No menu items!

விஜயகாந்தின் தேமுதிகவுக்கு Birthday – சாதித்ததும் சரிந்ததும்

விஜயகாந்தின் தேமுதிகவுக்கு Birthday – சாதித்ததும் சரிந்ததும்

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் துவங்கப்பட்ட தினம் இன்று. 2005ல் இதே நாளில் தேமுதிக துவக்கப்பட்டது.

நடிகர்கள் அரசியலுக்குள் வருவது இந்தியாவுக்குப் புதிதல்ல. பலர் வந்தாலும் எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டுமே திரைத்துறையிலும் அரசியலிலும் உச்சம் தொட்டவர்கள். தமிழகத்தில் அரசியலில் பல திரை நட்சத்திரங்கள் வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் என பல நட்சத்திரங்கள் கட்சிகள் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இவர்களுடைய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் இருந்ததில்லை. இப்போது இவர்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி சினிமாவில் இடைவேளை கிடைக்கும்போது கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்லி சன் பிக்சர்ஸின் நிரந்தர நடிகராக மாறி விட்டார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு நடிகர்களால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை மாற்றி நடிகர் துவங்கும் கட்சியும் மக்களின் ஆதரவைப் பெறும் என்று நிருபித்தது விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

இந்தக் கட்சி ஏன் தொடங்கப்பட்டது? எதற்காக தொடங்கப்பட்டது? அன்றைய அரசியல் சூழல் என்ன என்பதையெல்லாம் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் கட்சியின் நாயகன் விஜயகாந்தைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம்தான் சொந்த ஊர். ஆரம்பக் கல்வியை தேவக் கோட்டையிலும் உயர்பள்ளி படிப்பை மதுரையிலும் படித்தார். படிப்பைவிட விளையாட்டிலும் சினிமாவிலும்தான் அவருக்கு ஆர்வம்.

1978ல் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 26. விஜயகாந்துக்கு வாய்ப்பு சற்று வேகமாகவே கிடைத்தது. இனிக்கும் இளமை என்ற திரைப்படம்தான் அவருக்கு கிடைத்த முதல் நடிப்பு வாய்ப்பு. இந்தப் படத்தின் இயக்குனர் எம்.ஏ.காஜா. இவர்தான் விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றியது.

1979ல் வெளியான இனிக்கும் இளமையைத் தொடர்ந்து வரிசையாய் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் விஜயகாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘சட்டம் ஒரு இருட்டறை’என்ற திரைப்படம்.. 1981ல் வெளிவந்த இந்தப் படம் விஜயகாந்தின் ஆறாவது படம். அனைவரையும் ஆட்கொண்ட படம். அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படம்.

விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆர்.தான் ஆதர்ச நடிகர். எம்.ஜி.ஆர். பாணியிலேயே அநீதி கண்டு பொங்குபவராக, ஏழைகளுக்கு உதவுபவராக விஜயகாந்தின் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. விஜயகாந்துக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. கூடவே ரசிகர் மன்றங்களும் உருவாகின.

விஜயகாந்தின் ரசிகர் மன்றங்கள்

1982ல் தமிழ்நாடு தலைமை விஜயகாந்த் ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது. இந்த ரசிகர் மன்றங்கள்தான் பிற்காலத்தில் விஜயகாந்த் அரசியிலுக்குள் வரும்போது பெரும் உதவியாக இருந்தன.

வெறும் போஸ்டர் ஒட்டி, கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர் மன்றங்களாக இல்லாமல் தன்னுடைய ரசிகர் மன்றங்கள் மூலமாக சமூக நலப் பணிகளை மேற்கொண்டார் விஜயகாந்த். இந்த செயல்களே அவரது அடுத்த இலக்கு அரசியல் என்பதை உணர்த்தியது.

1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈரோட்டில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினரால் ஒரு இலவச மருத்துவமனை திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனை துவக்க விழாவுக்கு விஜயகாந்த் ஈரோட்டுக்கு வந்த போது அவரை வரவேற்க அவரது ரசிகர் மன்றத்தினர் திரண்டு வந்திருந்தார்கள். விஜயகாந்தை ஒரு திறந்த ஜீப்பில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றார். விஜயகாந்த் கலந்துக் கொண்ட முதல் பேரணி இது என்று சொல்லலாம்.

