No menu items!

புத்தகக் கண்காட்சி எப்படியிருக்கிறது? பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்கள்

புத்தகக் கண்காட்சி எப்படியிருக்கிறது? பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்கள்

லட்சக்கணக்கான புத்தகங்கள், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், வாசகர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் என சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் விழாக் கோலத்தில் இருக்கிறது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய 47ஆவது சென்னை புத்தகக் காட்சி முடிய இன்னும் 5 நாட்கள்தான் இருக்கிறது. எப்படி இருக்கிறது இந்த புத்தகக் காட்சி? பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்கள் இங்கே…

டிஜிட்டல் காலத்துல இவ்வளவு புத்தகங்களா?
பட்டுக்கோட்டை பிரபாகர்

நான் சென்ற நேரம் நல்ல கூட்டமிருந்தது. ஆனாலும் கடைகளுக்குள் நெருக்கடியில்லாமல் நடமாடுமளவில் இருந்தது. ஆனால், நான்கு வரிசைகள் மட்டுமே செல்ல நேரமிருந்தது.

சட்டையின் முதல் பட்டன் கழற்றி விட்டுக்கொண்டால் கொஞ்சம் புழுக்கம் குறையும்.

போன் சிக்னல் கிடைத்தது. கிடைக்கவில்லை. கிடைத்தது. இணையத் தொடர்பு தாமதமாகக் கிடைத்தது.

புஸ்தகா ஸ்டாலில்  மாலை 6 முதல் 7 வரை இருந்தேன்.

ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரே நேரத்தில் என்னுடன் கை குலுக்க பாய்ந்ததில் போலீஸ் துணையை நாட வேண்டியிருந்தது. லேசான தடியடியை அவர்களால் தவிர்க்க முடியவில்லை – என்றெல்லாம் எழுத எனக்கே சிரிப்பு வருகிறது.

சீரான இடைவெளிகளில் இருபது வாசகர்கள் வந்து வாங்கினார்கள். ஆர்வமாக பேசினார்கள்.

சிலர் எப்போதோ நான் எழுதிய ஒரு கதையைச் சொல்லி அதன் தலைப்பு என்ன சார் என்று கேட்க.. சிலது சொன்னேன். சிலது எனக்கும் நினைவில் இல்லை.

ஒரு வாசகர் நீங்க ஜோதிடம் பத்தியும் எழுதறிங்கதானே என்று கேட்டு கிச்சுகிச்சு மூட்டினார்.

நடக்கும்போது வழி மறித்து, விழிகள் விரித்து ரொம்ப நாளா பாக்க நினைச்சேன் சார் என்று அன்பு காட்டியவர்களிடம் துளியும் பாசாங்கில்லை.

கணேஷ் பாலா பெரும்பான்மையான நேரம் என்னுடன் இருந்தார். குறிப்பிட்ட என் புத்தகம் கிடைக்கவே இல்லை என்றவரின் எண் வாங்கிக்கொண்டு ஒரே வாரத்தில் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எந்த வாசகர் எந்தப் புத்தகம் கேட்டாலும் மெனெக்கெட்டு தேடிப்பிடித்து வாங்கிக்கொடுப்பதை ஒரு சேவையாகவே செய்வதால் சமூக சேவகர் போல புத்தக சேவகர் என்று அவரை தாராளமாக அழைக்கலாம்.

தினமலர் நூருல்லா, என்.சி. மோகன்தாஸ், பதிப்பாளர் ஆசிஃப் மீரான், எழுத்தாளர் சுரேஷ் கண்ணன், சோம. வள்ளியப்பன், மதுமிதாராஜா, ஓவியர் விஜி.கிருஷ்ணன், பதிப்பாளர் செண்பா போன்று எதிர்ப்பட்ட நண்பர்களிடம் தலா இரண்டு நிமிடங்களே பேச முடிந்தது.

வெளியே அரங்கத்தில் கரு.பழனியப்பன் பேசிக்கொண்டிருந்தார்.

என்னுடன் வந்திருந்த கல்லூரிக் காலத்திலிருந்து நண்பரான சாமிநாதன் பொருளாதாரம் சம்மந்தமான சீரியஸ் புத்தகங்கள் மட்டுமே வாசிப்பவர். அவர்… ‘பரவால்லப்பா… டிஜிட்டல் காலத்துல இவ்வளவு புத்தகங்கள் வெளியிடறாங்க, படிக்கிறாங்கன்றதே ஆச்சர்யமா இருக்கு”என்றார்.

