No menu items!

அதிமுக மாநாடு – கொட்டப்பட்ட சாப்பாடு – என்ன நடந்தது? – மிஸ் ரகசியா

அதிமுக மாநாடு – கொட்டப்பட்ட சாப்பாடு – என்ன நடந்தது? – மிஸ் ரகசியா

மதுரை மாநாட்டு களைப்பு ரகசியா முகத்தில் தெரிந்தது.

”சாப்பாடுலாம் பலமா இருந்துச்சுனு கேள்விப்பட்டோம். உன்னைப் பாத்தா அப்படி தெரியலையே?”

“கிண்டலா? வெயில்ல மதுரைக்கு அனுப்பிட்டு…கிண்டல் வேற”

“சரி, அதிமுகவின் மாநாட்டைவிட வீணாக்கி அண்டா அண்டாவா கொட்டுன சாப்பாடு பத்திதான் பேச்சா இருக்கே?”

“ஆமா, அதுல எடப்பாடி பழனிசாமிக்கு பயங்கர வருத்தமாம். கூட்டம், பேச்சு எதுவும் வெளில வரல சாப்பாட்டை கொட்டுனதுதான் பெருசா போயிருச்சுனு வருத்தப்பட்டிருக்கிறார்”

“என்ன நடந்ததது?”

”காலைல சாப்பாடு போடணும்கிறதுலதான் பிரச்சினை ஆரம்பிச்சிருக்கு. மாநாட்டுக்கு வர்றவங்களுக்கு காலை டிபன்லருந்து கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. இட்லி, சட்னி, வடை, சாம்பார்னு சமைக்கிறது கஷ்டம்னு சாம்பார் சாதம், புளியோதரைனு சமைச்சிருக்காங்க. மாநாட்டுக்கு பத்து லட்சம் பேர் வருவாங்க, காலைல சாப்பாட்டுக்கு 3 லட்சம் பேர் இருப்பாங்கனு ஏதோ கணக்குப் போட்டுருக்காங்க. ஆனா காலைல வந்த தொண்டர்கள் பல பேர் வரும்போதே சாப்பிட்டுட்டு வந்துட்டாங்க. சாப்பிட வந்த கொஞ்சம் பேரும் சாம்பார் சாதம் மட்டும் சாப்பிட்டிருக்காங்க. புளியோதரை அப்படியே மீதியாயிடுச்சு”

“காலைல சாப்பாடு கொடுப்போம்னு சொல்லியிருந்தா தொண்டர்கள் இங்க வந்து சாப்பிட்டிருப்பாங்கல?”

“ஆமா, அப்படி செய்யல. அது மட்டுமில்லாம சாப்பாடு நல்லா இல்லலனு காலைலேயே பேச்சு ஆரம்பிச்சிருச்சு. அரிசி வேகல சாப்பிட முடியலன்ற கம்ப்ளைண்ட் வந்தப் பிறகு சாப்பிடறதுக்கு யாரும் ஆர்வம் காட்டல. மாநாட்டு மைதானத்துல மூணு இடத்துல பிரமாண்டமா சமையல் வேலை நடந்தும் கெட்டப் பேருதான் வந்துருக்கு. சமையலுக்கு மட்டும் பத்தாயிரம் பேரைக் கூட்டிட்டு வந்தாங்களாம்”

“மீதியான சாப்பாட்டை ஏன் கீழ கொட்டுனாங்க. அக்கம் பக்கத்துல கொடுத்திருக்கலாம்ல”
“எத்தனை பேருக்கு கொடுக்க முடியும்? யாருக்குனு போய் கொடுக்கறதுனு கீழ கொட்டிட்டாங்கனு சிலர் சொல்றாங்க. சிலர், புளியோதரை கெட்டுப் போச்சு அதனால கொட்டிட்டாங்கனு சொல்றாங்க. கொட்டுன சாப்பாட்டையெல்லாம் லாரில எடுத்துட்டு போய் குப்பைல கொட்டிருக்காங்க”

”ரொம்ப அநியாயம். சரி, மாநாட்டுல என்ன சுவாரசியம்? மதுரை மாநாடு வெற்றியா தோல்வியா?”

