No menu items!

நியூஸ் அப்டேட்:எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தம்!

நியூஸ் அப்டேட்:எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தம்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் 3.34 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது. எலான் மஸ்கின் கருத்து குறித்து ட்விட்டர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சென்னை மேடவாக்கத்தில் புதிய மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி இடையே ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் மேம்பாலத்தில் காரில் பயணித்தார். 2.03 கி.மீ நீளமும் 11 மீ அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தற்போதைய பாலங்களில் மிக நீளமான மேம்பாலம் என கூறப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, “புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களை பின்பற்ற தயாராக இருக்கின்றோம். ஆனால், நாங்கள் மாநில கல்வி கொள்கையினை பின்பற்றுகின்றோம். இந்தி தேர்வு மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கின்றோம். அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். சர்வதேச மொழியான ஆங்கிலமும் தாய் மொழியான தமிழ் மொழியும் இருக்கின்றது” என்றார். மேலும் இந்தி திணிப்பிற்கு அண்ணா சொல்லிய குட்டிக் கதையை கூறி, இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்துகொண்டு இருக்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வு: தள்ளிவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்கான முதுநிலை நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கலந்தாய்வு நடந்து கொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி இளநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் முதுநிலை தேர்வை தள்ளிவைத்தால் உள்ளுறை மருத்துவ சேவை பாதிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...