No menu items!

பிரபாகரன் மகள் உயிரோடு இருக்கிறாரா: வைரல் வீடியோவால் பரபரப்பு

பிரபாகரன் மகள் உயிரோடு இருக்கிறாரா: வைரல் வீடியோவால் பரபரப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளதாக பழ. நெடுமாறன் கூறிய பரபரப்பு அடங்குவதற்குள், பிரபாகரன் மனைவி மதிவதினி உயிருடன் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் மதிவதினி சகோதரி கூறிக்கொண்ட ஒருவர். அந்த பரபரப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் பிரபாகரன் மகள் உயிருடன் இருப்பதாக அடுத்த தகவல் வெளியாகி உலகத் தமிழர்களிடையே இப்போது பரபரப்பாகியுள்ளது.

உண்மை என்ன?

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போர் 2009 மே 18 அன்று முடிவுக்கு வந்தது. அன்றுதான் இலங்கை ராணுவத்தால் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று பிரபாகரன் மீதான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கையும் இந்திய அரசு முடித்து வைத்தது.

இறுதிப் போரில் பிரபாகரன் மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால், இலங்கை ராணுவம் கூறும் தகவலை ஏற்காத சிலர், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி வந்தனர்.

இந்நிலையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சில மாதங்களுக்கு முன்பு திடீரென தஞ்சையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார். இதுவரை பழ. நெடுமாறன் அந்த ஆதாரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘மதிவதனியும் பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள்’ என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார். அவரும் இதுவரை அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் ‘வீடியோ’ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் மகள் துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி இறுதிப் போருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் விவாத பொருளாகவும் ஆகி இருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்படி வந்தவர்களில், கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த தயாபாராஜ் என்பவரும் அவரது மனைவி உதயகலாவும் ராமேசுவரம் மண்டபம் சிறப்பு முகாமில் தங்களது உறவினர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் மண்டபம் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்தனர். இதில் தயாபாராஜ் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள உதயகலா ‘வீடியோ’ காட்சி மூலம்தான் அவர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்றிருக்கும் தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உதயகலா, அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த உதயகலா தான் பிரபாகரன் மகள் துவாரகவா?

இலங்கை ராணுவம் மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களும் அந்த இயக்கத்துடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் பிரபாகரனும் அவரது மனைவி மதிவதினியும் உயிருடன் உள்ளார்கள் என்ற தகவலை ஏற்கெனவே மறுத்துள்ளார்கள். இப்போது உதயகலாதான் துவாரகா என்ற தகவலையும் அவர்கள் மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் சொல்வது உண்மை என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...