No menu items!

இந்தியாவின் முதல் ராக்கெட் – Kerala Church to Sky

இந்தியாவின் முதல் ராக்கெட் – Kerala Church to Sky

உலகின் ஒட்டுமொத்த கவனமும் இன்று இஸ்ரோவை நோக்கி திரும்பியிருக்கிறது. சந்திரயான் 3 திட்டமிட்டபடி நிலவில் இறங்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் மக்கள். மாலை 6.03 மணிக்கு சந்திரயான் நிலவில் கால் பதிப்பதை இஸ்ரோ நேரலையில் ஒளிபரப்ப, சந்திரயான் 3 பற்றிய விவாதங்களும், விளக்க உரைகளும் சர்வதேச சேனல்கள் முதல் உள்ளூர் யூடியூப்கள் வரை எல்லாவற்றிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிகூட, மாலையில் இதற்காக நேரம் ஒதுக்கி சந்திரயானின் பயணத்தை நேரலையில் பார்க்க இருக்கிறார்.

சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் இஸ்ரோ அமைப்பு, இன்றைக்கு 100 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களின் பெருமைக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனால் 1962-ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தொடங்கப்பட்டபோது இதை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. சைக்கிளில் உதிரி பாகங்களை கொண்டுசென்று இணைத்துதான் முதல் ராக்கெட்டை உருவாக்கினார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

1962-ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பெயர் இஸ்ரோ அல்ல. Indian National Committee for Space Research (INCOSPAR) என்பதுதான் அதன் பெயராக இருந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் உள்ளிட்ட சில விஞ்ஞானிகளைக் கொண்ட அமைப்பாக ஒரு சிறிய அலுவலகத்தில் இது தொடங்கப்பட்டது.

1963-ம் ஆண்டில் INCOSPAR அமைப்பு தங்கள் முதல் ராக்கெட்டை பறக்க விட்டது. கேரளாவில் உள்ள தும்பாவில் இருந்து பறக்க விடப்பட்ட இந்த ராக்கெட் அதிக அளவிலான ஒலியை எழுப்பி விண்ணில் பாய்ந்தது. முதல் ராக்கெட் என்பதால் இதை அதிக உயரத்துக்கு இந்திய விஞ்ஞானிகள் பறக்க விடவில்லை. குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இந்த ராக்கெட்டின் பணி வளிமண்டலத்தை ஆய்வு செய்ததாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையங்கள் அனுப்பிய உதிரி பாகங்களின் உதவியுடன் இந்த ராக்கெட் பறக்க விடப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமும், இந்த முதல் ராக்கெட்டை செலுத்திய குழுவில் இருந்திருக்கிறார். இதைப்பற்றி பின்னாளில் குறிப்பிட்டுள்ள அப்துல் கலாம், “தும்பாவில் ஒரு தேவாலயத்துக்கு அருகில் உள்ள மீனவ குடியிருப்பை காலி செய்து, அங்கிருந்துதான் முதல் ராக்கெட்டை செலுத்தினோம். இப்போதுபோல் ராக்கெட் பாகங்களை கொண்டுசெல்ல அந்த காலத்தில் நவீன வாகனங்கள் இல்லை. ஒரு சாதாரண சைக்கிளில் வைத்துதான் ராக்கெட் பாகங்களை அதன் ஏவுதளத்துக்கு கொண்டுசென்றோம். அவ்வாறு கொண்டுசென்ற உதிரி பாகங்களை இணைத்து, 1963-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி முதல் ராக்கெட்டை பறக்கவிட்டோம்” என்கிறார். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி ஆராய்சியாளரான ஹோமி பாபா உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் ராக்கெட்டை ஏன் தும்பாவில் இருந்து விஞ்ஞானிகள் பறக்க விட்டனர் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்தியாவில் இருந்து ராக்கெட்டை பறக்கவிட ஏற்ற இடமாக அப்போது தும்பா கண்டறியப்பட்டது. கடலை ஒட்டியிருந்த அந்த கிராமம் புவியியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்த்தால் அங்கிருந்து ராக்கெட்டை ஏவுவது சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதைத்தொடர்ந்துதான் அங்கிருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இந்த காலகட்டத்தில் அங்கிருந்த தேவாலயம் (St Magdalene Church) சில காலத்துக்கு விஞ்ஞானிகளின் பணிமனையாகவும், அந்த தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியாரின் வீடு அலுவலகமாகவும் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் 1985-ம் ஆண்டில் அந்த கட்டிடம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அருங்காட்சியகமாக ( Vikram Sarabhai Space Centre Space Museum) மாற்றப்பட்டது.

இப்படி ஆரம்பத்தில் ICONOSPAR என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்சி மையம்தான், பின்பு 1969-ம் ஆண்டில் Indian Space Research Organisation (ISRO) என்று மாற்றப்பட்ட்து.

தற்போது பெங்களூருவை தலைமையிடமாக்க் கொண்டு செயல்பட்டு வரும் இஸ்ரோ அமைப்பு இந்தியாவுக்காக மட்டுமின்றி வேறு 21 நாடுகளுக்காகவும் ராக்கெட்களை ஏவி சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும் இந்த அமைப்புக்காக இதுவரை இந்திய அரசு ஒதுக்கி, செலவிட்டுள்ள தொகை, நாசா அமைப்புக்காக அமெரிக்க அரசு அரை ஆண்டுக்கு ஒதுக்கும் நிதிக்கு சமம். அந்த அளவுக்கு குறைந்த செலவில் சிக்கனமாக ராக்கெட்களை அனுப்பி சாதனை படைத்து வருகிறது இஸ்ரோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...