“எடப்பாடியைப் பொறுத்தவரை வெற்றிதான். தான் நினைச்சபடி மாநாட்டை முழு வெற்றியாக நடத்தி முடிச்ச திருப்தியில இருக்கார். 15 லட்சம் பேரைக் கூட்டறதுதான் இலக்குன்னு மாவட்ட செயலாளர்கள்கிட்ட சொல்லிச் சொல்லியே பெரும் கூட்டத்தைக் கூட்டிட்டார். இதன்மூலாமா அதிமுக தன்னோட கட்டுப்பாட்டுலதான் இருக்குன்னு நிரூபிச்சுட்டார். அதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம். மாநாடு முடிஞ்சதும் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, ஜெயக்குமார்னு எல்லா நிர்வாகிகளையும் கூப்பிட்டு நன்றி சொல்லி இருக்கார். ‘உங்க உழைப்பாலதான் இந்த மாநாடு வெற்றி அடைஞ்சிருக்கு. நாம ஒற்றுமையா இருந்தா எதையும் சாதிக்க முடியுங்கிறதுக்கு இந்த மாநாடு ஒரு உதாரணம். உங்க எல்லாருக்கும் நன்றி’ன்னு கைகூப்பி சொல்லி இருக்கார்.”

“பிரதமரையும் கூப்டிருந்தா இந்த மாநாடு இன்னும் முழுமையாகி இருக்குமே?”

”மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்னகூட இதைப்பத்தி தலைமைக் கழகத்துல விவாதிச்சு இருக்காங்க. அப்ப கே.பி.முனுசாமிதான் பிரதமரைக் கூப்பிட எதிர்ப்பு தெரிவிச்சிருக்கார். ‘இந்த மாநாடு முழுக்க முழுக்க நம்மளோட செல்வாக்கை நிரூபிக்கறதா இருக்கணும். மாநாட்டுக்கு பிரதமரை கூப்டா மீடியாவோட கவனம் அவர் பக்கம் திரும்பிடும். மாநாட்டு செய்திகளை தாண்டி பிரதமர் பேச்சுக்குதான் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கும். தவிர பிரதமருக்காகத்தான் கூட்டம் கூடிச்சுன்னு அண்ணாமலையே சொல்வார். அதனால அவரைக் கூப்பிட வேண்டாம். முதல்ல நம்ம செல்வாக்கை நிரூபிப்போம். அதுக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார மாநாடு நடத்துவோம். அதுக்கு பிரதமர் உட்பட எல்லா கூட்டணி கட்சி தலைவர்களையும் கூப்பிடுவோம்’ன்னு கே.பி.முனுசாமி சொல்ல அதை மற்ற நிர்வாகிகள் ஆதரிச்சு இருக்காங்க. அதனாலதான் பிரதமரை கூப்பிடற திட்டம் கைவிடப்பட்டு இருக்கு.”

“திமுக உண்ணாவிரத நிகழ்ச்சில உதயநிதி ரொம்ப கடுமையா பேசியிருக்கிறாரே?”

“ஆமா. அவர் இவ்வளவு கடுமையா பேசுவார்னு கட்சிக்காரங்க யாருக்கும் தெரியாதாம். பொதுவா முக்கியமான கூட்டங்கள்ல உதயநிதி பேச போறதுக்கு முன்னாடி அவருக்கு நெருக்கமானவங்ககிட்ட பேச்சை பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். இந்தக் கூட்டத்துக்கும் அப்படிதான் டிஸ்கஸ் பண்ணியிருக்கிறார். செருப்பால அடிப்பாங்க மாதிரியான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணலையாம். ஏதோ எமோஷன்ல பேசிட்டார்னு திமுக தரப்புல சொல்றாங்க”

”முதல்வர் எப்படி எடுத்துக்கிட்டாராம்? ஏதாவது நியூஸ் வந்ததா?”

“கட்சி மூத்தவங்க முதல்வர்கிட்ட உதயநிதி பிரமாதமா பேசிட்டார்னு பாராட்டி சொல்லியிருக்காங்க. அதுக்கு முதல்வர், உதயநிதி இனிம ஜாக்கிரதையா இருக்கணும். டெல்லி அவர் மேல பாயும்னு சிரிச்சிக்கிட்டே சொல்லியிருக்கிறார். உதயநிதி இப்படி வளர்வது அவருக்கு சந்தோஷம்தான் என்கிறார்கள் உடனிருந்தவர்கள்”

”உதயநிதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகள்கிட்டருந்து எந்த ஆதரவும் வரலையே?”

“ஆமாம். உண்ணாவிரதப் பந்தல்ல கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்து பாத்துட்டுப் போவாங்கனு எதிர்பார்த்திருக்காங்க. ஆனா யாரும் வரல. இதுல திமுகவினர் கொஞ்சம் அப்செட். நீட் தொடர்பா கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டம் போடலாமனு திமுக யோசிச்சுக்கிட்டு இருக்கு.”

