No menu items!

இந்திய சினிமா இனிமேல் எப்படி இருக்கும்?

இந்திய சினிமா இனிமேல் எப்படி இருக்கும்?

எர்னஸ்ட் & யங் [] என்ற அமைப்பானது, ஃபிக்கி என்றழைக்கப்படும் எஃப்.ஐ.சி.சி.ஐ அமைப்பிற்காக ஒரு வருடாந்திர அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.

இந்திய திரைப்பட துறை குறித்த இந்த அறிக்கையில், பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான மறு வெளியீடு செய்யும் கலாச்சாரம் அதிகரித்து இருக்கிறது. மறுபக்கம், ஹிந்தி சினிமாவில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் இந்த ஆண்டு இல்லை. தெலுங்குப் படங்களில் எதுவும் இப்போது, பான் – இந்தியப் படங்களாக வரவேற்பை பெறவில்லை. மலையாளப் படங்கள் மட்டுமே தற்போது ஹிட்டடித்து வருகின்றன. இவையெல்லாம் நீடிக்க கூடிய தேக்க நிலை இல்லை என்பதால், இந்தியாவில் திரைப்பட துறை மேலும் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவை: தென்னிந்தியப் படங்கள் மற்றும் ஹிந்திப் படங்களில் இப்போது கதை சொல்லும் விதமானது வெகுஜன சந்தைக்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும் நோக்கத்துடன் வி.எஃப்.எக்ஸ் சமாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சினிமா பார்ப்பதற்கான வாய்ப்புகள் எளிமையாகி வருவதால் சினிமா துறை வளர்ச்சியடையும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமை மற்றும் ஒளிபரப்பு உரிமை இவற்றுக்கான வருவா\ய் மதிப்பில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. இதனால் உண்டாகும் இழப்பை, ஒடிடி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மூலம் சமாளிக்க முடிகிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே திரைப்படங்களை ஒடிடி-யில் கண்டுகளிக்க உதவும் கனெக்டட் டிவி எனப்படும் சிடிவி 2024-ல் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு வளர்ச்சி அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ல் ஒடிடி சேனல்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் சிடிவிகளின் எண்ணிக்கை 34 மில்லியன். அதாவது 34 மில்லியன் வீடுகளில் ஒடிடி சேனல்களை கண்டு ரசிக்கிறார்கள். இது இந்தாண்டில் 21% வரை வளர்ச்சியடையும் என்றும் இந்தாண்டுக்குள் சிடிவிகளின் எண்ணிக்கை 45 மில்லியனை தொடும் என தெரிகிறது. இந்த எண்ணிக்கையானது, இந்தியாவில் தொலைக்காட்சிகள் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையில் 21% ஆகும்.

வெளிநாட்டு திரையரங்க வருவாயின் வளர்ச்சியானது, கலாச்சார ரீதியாக ஒரே மாதிரியாக இருக்கும் சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் படங்கள் வெளியாவதைப் பொறுத்து மாறுபடலாம்.

இப்போது ஒடிடி தளங்களுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மேலும் தங்களது சந்தாதாரர்களை தக்க வைக்கவும் ஒடிடி தளங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. இதனால் ஒடிடி தளங்கள் பெரிய பட்ஜெட் படங்களை வாங்குவதற்கு போட்டியிடுகிறார்கள். டெண்ட்போல் என்றழைக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களில்தான் இனி ஒடிடி தளங்கள் முதலீடு செய்யும் சூழல் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, அதேநேரம் முன்பை போல் அதிக எண்ணிக்கையிலான படங்களில் முதலீடு செய்யாமல், குறைந்த எண்ணிக்கையிலான படங்களும் மட்டுமே முதலீடு செய்யப்படும். நடுத்தர பட்ஜெட் படங்களின் மீதான ஒடிடி தளங்களின் கவனம் குறையும் என்றும் கூறப்படுகிறது,

இந்தியாவின் செல்வ வளம் அதிகரிக்கும் பட்சத்தில், திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணமாக முன் வைக்கப்படும் விஷயம், இந்தியாவில் தனிநபர் வருமானம் 2500 அமெரிக்க டாலர்கள் என்பதில் இருந்து 3,000 அமெரிக்க டாலர்களாக 2025-ல் உயரும் என கணிக்கப்பட்டிருப்பதால், இந்த கணக்கை முன் வைத்திருக்கிறது ஆய்வறிக்கை.
இன்று திரைப்பட துறையின் வருவாய் சரிவுக்கு காரணம் மக்கள் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்காமல் தவிர்ப்பதுதான். திரையரங்குகளுக்கு ஒரு குடும்பம் சென்று படம் பார்க்கவேண்டுமென்றால், பெரும் செலவு பிடிப்பதால், திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலை மாறவேண்டும் என்பதையே ஆய்வறிக்கையும் கூறுகிறது.

