No menu items!

டான்:சினிமா விமர்சனம்

டான்:சினிமா விமர்சனம்

‘தன்னுடைய மகன் சூப்பர் ஹீரோ ஆகவேண்டும் என்பதற்காகவே, அப்பா சிறப்பான, தரமான வில்லனாக இருக்கிறார்’ என்பதே ’டான்’ படத்தின் ஒன் லைன். இதை கல்லூரி கலாட்டாக்களுடன் கலகலப்பாக தொடங்கி, மனதைக் கணக்க செய்யும் அப்பா சென்டிமெண்டுடன் கண்ணீரில் முடித்திருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.

சிவகார்த்திகேயனின் வழக்கமான ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் இருந்தாலும், எஸ்.கே-யின் முகத்தில் இருக்கும் சார்மிங் இப்படத்தில் மிஸ்ஸிங். ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன் இதை ஏன் பல ஃப்ரேம்களில் கண்டுகொள்ளவில்லை என்பதை அவர் பேட்டி ஏதேனும் கொடுத்தால் அதில் கூட சொல்லலாம். ப்ரியங்கா மோகன், திரையில் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறார்.

எஸ்.ஜே. சூர்யா இனி இயக்குநர் சங்க உறுப்பினர் என்று சொல்வதை விட, நடிகர் சங்க உறுப்பினர் என்று சொல்லிக் கொள்ளலாம். முழுநேர நடிகராகவே மாறியிருக்கிறார் இந்த முன்னாள் இயக்குநர். படத்தின் உண்மையான டான், சமுத்திரக்கனி. காட்சிக்கு காட்சி அவர் மீது உண்டாகும் வெறுப்பே, அவருடைய வெற்றி.

சிவகார்த்திகேயனின் நண்பராக வரும் பெருசு சூரிக்கு இங்கே காமெடியில் வேலை இல்லை.

பிக் பாஸ் மூலம் மெகா எண்ட்ரீ கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, ராஜூ பாயின் இந்த எண்ட்ரீ கொஞ்சம் பயத்தை வரவழைக்கக்கூடும். ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போல வந்து போகிறார்.

சிவகார்த்திகேயன் ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும்  வைத்து காட்டும் ஹார்ட் ஸ்டைல், அநேகமாக ட்ரெண்ட் ஆகலாம். குறளில் 14-வது அதிகாரம் ஒழுக்கம், 40-வது அதிகாரம்தான் கல்வி. அதனால் ஒழுக்கம்தான் ஃபர்ஸ்ட் என்று எஸ்.ஜே. சூர்யா மிரட்டும் காட்சி, ப்ரியங்கா மோகனின் பேனாவை சிவகார்த்திகேயன் திருப்பிக் கொடுக்கும் காட்சி, இன்ஜினியரிங் கல்லூரியின் ப்ராஸ்பெக்ட்டஸ் புத்தகத்தின் அட்டையில் இருக்கும் இளம் பெண் இந்த கல்லூரியில் படிக்கவில்லையே என்று புகார் செய்யும் காட்சி என ரசிக்கும் அம்சங்களை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள்.

வடிவேலுவிற்கு பிறகு பல படங்களுக்கு முட்டு கொடுத்துவரும் அனிருத்தின் ’பே’, ‘ஜலபுல ஜங்’ பாடல்களுக்கு திரையரங்குகளில் கொண்டாட்டமாக இருக்கிறது.

சமீபகாலமாக சிங்கிள் கவர் பாடல்களில் ஜொனிட்டா காந்தியுடன் பாடுவதில் பிஸியாக இருப்பதாலோ என்னவோ, பேக் க்ரவுண்ட் மியூசிக்கில் பேக் அடித்து இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் சிபி சக்கரவர்த்தி, திரைக்கதையில் ரப்பராய் இழுத்திருந்தாலும், வசனத்தில் சூப்பராய் கவனம் ஈர்க்கிறார்.

’முயலும் ஆமையும் ஜெயிக்கும், முயலாமைதான் தோற்கும்’

முதல் கல்லை விட இரண்டாவது கல்தான் ரொம்ப தூரம் போகும். முதல் கல்லுக்கு இலக்கு இல்லை. ஆனால் இரண்டாவது கல்லுக்கு அப்படியில்லை. அதே மாதிரிதான் உன்னோட முதல் முயற்சி. இப்போது முதலில் இருந்து ஆரம்பி’

‘இங்கே எல்லோரும் மற்றவர்கள் வாழ்க்கையைதான் வாழ்கிறோம். அவன் யாரென்று தேடி கண்டுபிடிக்கிறவரைக்கும். கண்டுபிடித்த பின்னாடிதான் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான்’

இப்படி ஆங்காங்கே வசனங்கள் பளீச் பளீச்.

படத்தில் வில்லன் என்று யாருமில்லாத குறையை தீர்த்து வைத்திருக்கிறார் எடிட்டர் ராகுரன் ராமச்சந்திரன். ரசிகர்கள் மீது கொஞ்சமாவது அக்கறை வேண்டாமா? பல சம்பவங்களை, காட்சிகளை திணித்து இருப்பது படம் பார்க்கும் போது சோர்வளிக்கிறது.

தேவையில்லாத காட்சிகளை பாவம் பார்க்காமல் எடிட் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற கமெண்ட்டை திரையரங்கில் கேட்க முடிந்தது. படம் 163 நிமிஷம். 40 விநாடிகள்.

சிவகார்த்திகேயன் ‘தேடுறதுல கிடைக்கிற அந்த ஒரு நிமிஷத்துல வாழ்க்கை மாறிடும்’ என்று சொல்வார். அந்த ஒரு நிமிஷத்திற்காக ஒன்னரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார்கள். சரி கல்லூரி கதைதான் என்று நினைக்கும் போது, அப்பா சென்டிமெண்ட்டை வைத்து, க்ளீசரின் உதவி இல்லாமலேயே கண்களைக் குளமாக்குகிறார்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு அப்பாக்கள் வில்லன்களாக இருப்பதன் பின்னணியை கமர்ஷியலாக காட்டியிருப்பதற்காகவே சிபி சக்கரவர்த்தி ஒரு ஹேண்ட் ஷேக்.

முதல் பாதியில் ஸ்டூடண்ட்ஸ் கைத்தட்டுகிறார்கள்!. இரண்டாம் பாதியில் பேரண்ட்ஸ் கைத்தட்டுகிறார்கள்!.!.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...