No menu items!

நியூஸ் அப்டேட்: மதுரையில் டைடல் பார்க் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

நியூஸ் அப்டேட்: மதுரையில் டைடல் பார்க் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் இன்று நடைபெற்ற சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தெற்கு மண்டல மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் தனித்தன்மைப் பெற்ற பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை. மேலும், புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள 25 பொருட்களில் கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி பனங்கற்கண்டு, தூத்துக்குடி மக்ரூன், சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட பல 14 பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது பெருமைக்குரிய ஒன்று.

நாட்டில் எளிமையாக தொழில் புரிவோர் பட்டியலில், தமிழ்நாடு 14-வது இடத்தில் இருந்து இப்போது 3-வது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. அந்த வகையில், மதுரையில் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் 600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்” என்று கூறினார்.

கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசு முதற்கட்ட அனுமதி

சென்னை மெரினாவில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. அதில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை மதிப்பீட்டு அறிக்கையானது, கடல்சார் ஆய்வுகள் உட்பட துறைமுகம் தொடர்பான கட்டமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர் சமூகத்தின் கருத்துகளை கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த பயணம் தமிழ்நாட்டில் 4 நாட்கள் நடந்த பின்னர் கடந்த 11-ந் தேதி கேரளா மாநிலம் சென்றது. அங்கு 14-ந் தேதி வரை நடை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நேற்று முன்தினம் கொல்லம் சென்றடைந்தார். நேற்று அங்கு ஒரு நாள் ஓய்வு எடுத்து கொண்டார். ஓய்வு நாளில் அவர் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து இன்று ராகுல் காந்தி மீண்டும் நடை பயணம் தொடங்கினார். கொல்லம் பாலாய தோட்டத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு அவரது பயணம் தொடங்கியது.

முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள்: மாணவர்களுக்கு கமல் அறிவுரை

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT), ‘NITTFEST’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்வில், மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசும்போது, ‘பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் சினிமாவின் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நான், ‘திரையரங்குகள் இருக்கும்; ஆனால் அது கோலோச்சாது. தொலைக்காட்சிகள் வரும். ஆனால், திரை (ஸ்கீரின்) கூட இல்லாமல் ஆகும்’ என்றேன். அது தற்போது நடக்கிறது. இன்னும் விரைவில் நானோ தொழில்நுட்பத்தில் சினிமா பார்க்கும் காலமும் வரும்.

ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நம் கடமையை நாம் செய்யவில்லையென்றால் ஜனநாயகம் என்று நாம் நம்பி கொண்டிருக்கும் பலம், திருடர்கள் கையில் தான் இருக்கும். தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம். அந்த முத்தம் கொடுத்தால் தான் ஜனநாயகத்துடன் குடும்பம் நடத்த முடியும். எனவே, பிடிக்குதோ.. பிடிக்கவில்லையோ.. முதல் முத்தத்தை தவறாமல் கொடுங்கள்” என்று கூறினார்.

ஆண் என்று கூறி பெண்ணை திருமணம் செய்த பெண்

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல் கணவர் சாலை விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடினார். அப்போது விராஜ் வர்தன் என்பவரை சந்தித்தார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர். ஆனால், விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்கவில்லை. அதன் பின்னரும் சாக்குப்போக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். அந்த பெண் வற்புறுத்தியபோது, ​​சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சந்தித்த ஒரு விபத்து காரணமாக தன்னால் உடலுறவு கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜனவரி 2020இல், அவர் தனது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாகக் கூறி கொல்கத்தா சென்று திரும்பியுள்ளார். அதன் பின்னர்தான், விராஜ் வர்தன் உண்மையில் ஒரு பெண் என்றும் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்காகவும் பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்வதற்காகவும்தான் அவர் கொல்கத்தா சென்றுள்ளார் என்பதை அந்த பெண் தெரிந்துகொண்டார். இதை தொடர்ந்து அந்த பெண் கோத்ரி போலீஸ் நிலையத்தில், விராஜ் வர்தன் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதாகவும் இதைப் பற்றி யாரிடமாவது பேசினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் புகார் அளித்தார். இதனடிப்படையில், விராஜ் வர்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...