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் தங்கள் குடும்பத்துடன் மாலை நேரத்தை செலவிட, திரையரங்குகளுக்கு செல்லும் வகையிலான மலிவு கட்டணத்தில் ‘மக்களின் சினிமா’ வை முன்னெடுத்தால் மாற்றம் நிகழ்லாம். அதாவது மல்ட்டி ப்ளெக்ஸ் மற்றும் ஒற்றைத் திரை இந்த இரண்டுக்கு இடைப்பட்ட சினிமா திரையரங்குகளின் உள்கட்டமைப்பில் முதலீடு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், போக்குவரத்து எளிமையாகி விடும் சூழல் உருவாகி வருகிறது. மெட்ரோ ரயில்களில் பயணிப்பதால், நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு, வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் பிரச்சினையிலிருந்தும் மக்களுக்கு விடுதலை கிடைக்கும். இதனடிப்படையில் நவீன சினிமா வளாகங்கள் கட்டுவது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஸ்மார்ட் சிட்டி கட்டமைப்பதும், அதன் மூலம் சினிமாவுக்கு பலன் அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒரு படம் பார்ப்பதற்கு வீட்டில் இருந்து கிளம்பி திரையரங்கு செல்ல, போக்குவரத்து நெரிச்சலினால் அதிக நேரம் பிடிப்பதால், சரியான நேரத்தில் சினிமாவுக்கு செல்ல முடியாமலோ, அல்லது வேண்டமென்று நினைப்பதாலோ உண்டாகும் பாதிப்புகளை களைய எண்ணம் முன் வைக்கப்படுகிறது. விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் தொடர் குடியிருப்புகள் என இவற்றில் நாளொன்றுக்கு 24 மணி நேரமும் செயல்பட கூடிய திரையரங்குகள் இருக்குமென்றால் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது இனி நடக்க கூடும்
2023-ல் வெளியான ஜவான், பதான், லியோ, கடார் 2, சலார், அனிமல், ஜெயிலர் போன்ற படங்கள் மக்களின் அன்றாட கவலைகளை மறக்கும் வகையில் ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டன். இவற்றுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இது போன்ற ‘மாஸ் எஸ்கேபிசம்’ கருத்தியல் அடிப்படையிலான வெகுஜன கமர்ஷியல் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், ஒடிடி தளங்களில் இது போன்ற வெகுஜன படைப்புகளுக்கு தேவை அதிகரித்து இருக்கிறது. 80% திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இது போன்ற படங்களில் அதிக கவனம் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய படங்களில் பயன்படுத்தப்படும் வி.எஃப். எக்ஸ் காட்சிகளின் சராசரி எண்ணிக்கையானது தற்போது கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கும் ரசிகர்களைக் கவர, இனி வி.எஃப்.எக்ஸ் என்பது வழக்கமான ஒரு அம்சமாகவே மாறும் எனவும் தெரிகிறது.

இந்த சமாச்சாரங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கு தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினைகள், தரமான கதை, திரைக்கதை,வசனம் எழுதவும், படங்களை இயக்கவும் ஆளுமைகள் இல்லாத சூழல். இதுதான் இந்திய சினிமாவிற்கு இருக்கும் சவால். மேலும் அது வளர்ச்சியடைய முன் நிற்கும் வாய்ப்பும் கூட.

குறையை ஒரு வாய்ப்பாக மாற்ற, திரைப்பட துறை கதை இலாகா, மக்களிடையே எழுதுபவர்களிடமிருந்து கதைகளை வாங்குவது, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிப்பது மிக மிக அவசியம்.

நன்றி: எஃப்.ஐ.சி.சி.ஐ மற்றும் இ&ஒய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...