1980களில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடந்தன. விஜயகாந்தும் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். சக நடிகர், நடிகைகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். தனது ரசிகர் மன்றத்தினருடன் இணைந்தும் ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நினைவூட்டும் விதத்தில் கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தை எடுத்தார். 1991ல் வெளியான கேப்டன் பிரபாகரன் அவரது நூறாவது திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகுதான் அவரை கேப்டன் என்றழைக்கும் பழக்கம் வந்தது.

அரசியல் முதல் படி

2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் – ரசிகர் மன்றத்துக்கான கொடி வடிவமைக்கப்பட்டது. சிவப்பு,மஞ்சள், கறுப்பு வண்ணங்கள் கொடியின் நடுவில் தீபத்தை பிடித்திருக்கும் கை. சில வருடங்களுக்குப் பிறகு விஜயகாந்த் துவக்கிய தேசிய முன்னேற்ற திராவிட கழகத்தின் கொடியாகவும் இது மாறியது.

2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலர் போட்டியிட்டனர். அவர்கள் அதிகாரப்பூர்வமாய் போட்டியிடவில்லையென்றாலும் விஜயகாந்தின் படத்தையும் ரசிகர் மன்றக் கொடியையும் தங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார்கள். தனது ரசிகர் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அனுமதியையும் விஜயகாந்த் அப்போது வழங்கியிருந்தார். அந்தத் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கனிசமான எண்ணிக்கையில் வெற்றிப் பெற்றார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்தான் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான வெள்ளோட்டம்.
நடிகர் சங்கத்தில் விஜயகாந்த்

ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் ரசிகர் மன்றப் பணிகள், இன்னெரு பக்கம் அரசியல் முயற்சிகள் என்று விஜயகாந்த் பல பணிகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் இன்னெரு வேலையையும் எடுத்துச் செய்யத் துவங்கினார். அது தென்னிந்திய நடிகர் சங்கப் பணிகள். 2001ல் நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் சங்கத்துக்கு இருந்த கடன்களை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நடிகர், நடிகைகளை ஒன்றிணைத்து மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் கலை நிகழ்ச்சி பணம் திரட்டினார். 2005ல் தனிக் கட்சி துவங்குவது வரை நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்தார்.

விஜயகாந்தின் அரசியல் பின்னணி

மதுரையில் விஜயகாந்தின் குடும்பம் காங்கிரஸ்காரர்கள் குடும்பம் என்றே அறியப்பட்டிருந்தது. விஜயகாந்தின் தந்தை அழகர்சாமி மதுரையில் ரைஸ் மில் வைத்திருந்தார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்களான காமராஜர், பக்தவச்சலம், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரிடம் பழக்கம் இருந்திருக்கிறது. அழகர்சாமி மதுரை நகரசபை கவுன்சிலராக இரு முறை தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் விஜயகாந்துக்கு பிடித்த அரசியல் தலைவராக கருணாநிதி இருந்தார்.

1996ஆம் ஆண்டு கருணாநிதியின் திரையுலகப் பொன்விழா ஆண்டு. இதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விஜயகாந்த் விரும்பினார். அப்போது முதல்வராக ஜெயலலிதாவும் எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதியும் இருந்தார்கள். இந்தச் சூழலில் கருணாநிதியைக் கொண்டாடி விழா எடுப்பது சரியல்ல என்று பலர் ஒதுங்கினார்கள். ஆனால் அந்த விழாவை விஜயகாந்த் முன்னின்று நடத்தினார். ஏப்ரல் மாதம் சென்னை கடற்கரையில் நடந்த அந்த பிரமாண்ட விழாவில் திமுக தலைவருக்கு தங்கப் பேனா ஒன்று பரிசளிக்கப்பட்டது.

கருணாநிதியுடன் நட்பில் இருந்தது போலவே காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடனும் விஜயகாந்த் நட்புடன் இருந்தார். இப்படி அரசியலுக்கும் விஜயகாந்துக்கும் தொடர்பு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் விஜயகாந்த் நேரடியாக அரசியலுக்கு வருவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

அதற்கான நேரம் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தது.

