No menu items!

வாரிசு, துணிவு: நடிகர்களின் சுயநலமா? தயாரிப்பாளர்களின் பேராசையா?

வாரிசு, துணிவு: நடிகர்களின் சுயநலமா? தயாரிப்பாளர்களின் பேராசையா?

2023 ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு உற்சாகமான ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்பு தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் இந்த உற்சாகம் நீடிக்கவில்லை.

ஒரு பண்டிகை.

இரண்டு படங்கள்.

மூன்று சர்ச்சைகள்.

என தமிழ் சினிமா 2023 -ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே கலவரத்தில் கலங்கிப் போய் கிடக்கிறது.

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களாக இருந்துவரும் அஜித், விஜயின் ‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகப் போகிறது என்றதுமே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்த இரண்டுப் படங்களில் எந்த நட்சத்திரத்தின் படம் முதலில் வெளியாகப் போகிறது, எந்தப் படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பதிலிருந்து பிரச்சினை ஆரம்பித்தது. திரையரங்கு ஒதுக்கீட்டில் ஆரம்பித்த பிரச்சினை கூட சினிமாவுக்குள் இருக்கும் பிஸினெஸ் சார்ந்த பிரச்சினை. எந்தப்படத்திற்கு சினிமா ட்ரேட் சர்க்கிளில் வரவேற்பு இருக்கிறதோ அதைப் பொறுத்து திரையரங்குகள் அதிகம் கிடைக்கும். இந்த ஒதுக்கீட்டினால் பொது மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த இருப்படங்களுக்குமான டிக்கெட் விலையை ஏறக்குறைய பத்து மடங்கிற்கு மேல் உயர்த்து விற்பனை செய்தது சாதாரண மக்கள் மீது திணிக்கப்பட்ட பிரச்சினை. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் ரசிகர்களிடம் கொஞ்சம் கூட யோசிக்காமல் சுரண்டும் தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் சுயநலம் மட்டுமே.

இந்த டிக்கெட் விலை பிரச்சினை இந்த இருப்படங்களால் மட்டுமே உருவாகவில்லை. இதற்கு முன்பாக பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது. ஆனால் தற்போது நடந்திருப்பது அதன் உச்சம். டிக்கெட் விலை படம் வெளியாவதற்கு முன்பாகவே தெரிந்த நிலையிலும், இதை தடுப்பதற்கான கால அவகாசம் அதிகமிருந்தும் இப்பிரச்சினையை நெறிப்படுத்த வேண்டிய யாரும் இதைக் கண்டுக்கொள்ளவில்லை.

பல பெற்றோர்கள் பொங்கலுக்கு என நீண்ட நாட்களாக பத்திரப்படுத்தி வைத்திருந்த சேமிப்பு, திரைப்பட டிக்கெட் விலையாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த முறை பொங்கலுக்கு கொடுக்கப்படும் அரசின் உதவி தொகை திரைப்படங்களுக்கான செலவாக மாறியிருக்கிறது.

இனியாவது அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தேவையான நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்.

அடுத்த சர்ச்சை, நீண்ட காலமாக கொஞ்சம் மறந்து போயிருந்த ரசிகர்கள் மோதல்.
இரு துருவங்களாக பார்க்கப்படும் இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றால், அதில் யாருக்கும் மாஸ் அதிகம் என்பதை காட்டுவதில் ரசிகர்களுக்கிடையே தேவையில்லாத ஒரு மோதல், கோபம் எல்லாமும் தானாகவே உருவாக்கப்பட்டு விடுகின்றன.

முன்னணியில் இருக்கும், போட்டியாளர்களாக கருதப்படும் இரு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரத்தின் படம் முதலி வெளியாகிறது. அடுத்த நட்சத்திரத்தின் படம் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கழித்து வெளியாகிறது என்றால், அவர்களது ரசிகர்களுக்கிடையேயான நேரடி போட்டியோ மோதலோ தவிர்க்கப்பட்டு விடுகிறது.

ஆனால் ஒரே நாளில் இரு நடிகர்களின் படங்களும் வெளியாகிறது என்றால், பல ஸ்கிரீன்கள் இருக்கும் இன்றைய மல்ட்டி ப்ளெக்ஸ்களில் கூட போட்டா போட்டி இருக்கிறது.

