியோவா முதல்வர் வெளியிட்டிருக்கிறார். பாத்திங்களா? அதுல ஒரு விஷயத்தை கவனிச்சிங்களா?”

“வீடியோ பாத்தேன். ஆமா…இப்பதான் ஞாபகத்துக்கு வருது. அந்த வீடியோவுல உதயநிதி ஸ்டாலின் இல்லை”

“கரெக்ட். முதல்வரோட குடும்பத்தினர், அமைச்சர்கள் எல்லோரும் இருப்பாங்க. ஆனா உதயநிதி இல்லை. கிருத்திகா உதயநிதியும் அவங்க மகள் கூட இருப்பாங்க. ஆனா விளையாட்டுத் துறை அமைச்சர் இல்லை”

“ஏன்? என்னாச்சு? கிருத்திகாவோட பைக்ல உக்காந்து பொங்கல் வாழ்த்து தெரிவிச்சிருந்தாரே”

“ஆமா ஆனா அது சோஷியல் மீடியாவுக்குதான். உதயநிதி ஓய்வுக்காக வெளியூர் போய்விட்டதாக அறிவாலயத்துல சொல்றாங்க. பொங்கல் முடிஞ்சுதான் சென்னை திரும்புகிறாராம்”

”அவருக்கும் ஓய்வு வேண்டாமா? ஒடியாடி வேலை செய்றார், புது பதவிகள் தேடி வரப் போகுது..”

”நீங்க என்ன சொல்றீங்கனு புரியுது. ஆனா, இப்போதைக்கு உதயநிதிக்கு பதவி உயர்வு இல்லை. முதல்வரே சொல்லிட்டாரே. நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்புறம் வேணா நடக்கலாம்”

“கட்சிக்காரங்க என்ன சொல்றாங்க”

“கட்சில இளைஞரணி இன்னும் நம்பிக்கையா இருக்காங்க. ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர மாட்டார்னு சொன்னாங்க. அவர் வந்தார். தேர்தல்ல போட்டியிட மாட்டார்னு சொன்னாங்க… பிறகு போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அமைச்சர் ஆகமாட்டார்னு சொன்னாங்க. ஆனா அமைச்சர் ஆகிட்டார். இப்ப துணை முதல்வர் ஆகமாட்டார்னு சொல்றாங்க. ஆனா நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் துணை முதல்வர் ஆவார்”னு இளைஞர் அணியினர் நம்பறாங்க.”

”மார்கழி முடிஞ்சு தை மாசம் பிறந்ததால தமிழ்நாட்ல அரசியல் நகர்வுகள் வேகம் எடுத்திருக்குமே…”

“திமுகவைப் பொறுத்தவரைக்கும் இளைஞர் அணி மாநாட்டை முடிச்ச பிறகு நாடாளுமன்றத் தேர்தல்ல தீவிரம் காட்ட முடிவு செஞ்சிருக்கு. ஜனவரி இறுதியில கூட்டணி கட்சிகள்கிட்ட தொகுதிப் பங்கீடு பத்தி பேச முதல்வர் முடிவெடுத்திருக்கார். அதனாலதான் டெல்லியில செய்தியாளர்கள்கிட்ட பேசின இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு தொகுதி பங்கீடு பற்றி பேச்சு தொடங்கும்னு சொல்லி இருக்கார்.”

“திமுகவால எல்லாரையும் திருப்திப்படுத்த முடியுமா?”

“பிரச்சினை இருக்காதுனு சொல்றாங்க. காங்கிரசுக்கு எத்தனை சீட்டுங்கிறதுதான் பிரச்சினையா மாறும்னு கட்சிக்காரங்க நினைக்கிறாங்க. காங்கிரசுக்கு நிறைய சீட் கொடுக்க வேண்டாம்கிறது அவங்க நிலைப்பாடு”

“முதல்வர் என்ன சொல்றாராம்”

“இப்போதைக்கு மத்த கட்சிகளை முடிப்போம்னு சொல்லியிருக்கிறார். மதிமுகவுக்கு முதல்ல முடியும் போல இருக்கு. ரெண்டு சீட் கேட்டிருக்காங்க. ரெண்டையும் கொடுத்துருவாங்கபோல. கூட்டணி கட்சிகள்ல மத்த கட்சிகள் எல்லாம் திமுகவோட அப்பப்ப உரசி இருக்கு. ஆனா திமுகவோட எந்த உரசலும் இல்லாம அவங்களுக்கு தோள்கொடுத்து நின்ன கட்சி மதிமுகதான். அதனால மதிமுக மேல ஒரு அன்பு ஸ்டாலினுக்கு இருக்கு”

“எந்த தொகுதிலாம் கேக்குறாங்க?”