விஜயகாந்த் கட்சி தொடங்கி தீவிர அரசியலுக்கு வருவதற்கு அவரது அரசியல் ஆசை மட்டுமே அடிப்படை அல்ல. அதைத் தாண்டி இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று, 2002ல் ரஜினிகாந்தின் பாபா படத்தில் வரும் சில காட்சிகளுக்காக பாமகவினர் பாபா படத்தை கடுமையாக எதிர்த்தனர். ரஜினி பட எதிர்ப்பு நடிகர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்குமான எதிர்ப்பாக மாறியது. அந்த சமயத்தில் நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தார். நடிகர்கள் தங்களுக்கு எதிராக திரும்பியதற்கு விஜயகாந்த் ஒரு காரணம் என்று பாமக தலைவர்கள் நினைத்தனர். இந்தச் சூழலில் பாமக பலமாக இருந்த வட மாவட்டங்களுக்கு விஜயகாந்த் வந்த போது அவரது ரசிகர் மன்ற கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன். வரவேற்பு தோரணங்கள் அறுக்கப்பட்டன. இதற்கு காரணம் பாமகவினர் என்று விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருதினார்கள். இந்த சம்பவங்கள் விஜயகாந்துக்கு கோபத்தை உண்டாக்கியது.

அடுத்து மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகவும் கோயம்பொஏடு பாலம் கட்டுவதற்காகவும் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சில பகுதிகளை இடிக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்தது. அப்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவின் டி.ஆர்.பாலு. இந்த முடிவை அறிந்ததும் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கருணாநிதியை சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். ஆனால் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வரவில்லை. விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்படும் என்று கூறினார் டி.ஆர்.பாலு. திமுகவுக்கும் கருணாநிதிக்கும் நெருக்கமாக இருந்த விஜயகாந்துக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் தீர்வு சொந்தமாய் அரசியல் கட்சியை தொடங்குவதுதான் என்ற முடிவுக்கு வந்தார் விஜயகாந்த்.

செப்டம்பர் 14 2005ஆம் ஆண்டு விஜயகாந்தின் அரசியல் கட்சியாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது. புதுக் கட்சி அறிவிப்புக்காக மதுரை நகரையொட்டியிருக்கும் திருப்பரங்குன்றத்தில் மிகப் பெரிய மாநாடு நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிரச்சார வேனில் விஜயகாந்த் மாநாட்டு மேடைக்கு வந்தார். இந்த வேனை எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் ஜானகி ராமச்சந்திரனிடமிருந்து கேட்டு வாங்கியிருந்தார் விஜயகாந்த். காலையில் துவங்கிய மாநாட்டில் இரவு இறுதி உரையாற்றிய விஜயகாந்த் புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார்.

மாநாட்டில் பேசிய விஜயகாந்த், “திராவிடம் என்றால் தமிழ் மட்டும்தான் என்று எத்தனையோ பேர் நினைக்கிறார்கள். நாலு மொழிகள் சேரந்துதான் திராவிடநாடு திராவிட நாடு தேசியத்துக்குள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதால் தேசியத்தை சேர்த்து உள்ளோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க தேசியம் அவசியம்.

முற்போக்கு என்ற வார்த்தை ஏன்? முற்போக்கு என்பதற்கு காரணம் இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற பல விஷயங்களில் பின்தங்கியே இருக்கிறோம். இந்த நிலை மாற முற்போக்குத்தனமான கொள்கைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் வளரவேண்டும் என்பதற்காக முற்போக்கு என்ற வார்த்தையை சேர்த்து உள்ளோம்.” என்று கட்சியின் பெயருக்கு விளக்கம் சொன்னார்.

கட்சி துவங்கிய மறுநாளே தமிழக சுற்றுப் பயணத்துக்கு கிளம்பிவிட்டார் விஜயகாந்த். செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மதுரையிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றார். “ திமுக, அதிமுக என்று மாற்றி மாற்றி வாக்களிக்கிறீர்களே, அவங்களால என்ன பயன் நடந்திருக்கு?” இதுதான் அந்த சுற்றுப் பயணத்தில் மக்களிடம் அவர் முன் வைத்த கேள்வி.

தேமுதிக சந்தித்த தேர்தல்கள்

2006 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகச் சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தது. விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. சொன்னது போல் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிடமிருந்து தள்ளி நிற்கப் போகிறாரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. விஜயகாந்த் சொன்னதை செய்தார். விஜயகாந்தின் தேசிய முற்போக்கு தனித்து போடியிட முடிவு செய்தது. அந்தத் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றிப் பெற்றார். ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி என்றாலும் தேமுதிக 8.4 சதவீத வாக்குகள் பெற்றது. இந்த வாக்கு சதவீதம் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக தேமுதிகவை மாற்றியது.

2009 நாடாளுமன்றத் தேர்தல்தான் தேமுதிக சந்தித்த அடுத்த தேர்தல். இந்த முறையும் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தார் விஜயகாந்த். தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அது பெற்ற 10.3 சதவீத வாக்குகள் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2006 சட்டமன்றத் தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தது இந்தத் தேர்தல் முடிவின் முக்கியமான அம்சம்.

