No menu items!

மிஸ் ரகசியா – புலம்பும் கவிஞர்

மிஸ் ரகசியா – புலம்பும் கவிஞர்

“வழக்கமாக புயல் என்றாலே மக்கள் டென்ஷன் ஆவார்கள். ஆனால் ’அசானி’ புயல் வந்தது மக்கள் ஹாப்பி. அக்னி நட்சத்திர வெயிலை கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு கட்டுப்படுத்தி ஏசில இருக்கிற மாதிரி…செம்ம கூலாக்கிருச்சு.  ” என்று உற்சாகமாய் அலுவலகத்துக்குள் நுழைந்தார் ரகசியா.

வந்தவருக்கு சூடாக ஒரு கப் காபி கொடுத்தோம்.

“ மழைக்கும் சூடான காபிக்கும் சூப்பர். மினிஸ்டர் ஒருத்தர் டென்ஷன்ல இருக்கார் தெரியுமா?”

”எந்த அமைச்சர்?”

”பெரியகருப்பன் மேல திமுக மேலிடம் அதிருப்தில இருக்கிறதாம். அமைச்சர் பதவி பறிபோகலாம் என்ற நிலையில், பதவியைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரத்தைக் கொடுத்துள்ளார் பெரியகருப்பன். திமுகவினர் மத்தியில் இப்போது அதைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது.”

“விளம்பரம் கொடுக்கிறது எல்லோரும் செய்யறதுதானே…விளம்பரம் கொடுத்தா அமைச்சர் பதவியைக் காப்பத்திக்கிறதுக்குனு சொல்ல முடியுமா?”

“அரசியல்ல எப்படி விளம்பரம் கொடுக்கிறதுனு இருக்கு. அது கட்சிக்காரங்களுக்கு புரியும். உங்களுக்குப் புரியாதா” என்று சிரித்தார் ரகசியா.

“அதிமுக செய்திகள் ஏதாவது இருக்கிறதா?”

“உள்கட்சித் தேர்தலில் எடப்பாடி ஆதரவாளர்கள் 90 சதவீத இடங்களைக் கைப்பற்றியதால் ஓபிஎஸ், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், வைத்தியலிங்கம் போன்ற முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.  ‘இப்படியே போனால் நம்மை ஓரங்கட்டி விடுவார்கள். அதனால் இப்போதே உஷாராக வேண்டும். சசிகலா தலைமையில் கட்சியைக் கைப்பற்ற முயலவேண்டும். அப்படிச் செய்ய முடியாவிட்டால் அம்மா முக்குலத்தோர் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க வேண்டும்’ என்று அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்களாம். கொங்கு பகுதியைச் சேர்ந்த எடப்பாடி எதிர்ப்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லியிருக்கிறார்களா. கோடநாடு கொலை வழக்கு விஷயத்தில் எப்படியும் எடப்பாடி கைதாவார் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படி கைதானால் தங்கள் முயற்சிகளைத் தொடங்கலாம் என்று அவர்களின் திட்டமாக உள்ளது.”

“இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பிவைக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறாரே?”

“பாஜகவின் மூத்த தலைவர்களே இதை ரசிக்கவில்லையாம். ஏற்கெனவே ஒருமுறை இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியதால்தான் தமிழர்களின் எதிர்ப்பை அப்போதைய மத்திய அரசு சம்பாதித்தது. இந்தச் சூழலில் மீண்டும் ராணுவத்தை அனுப்பி கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டுமா? என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.”

“மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என்று சொல்லியிருந்தாயே?”

“அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இம்முறை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் திட்டமாம். இதைக் கேள்விப்பட்டு விஷ்ணுபிரசாத், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், விஜயதாரணி போன்ற இளம் தலைவர்கள் டெல்லி தலைமைக்கு தூதுவிடத் தொடங்கி இருக்கிறார்கள்”  

“தேமுதிகவைப் பற்றி இப்போதெல்லாம் பேச்சே இல்லையே”

“எந்த திசையில் கட்சியை செலுத்துவது என்று அதன் மூத்த நிர்வாகிகளுக்குள் ஏக குழப்பமாம். இந்த சூழலில் ஏதாவது ஒரு ஆலோசனைக்காக மாவட்ட பிரதிநிதிகளை அழைத்தால், யாரும் இங்கு எட்டிக்கூட பார்ப்பதில்லையாம். போக்குவரத்து செலவைக்கூட கட்சித் தலைமை கொடுப்பதில்லை. அதனாஅல்தான் செல்வதில்லை என்று புலம்புகிறார்கள்”

“நான்கூட இதுபோன்ற ஒரு புலம்பலைப் பற்றி கேள்விப்பட்டேன். தமிழ் திரையுலகின் மூத்த கவிஞர் ஒருவரை சில காலமாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் புறக்கணித்து வருகிறதாம்.  மறுபக்கம் அதிகார மையத்தில் அப்பா இருந்தபோது இருந்த மரியாதை மகனிடம் கிடைக்காததால் புழுங்குகிறாராம் கவிஞர். சினிமாதான் தன்னை ஒதுக்குகிறது என்றால் அதிகார வட்டாரத்திலும் தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்று புலம்புகிறாராம்.”  

“வேறு என்ன செய்தி?”

“அடுத்த மழை பிடிப்பதற்குள் நான் கிளம்ப வேண்டும்” என்று அவசரமாய் கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...