”பாஜக தரப்புல என்ன ரியாக்‌ஷன்?”

“அதான் திருப்பதி நாராயணன் உடனடியா அறிக்கை கொடுத்திட்டாரே. உதயநிதியை அமைச்சர் பதவிலருந்து நீக்கணும்னு பாஜகவினர் சொல்றாங்க. உதயநிதி, பேச்சை வரிக்கு வரி இந்தியில மொழிமாற்றம் செஞ்சு, அதை அமித் ஷாவுக்கு அனுப்பி வச்சிருக்காராம் ஆளுநர்”

“நான் பாஜக ரியாக்‌ஷன் தானே கேட்டேன். நீ ஏன் ஆளுநர் ரியாக்‌ஷன் பத்தி சொல்ற?”

“ஓ அவர் கவர்னர்ல…அடிக்கடி மறந்து போறது” என்று சிரித்தாள் ரகசியா.

“மதுரைல டிஎம்எஸ் சிலையை முதல்வர் திறந்துவச்ச நிகழ்ச்சிக்கு பிடிஆர் வரலையே. ஏதாவது பிரச்சினையா?”

“நிகழ்ச்சிக்கு முன்னாடியே முதல்வர்கிட்ட முன் அனுமதி வாங்கி பிடிஆர் மலேசியாவுக்கு போய்ட்டதா அவர் தரப்பு சொல்லுது. ஆனா அமைச்சர் மூர்த்தி தரப்போ, அவர் இருந்தாலும் ஒத்தை ஆளாத்தான் வந்திருக்கணும். கூட வர ஒரு ஆதரவாளர்கூட இல்லை. அதான் அவர் நிகழ்ச்சிக்கு வரலைன்னு பேசிட்டு இருக்காங்க.”

“மதுரைல திமுகவுக்கு எப்பவும் பிரச்சினைதான். வேற எங்கலாம் இது மாதிரி திமுக கோஷ்டி சண்டை இருக்கு?”

“முதல்வரும் இதைதான் கட்சிக்காரங்ககிட்ட கேட்டிருக்கார். சமீபத்துல ராமநாதபுரத்தில் தென் மண்டல பூத் முகவர்கள் மாநாட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்கிட்ட தன் மகனை அறிமுகப்படுத்தி இருக்கார் அமைச்சர் ராஜ கண்ணப்பன். அப்ப, நாடாளுமன்றத் தேர்தல்ல ராமநாதபுரத்துல போட்டியிட தன் மகனுக்கு சீட் வேணும்னு அவர் கேட்டிருக்கார். அதுக்கு முதல்வர், ‘முதல்ல கோஷ்டி சண்டை இல்லாம கட்சியை வளர்க்கப் பாருங்க. மத்ததையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாராம்”

”அண்ணாமலை நடைபயணத்தை முடிச்சுக்கிட்டாரே. இரண்டாம் கட்டம் செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கும்னு சொல்லியிருக்காங்களே?”

“ஆமா. முதல் கட்ட நடை பயணம் முடியற நேரத்துல அதிமுக மாநாடு நடத்தியிருச்சு, திமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திருச்சு. இதனால நமக்கு கிடைக்க வேண்டிய வெளிச்சம் கிடைக்கலனு அண்ணாமலை தரப்புல ஒரு எரிச்சல் வந்திருக்கு. அது மட்டுமில்லாம, மதுரைல அதிமுக பெரிய கூட்டத்தைக் கூட்டியதும் பாஜகவினருக்கு கொஞ்சம் ஆச்சர்யம்தான். கோவை, சேலத்துலதான் எடப்பாடி பழனிசாமியால கூட்டத்தை கூட்ட முடியும்னு நினைச்சோம். ஆனா தென் தமிழ்நாட்டுலயே பலத்தைக் காட்டிட்டாருனு அண்ணாமலை நடைபயணத்துல போனவங்க பேசியிருக்காங்க. இவ்வளவு கூட்டம் காட்டுனா நாடாளுமன்றத் தேர்தல்ல அதிக சீட் கேக்க முடியாதுனு பாஜகவுல நினைக்கிறாங்க”

“கூட்டத்தை வச்சா சீட் பிரிப்பாங்க? அமித்ஷா என்ன சொல்றாரோ அதை எடப்பாடி பழனிசாமி செய்யப் போறாரு. அதானே நடக்கும்”

“சரியா சொன்னிங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...