No menu items!

உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாரா?

உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாரா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில்  இந்தியா பங்கேற்கும் முதல் போட்டி அக்டோபர் 8-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா ஆடவுள்ளது. கடந்த முறை இந்தியாவில் உலகக் கோப்பை நடந்தபோது நமது அணி சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியது. இந்த முறையும் அது நடக்க வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் கனவு. ஆனால் அது நடக்குமா?

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன.  2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆற்றல் வாய்ந்த வீர்ர்கள், தலைமை என வெற்றிக்கு தேவையான எல்லா அமசங்களும் இருந்தன. ஆனால் இப்போதைய அணியில் அதில் சில விஷயங்களைக் காணவில்லை. அதன் விளைவாகத்தான் கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவிலான எந்த ஐசிசி கோப்பையையும் இந்தியாவால் வெல்ல முடியவில்லை.

இப்போதைய இந்திய அணியில் இல்லாத மிக முக்கியமான விஷயம் இடதுகை பேட்ஸ்மேன்கள். ஒரு கிரிக்கெட் அணி வலிமையானதாக இருக்கவேண்டும் என்றால், அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் முதல் 6 இடங்களில் 2 இடதுகை பேட்ஸ்மேன்களாவது இருக்க வேண்டும். 2011-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என முதல் 6 பேட்ஸ்மேன்களில் 3 பேர் இடதுகை பேட்ஸ்மேன்களாக இருந்தனர். இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேஷனோடு ஆடிய காலகட்டத்தில்  எதிரணி பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீச முடியாமல் திணறினார்கள்.

ஆனால் இப்போதைய இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயஸ் ஐயர்  ஆகிய 6 பேட்ஸ்மேன்களும் வலதுகை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். ரிஷப் பந்த், ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்கள். ஆனால் இதில் ரிஷப் பந்த் இப்போது காயத்தால் இந்த தொடரில் ஆடுவது சந்தேகமாக இருக்கிறது. மற்றொரு வீர்ரான ஜடேஜா, 7-வது பேட்ஸ்மேனாகத்தான் களத்தில் இறங்குவார். முதல் 6 பேட்ஸ்மேன்கள் என்னதான் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே ஸ்டைலில் ஆடுவதால், அவர்களுக்கு எதிராக வியூகம் வகுப்பது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு எளிதாக இருக்கும்.

அதனால் இப்போதுள்ள இளம் இட்துகை பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுப்பது முக்கியம்.  ஆனால் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எந்த சீனியர் வீர்ரை கழற்றிவிட்டு இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது என்பதைப் பற்றி அணி தீவிரமாக யோசிக்க வேண்டும்.

2011-ல் தோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்தார். தெளிவான முடிவுகளை எடுத்தார். ஆனால் சமீப காலமாக ரோஹித் சர்மா அத்தனை தெளிவாக இல்லை. அவரது பேட்டிங் ஃபார்ம் பாதிக்கப்பட்டுள்ளது அவரது தன்னம்பிக்கையை மேலும் குறைக்கிறது. மாறாக ஹர்த்திக் பாண்டியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால் உலக்க் கோப்பைக்குள் அவரை கேப்டனாக நியமிப்பார்களா என்பதும் கேல்விக்குறியாக உள்ளது.

பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரின் காயங்களும் அணியை பலவீனப்படுத்தி இருக்கின்றன. இதில் பும்ராவும், ஸ்ரேயஸ் ஐயரும் ஆடுவார்கள் என்று சொல்லப்பட்டாலும், இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் உலக்க் கோப்பைக்கு முன் தயாராக மாட்டார். அவருக்கு ஒரு மாற்றை உருவாக்க வேண்டும். இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் ஆகியோரை அணியில் முக்கிய அங்கமாக்க வேண்டும்.

ஆனால் அதற்கு உரிய நேரம் இல்லை. உலகக்  கோப்பை தொடருக்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர், ஆசிய கோப்பை என 2 முக்கிய தொடர்கள் மட்டுமே உள்ளன. புதிய வீர்ர்களை இந்த தொடருக்கு முன் உருவாக்க வேண்டும். அவர்களை ஆடவைக்கும் தைரியம் தேர்வுக் குழுவுக்கு இருக்க வேண்டும். ஆனால் தேர்வுக்குழு இப்போதைக்கு அதற்கு தயாராக இருப்பதுபோல் தெரியவில்லை. இன்னும் பழைய ஃபார்முலாவையே அது தொடர்ச்ச்சியாக கடைப்பிடித்து வருகிறது.   ரோஹித் சர்மா போன்ற வீர்ர்கள் ஃபார்ம் அவுட்டாக இருந்தாலும் அவர்களையே இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறது.

2007-ம் ஆண்டில் அணி இப்படி தொய்வில் இருந்த சமயத்தில் மூத்த வீர்ர்களை தூக்கிப் போட்டு தோனி தலைமையில் ஒரு புதிய அணியை தைரியமாக உருவாக்கினார் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் வெங்சர்க்கர். ஆனால் இப்போதைய தேர்வுக்குழுவுக்கு அப்படி ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தைரியம் இருப்பதாக தெரியவில்லை.  

இந்த மாற்றம் வராத வரையில் இந்த உலக்க் கோப்பை நமக்கு கனவாகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...