தேமுதிக சந்தித்த மூன்றாவது தேர்தல் 2011ல் நடைபெற்ற தமிழ சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் முதல்முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. பல சிக்கல்களுக்குப் பிறகு கடைசி நிமிடத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைந்தது. தேர்தலில் அது வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அதிமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றிப் பெற்றது. எதிர்க் கட்சி அந்தஸ்தையும் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றிப் பெற்று தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரானார். இந்தத் தேர்தலில் தேமுதிக 7.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று உருவாக்கப்பட்ட் தேமுதிக தனது அடிப்படை நோக்கத்தை விட்டுவிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது விமர்சனத்துக்குள்ளானது.

2014 நாடாளுமன்றத் தேர்தல் தேமுதிக சந்தித்த நான்காவது தேர்தல். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக இந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்தது. இந்தக் கூட்டணியில் பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் இருந்தன. 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற இயலவில்லை. இந்தத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 5.1.

2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மீண்டும் தனது பழைய நிலைப்பாட்டுக்கு வந்தது. திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டுக்கு திரும்பியது.

விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மக்கள் நலக் கூட்டணியை அமைத்திருந்தார்கள். மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. இந்தக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரசும் இணைந்தது. ஆனால் இத்தனைக் கட்சிகள் இருந்தும் ஒரு தொகுதியில் கூட தேமுதிகவோ மக்கள் நலக் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளோ வெற்றி பெறவில்லை. 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 2.41. இந்தத் தேர்தலில் உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த்துக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிகவுக்கு அடிதான். அதிமுக – பாஜக கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலுமே தோல்வி. 2.19 சதவீத வாக்குளை மட்டும் பெற்றது.
2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. 60 இடங்களிலுமே தோற்று டெபாசிட்டை இழந்தது. பெற்ற வாக்கு சதவீதம் 1.9 மட்டுமே.

தேமுதிக சந்தித்த சவால்கள்

• சென்னை கோயம்பேடு பகுதியில் தனது பெற்றோர் ஆண்டாள்- அழகர் பெயரில் ஒரு திருமண மண்டபத்தை கட்டியிருந்தார் விஜயகாந்த். இந்தப் பகுதியில் மத்திய அரசு ஒரு அடுக்கு மேம்பாலத்தை கட்ட திட்டமிட்டது. அந்த மேம்பாலம் வரும் பாதையில் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இருந்தது. அதை இடிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை 2005 ஆகஸ்ட் மாதம் விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு. நோட்டீஸ் வந்ததும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த விஜயகாந்த், மண்டபத்தை இடிக்க தேவையில்லை என்று மேம்பாலத்துக்கான மாற்று திட்டம் ஒன்றைக் கொடுத்தார். அந்த மாற்று திட்டம் மத்திய நெடுஞ்சாலைத் துறையிடமும் தரப்பட்டது. ஆனால் விஜயகாந்த் தந்த மாற்றுத் திட்டம் சரிவராது என்று நெடுஞ்சாலைத் துறை சொன்னதால் மண்டபம் இடிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. விஜயகாந்த் வழக்கு தொடுத்தார். ஆனால் மண்டப இடிப்பிலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இறுதியாக 2007 ஆம் ஆண்டு மே மாதம் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ’திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு மண்டபத்தை இடித்தது. இதனால் எனது வளர்ச்சி தடைபடாது” என்று விஜயகாந்த் கூறினார். தற்போது மண்டபம் இருந்த இடத்தில் தேமுதிகவின் கட்சி தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

• 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் பொது விஜயகாந்துக்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்தார். விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இருந்த தனிப்பட்ட மோதல் அரசியல் களத்தில் வெளிப்பட்டது என்று அப்போது கூறப்பட்டது.

• 2006 சட்டமன்றத் தேர்தலின்போதே விஜயகாந்தும் ஜெயலலிதாவும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களில் ஈடுபட்டார்கள். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விமர்சனங்கள் அதிகரித்தது. விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டமன்றத்துக்கு வருகிறார் என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு விஜயகாந்த், ’இவர் ஊற்றிக் கொடுத்தாரா?’ என்று கேள்வி எழுப்பினார். இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வந்தப் பிறகும் 2011 தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. வெற்றியும் பெற்றன. ஆனால் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அதிமுக, தேமுதிக மோதல் தொடங்கியது. 2012 பிப்ரவரி மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் விஜயகாந்தும் ஜெயலலிதாவும் நேரடியாகவே வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். சபாநாயகர் தலையிட்டு தேமுதிகவினரை சபையிலிருந்து வெளியேற்றினார்.