இதன் விளைவாக உற்சாகமிகுதியில் ரசிகர்கள் மாஸ்ஸை காட்டுவதற்கான முயற்சிகளும் நடந்தேறி வருகின்றன.

ஒரு நடிகரின் படம் கோயம்பேட்டில் இருக்கும் ஒரு திரையரங்கில் வெளியானது. அப்போது சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 19 வயது பரத் என்னும் ரசிகர் சாலையில் நின்ற லாரியின் மீது ஏறி நின்று நடனமாடினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

மற்றொரு சம்பவம் சேலத்தில் பிரதீப் என்னும் ரசிகர் திரையரங்கின் கதவில் மேல் நின்றிருக்கிறார். அப்போது கூட்ட அலை மோதியதில் கீழே விழுந்ததில் இவரது கால் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதும் கூட ‘அப்பா அம்மா வேண்டாம். என் தலைவர்தான் வேண்டும்’ என வலியில் கூறியதாகவும் சொல்கிறார்கள்.

கொஞ்ச நாட்களாக இல்லாமல் இருந்த பேனர் கிழிப்பு பஞ்சாயத்து மீண்டும் இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படங்களின் மூலம் ஆரம்பித்திருக்கிறது. இரவில் ஒரு நடிகரின் ரசிகர்கள் போட்டி நடிகர் படத்தின் பேனரை கிழிக்க, அதற்கு பதிலடியாக மறுநாள் மதியம் எதிர் நடிகரின் பட பேனரும் மற்றொரு நடிகரின் ரசிகர்களால் கிழிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் ஒரு திரையங்கில் ரசிகர்கள் முட்டிமோத, திரையரங்கின் வெளிப்பக்கம் இருந்த கண்ணாடி கதவு உடைந்து பொடிப் பொடியானது,

இதுபோன்ற ரசிகர்களுக்கு இடையேயான மோதல் மீண்டும் தலையெடுக்க காரணம் ஒரே நாளில் வெளியான படங்கள்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மூன்றாவதாக, சோஷியல் மீடியாவில் நடக்கும் வரையறை எதுவுமில்லாமல் நடக்கும் கமெண்ட் யுத்தம். இன்றைக்கு தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார், யார் நம்பர் 1, என்பது போன்ற விஷயங்களில் ட்ரெண்டிங்கை உருவாக்க வேண்டுமென நட்சத்திரங்களின் ரசிகர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ட்விட்டரில் ஒரு சைபர் வார் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மோதலில் வார்த்தைகள் தடிக்கின்றன. பொது வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளும் கூட மிக சகஜமாக, கர்வத்தோடு பகிரப்பட்டு வருகின்றன. அசிங்கமாக திட்டுவது என்பது இப்போது காலையில் காஃபி டீ குடிப்பது போன்ற ஒன்றாக மாறிவருகிறது. ரசிகர்களும் தங்களை மறந்து கோபத்தையும், வெறுப்பையும் அடுத்தவர்கள் மீது கொட்டி வருகிறார்கள்.

ட்விட்டரில் இப்படியென்றால் மற்றொரு சமூக தளமான இன்ஸ்டாக்ராமில் மீம்களை போட்டிப்போட்டு கொண்டு இரு தரப்பு ரசிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள். சில மீம்கள் எல்லையைத் தாண்டி முகம் சுளிக்க வைக்குமளவிற்கு இருக்கின்றன.

இப்படியொரு சூழலை உருவாக்கும் வகையில் போட்டி நடிகர்களின் படங்கள் ஒரே நாளிலில் வெளியாகவேண்டுமென்பது எதற்காக? யாருடைய சுயநலத்திற்காக?

எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம். முதலில் உங்கள் குடும்பத்தைப் பாருங்கள் என்கிறார் அஜித். ரசிகர்கள் பொறுமையோடு கண்ணியத்தோடு இருங்கள் என்கிறார் விஜய். ஆனால் ரசிகர்கள் இதற்கு கட்டுப்படுவது இல்லை.

இது எல்லாம் தெரிந்த பிறகு இனியாவது இது போன்ற தேவையற்ற ஒரு போட்டியை, சர்ச்சைகளை சம்பந்தபட்ட நடிகர்களே தவிர்க்க முன்வருவார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...