“ஆறு தொகுதிகள் பட்டியல் கொடுத்திருக்காங்க. விருதுநகர், திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம்னு ஆறு தொகுதி லிஸ்ட் வந்துருக்கு. அதுல ரெண்டு தொகுதி கேக்குறாங்க. திருச்சியும் விருதுநகரும் அவங்க விரும்புறாங்க. இதுல ஒண்ணுல வைகோ மகன் துரை வையாபுரி போட்டியிடலாம்”

”விருதுநகர், திருச்சி ரெண்டுமே காங்கிரஸ் ஜெயிச்ச தொகுதியாச்சே”

“ஆமா அதுல சிக்கல்தான். பார்ப்போம், ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார்னு”

“செந்தில்பாலாஜியோட ஜாமீன் மனு திரும்பவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கே?”

“செந்தில் பாலாஜியோட தம்பி அசோக் குமார் அமலாக்கத் துறையில் ஆஜராகி சரணடைற வரைக்கும் அவருக்கு ஜாமீன் கொடுக்க அமலாக்கத் துறை கடுமையா எதிர்ப்பு தெரிவிக்கும்னு சொல்றாங்க. அதனால இந்த விஷயத்துல முடிவு செய்ய வேண்டியது செந்தில் பாலாஜிதான்னு அமலாக்கத் துறை வழக்கறிஞர்களே சொல்றாங்க. செந்தில் பாலாஜி வழக்குல ஆஜறாகிற திமுக வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தை முதல்வர் காதுல போட்டிருக்காங்க.”

”பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு பெருசா நிதி உதவி செய்யலைன்னு கே.பி.முனுசாமி புகார் சொல்லி இருக்காரே. கொஞ்சம் கொஞ்சமா அதிமுக தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிரா பேசத் தொடங்கி இருக்காங்களே?”

“பாஜகவோட கூட்டணி இல்லைன்னு எடப்பாடி அறிவிச்சாலும், அதை சிறுபான்மை சமூக தலைவர்கள் நம்பாமத்தான் இருக்காங்க. அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு எதிரா அறிக்கைகள் ஏதும் விடாததுதான் இதுக்கு காரணம்னு ஒரு தகவல் எடப்பாடிக்கு கிடைச்சிருக்கு. அதனாலதான் தன்னோட மனசாட்சி மாதிரி செயல்படற கே.பி.முனுசாமியை விட்டு பாஜகவுக்கு எதிரா அறிக்கை விட வச்சிருக்கார் எடப்பாடி. அவரும் குஜராத்துக்கு மட்டுமே முதல்வர்ங்கிற மாதிரி மோடி செயல்படறார். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி உதவி தரலைன்னு மோடியை விமர்சிச்சு அறிக்கை விட்டிருக்கார்.”

“ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் களைகட்டி இருக்கே. நீ போறியா?”

“நான் போறேனா இல்லையாங்கிறது அப்புறம் இருக்கட்டும். துர்க்கா ஸ்டாலின் போவாங்களாங்கிறதுதான் இப்ப தமிழ்நாட்ல முக்கிய கேள்வியா இருக்கு. இந்த கும்பாபிஷேகத்துல கலந்துக்க துர்க்கா ஸ்டாலினுக்கு ஆர்எஸ்எஸ். நிர்வாகிகள் சிலர் அழைப்பு விடுத்திருக்காங்க. அதனாலதான் அவர் போவாரா மாட்டாராங்கிற கேள்வி பெரிய அளவுல எழுந்திருக்கு.”

”போவாங்களா? மாட்டாங்களா?”

“போக மாட்டாங்க. அழைப்பிதழ் கொடுத்தங்ககிட்டேயே என்னால இப்ப வர முடியாது. ஆனா அப்புறம் ஒரு நாள் அந்தக் கோவிலுக்கு நான் நிச்சயம் வருவேன்னு சொல்லியனுப்பியிருக்காங்க”

“குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போவாங்களா? அழைப்பிதழ் கொடுத்திருக்காங்களே?”

“அழைக்கலன்ற குற்றச்சாட்டை காலி பண்றதுக்காக அவங்களுக்கு அழைப்பு கொடுத்திருக்காங்க. ஆனா அவங்க போக மாட்டாங்கனு டெல்லி வட்டாரங்கள் சொல்லுது”

“ஏன்?”

“குடியரசுத் தலைவர் வர்றதுனா பாதுகாப்பை அதிகரிக்கணும். ஏற்கனவே மோடி. அமித்ஷானு விவிவிஐபிங்க கூட்டம் அதிகம். குடியரசுத் தலைவர் வந்தா மரபுகள், பாதுகாப்புனு நிறைய விஷயம் இருக்கு. அதனால வர மாட்டாங்களாம்”

“ஆமா…வந்தா அவங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தாகணும். மத்தவங்களுக்கான முக்கியத்துவம் குறைஞ்சிரும்”

“கரெக்ட்டா பாயிண்ட்டை பிடிச்சிட்டிங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...