• விஜயகாந்த் – ஜெயலலிதா மோதலுக்குப் பிறகு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுக தலைவி ஜெயலலிதாவை சந்தித்து அவருக்கு தங்கள் ஆதரவைச் சொன்னார்கள். முதலில் தேமுதிகவின் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியிலிருந்து விலகி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார் அவரைத் தொடர்ந்து எட்டு எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். சட்டமன்றத்தின் இறுதி கூட்டத் தொடர் 2016ல் முடிந்ததும் அவர்களும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்கள்.

• 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதால் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் சில மாவட்ட செயலாளர்களும் கட்சியிலிருந்து விலகினார்கள். அதில் சிலர் திமுகவில் இணைந்தார்கள். சிலர் ஒன்றிணைந்து மக்கள் தேமுதிக என்ற புதுக் கட்சியைத் துவக்கினார்கள்.
விஜயகாந்தின் தேமுதிகவில் ஆரம்பம் முதலே அவரது மனைவி பிரேமலதா அவருடனே கட்சிப் பணிகளில் ஈடுபட தொடங்கினார்.

பிரேமலாதாவின் சொந்த ஊர் குடியாத்தம் அருகிலுள்ள செம்பேடு கிராமம். இவரது தந்தை ஆம்பூர் சர்க்கரை ஆலையில் பணி புரிந்ததால் பிரேமலதா ஆம்பூரில் பள்ளிப்படிப்பைப் படித்தார். பிறகு வேலூரில் கல்லூரிப் படிப்பு. கல்லூரி முடிந்ததுமே விஜயகாந்துடன் திருமணம். ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டுமென்பதுதான் என் ஆசையாக இருந்தது ஆனால் அது நிறைவேறவில்லை என்று பின்னாள் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் பிரேமலதா. விஜயகாந்த் – பிரேமலதா திருமணத்தை முன்னின்று நடத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி.
ஆரம்பத்தில் ரசிகர் மன்றத்தின் சில பணிக்களை கவனித்துக் கொண்டிருந்தார் பிரேமலதா. தேமுதிக துவக்கப்பட்டப் பிறகு விஜயகாந்தின் பிரச்சார பயணங்களில் அவருக்கு துணையாக செல்வது வழக்கமானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட துவங்கினார்.

2016 சட்டமன்றத் தேர்தலின் போதே விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை. அவரால் அதிகமாய் பிரச்சாரங்கள் செய்ய இயலவில்லை. அவருக்கு உதவியாகவும் பல இடங்களில் அவருக்குப் பதிலாகவும் பிரச்சாராங்களில் ஈடுபட்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பிரேமலதாவின் அரசியல் ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. தேமுதிக மேடைகளில் பேசிக் கொண்டிருந்த பிரேமலதாவுக்கு கட்சியில் பொறுப்புகள் கொடுக்கப்படாமலிருந்தது. 2018 அக்டோபர் மாதம் பிரேமலதா கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். ’ 14 ஆண்டுகளாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்துதான் பணியாற்றினேன். உண்மையான உழைப்புக்கு விஜயகாந்த் அங்கீகாரம் கொடுப்பார் என்பதற்கு அடையாளம் இது.’ என்று தனக்களிக்கப்பட்ட பதவி குறித்து கூறினார் பிரேமலாதா. ஏற்கனவே கட்சியின் துணை செயலாளராக பிரேமலதாவின் தம்பி சுதீஷ் இருக்கிறார். விஜயகாந்தின் மகன் விஜய பிராபகரனும் இப்போது தேமுதிகவின் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார். மற்றொரு குடும்பக் கட்சி என்ற விமர்சனம் தேமுதிகவின் மீது படியத் துவங்கியிருக்கிறது.

இன்று விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிக பலவீனமான நிலையில் இருக்கிறார். அவர் மட்டுமில்லாமல் அவரது கட்சி தேமுதிகவும் பலவீனமாகதான் இருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டு வெற்றிகளுடன் முன்னேறிய கட்சி இடையில் எடுக்கப்பட்ட சில தவறான முடிவுகளாலும் வழிகாட்டுதல்களாலும் இன்று தோல்விகளிலிருந்து மீள முடியவில்லை.
தேமுதிகவுக்கு வாக்களிப்பதில்லையே தவிர விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக தமிழக மக்கள் தேமுதிகவை மறக்காமல் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...