புத்தக விற்பனை குறித்து கவலைகொள்ளும் பதிப்பாளர்கள் எழுத்து என்பது இணையத்திற்குள் வேகமாக பரவிவிட்டதை முக்கிய காரணமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Reunion
மாலன்

என் அனுபவத்தில் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகக் கூட்டம் இல்லை. பணி நாள் எனபதாலும், நான் போன நேரம் அசுர கணங்களும் இளைப்பாறிக் கண்விழிக்கும் மாலை நான்கு மணி என்பதாலும்  இருக்கலாம்.

ஆனால், அது ஒருவகையான மீள் சந்திப்பு (reunion) போல் அமைந்தது. நிரஞ்சன் பாரதி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சில சிறார் நூல்களும் வெளியாயின. அதை முன்னின்று நடத்தியவர் கவிஞர் கலாப்ப்ரியாவின் மகள் அகிலாண்ட பாரதி. அவர் ‘பூஞ்சிட்டு’ என்று ஒரு இணைய இதழ் நடத்தி வருகிறார். அவரை இளம் பெண்ணாகப் பார்த்திருக்கிறேன். கலாப்ரியாவோடு குமுதம் அலுவலகத்திற்கு வந்திருந்தார் என ஞாபகம். இப்போது கண் மருத்துவராக இருக்கிறார், அமர்க்களமாகப் பேசுகிறார். (மரபணு!)

நிரஞ்சன் பாரதியின் தந்தை ராஜ்குமார் பாரதியையும் நெடுநாள்களுக்குப் பிறகு பார்த்தேன். சன் டிவியில் ஓரு இசை நிகழ்ச்சித் தொடரை அவரை வைத்துத்தான் தொடங்கினேன். பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளை நான் பாரதியிலிருந்துதான் தொடங்குவது வழக்கம். இலக்கியத் தொடரையும் பாரதியின் வம்சாவளியினரைக் கொண்டுதான் தொடங்கினேன்.  கீதா பென்னட்தான் அவர் வீட்டுக்கு அழைத்துப் போனார்

என் நண்பரின் மகனும் என நண்பருமான ஆசீப் மீரானையும் சந்தித்தேன். அவருடன் நேர்ந்த உரையாடலில் அவரது தந்தையைப் பற்றிய நினைவுகளும் மனதில் சூழ்ந்தன.

சிங்கப்பூர் இலக்கிய அரங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மாலன்தானே என்று ஒரு குரல் அழைத்தது. திரும்பினால் சுந்தரமூர்த்தி! வலைப்பூக்கள் காலத்து நண்பர். (வலைப்பூக்கள் இந்த மிலினியத்தின் தொடக்க ஆண்டுகளில் நிகழ்ந்தது) நான் முகக் கவசம் அணிந்திருந்ததால் அவர் நான்தானா எனக் கேட்டு உறுதி செய்து கொண்டார்.

சுந்திரமூர்த்தி ஓர் விஞ்ஞானி. அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மகனுக்கு என்னை வெற்றிவேலின் நண்பர் என அறிமுகம் செய்து வைத்தார். வெற்றிவேல், பி.கே. சிவக்குமார் ஆகிய நண்பர்களுடன் நினைவில் ஒரு மீள் சந்திப்பு. சுந்தரமூர்த்தியுடன் அதிகம் பேச முடியவில்லை. அதற்குள் சிங்கப்பூர் நண்பர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள்.

சிங்கப்பூர் அரங்கில் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆண்டியப்பன், செயலாளர் பிரேமா, கவிமாலை அன்பழகன், இன்னும் சிலரை சந்தித்தேன். சிங்கப்பூர் படைப்புகளை தமிழக வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஆண்டியப்பனின் நெடுங்காலக் கனவு. அதைக் கடந்த நான்கு வருடங்களாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார், அதற்குத் துணை நிற்கும் சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்தையும் பாராட்ட வேண்டும்.

ஜிரோ டிகிரி கடையில் பா.ராகவன், கவிஞர்கள் பெருந்தேவி, பரமேஸ்வரி ஆகியோருடன் சிறிது உரையாடினேன்.

பின் என் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான அருமை வஸந்த்தை (இயக்குநர்) அங்கு சந்தித்தேன். நீண்ட நாள்களுக்குப் பின் நேர்ந்த சந்திப்பு. என் ‘தோழியை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.

சந்தையைப் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் சந்திப்புக்களின் களனாக அவை அமைந்ததில் மகிழ்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...