No menu items!

ரசிகன் To வாரிசு – தடைகளைத் தாண்டும் விஜய்

ரசிகன் To வாரிசு – தடைகளைத் தாண்டும் விஜய்

விஜய் இன்று சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கிறார் என்றாலே படம் பல நூறு கோடிகள் வியாபாரம் ஆகும். உலகமெங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

ஆனால் விஜய் கடந்து வந்த பாதை அத்தனை எளிதானது அல்ல.

தன் திரை வாழ்க்கையைத் தொடங்கிய காலக் கட்டத்தில் இருந்தே கடுமையான சவால்களை சந்தித்திருக்கிறார்.

அவற்றை நேருக்கு நேர் எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

1984

1984ல் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவருக்கு பத்து வயது.

1992

1992ல் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானபோது அவருக்கு வயது 18. அதன் பின் தொடர்ச்சியாக நடிக்கத் துவங்கினார்.

அவர் ஹீரோ ஆனதும் அப்பா டைரக்டர் என்பதால் நடிக்க வந்துவிட்டார். இல்லாவிட்டால் இவருக்கெல்லாம் சினிமாவில் சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டனர்.

ஆனால் விஜய் அதை பொருட்படுத்தவில்லை. ரசிகன், தேவா, விஷ்ணு படங்களுக்குப் பிறகு தந்தை இயக்கிய படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு மற்ற இயக்குநர்களிடம் நடிக்கத் தொடங்கினார்.

1996

1996ல் வெளியான பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது. அந்தப் படத்தை இயக்கியது விக்கிரமன்.

அப்பா படம் மட்டுமல்ல, மற்றவர்கள் இயக்கத்திலும் தன்னால் வெற்றிகளைத் தர முடியும் என்று நிருபித்தார்.

எல்லா படத்திலும் ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். அதையும் விஜய் பொருட்படுத்தவில்லை.

1997

வித்தியாசமான கதையமைப்பு கொண்ட காதல் படங்களில் நடிக்கத் துவங்கினார். 97, 98 காலக்கட்டங்களில் வந்த காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமுடன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதன்பிறகும் அவரது பல காதல் படங்கள் வெற்றிகளை குவித்தன.

அடுத்து விஜய் மீது புதிதாய் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

விஜய்க்கு காதல் படங்கள்தாம் நடிக்கத் தெரியும், ஆக்‌ஷன் வராது. அவர் முழுமையான ஹீரோ இல்லை என்ற விமர்சனங்களை வைத்தார்கள்.

அந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லும் விதமாக திருமலை என்ற காதல் ப்ளஸ் ஆக்‌ஷன் கலந்த சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார்.

2004

அதனைத் தொடர்ந்து கில்லி அவரை தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்றது.

கில்லியைத் தொடர்ர்ந்து மதுர, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, வில்லு என தொடர் சூப்பர் ஹிட் படங்கள்.

ஆனால் அதற்கடுத்து வந்த வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் போன்ற படங்கள் விஜய்யின் வழக்காமன சூப்பர் ஹிட் படங்களாக அமையவில்லை.

உடனே, இனி விஜய் அவ்வளவுதான். அவரால் இனி சூப்பர் ஹிட் படங்கள் தர முடியாது என்ற கருத்துக்கள் எழுந்தன.

அந்தக் கருத்தக்களையெல்லாம் நொறுக்கின நண்பனும் துப்பாக்கியும். இரண்டும் சூப்பர் ஹிட்.

விமர்சனங்கள் மட்டுமில்லாமல் வேறு வகைகளிலும் விஜய் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருந்தது.

2003

2003ல் வெளியான புதிய கீதைக்கு ஆரம்பத்தில் கீதை என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. கீதை என்ற தலைப்பு பகவத் கீதையைக் குறிப்பிடுகிறது என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் படத்தின் பெயர் புதிய கீதை என்று பெயர் மாற்றப்பட்டது.

காவலன் படத்துக்கும் சிக்கல்கள் வந்தன. சுறா படத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அவற்றையும் சமாளித்தார் விஜய்.

 2012

சூப்பர் ஹிட் அடித்த துப்பாக்கி படத்துக்கும் பிரச்சினைகள் வந்தன. கள்ளத் துப்பாக்கி என்று எங்கள் படத்துக்கு பெயரிட்டிருக்கிறோம், அதனால் துப்பாக்கி என்று நீங்கள் பெயர் வைக்கக் கூடாது என்று புகார் தெரிவித்தார்கள். ஆனால் துப்பாக்கி என்ற டைட்டிலே தொடர்ந்தது.

அது மட்டுமில்லாமல் துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தவறாக காண்பிக்கிறார்கள் என்ற பிரச்சினை எழுந்தது. இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. அதன் பிறகு சில காட்சிகள் நீக்கப்பட்டன. சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

விஜய் தனது திரை வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரிய பிரச்சினை 2013ல் தலைவா திரைப்பட ரீலீஸ்தான்.

அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி. ஜெயலலிதா முதல்வர்.

தலைவா என்ற தலைப்புக்கே முணுமுணுப்புகள் கிளம்பின.

படம் ரீலீசுக்கு முன்பு சென்னை தியேட்டர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. தலைவா ரீலீசாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அந்தக் கடிதம் கூறியது.

2013

2013 ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் ரீலீசாக வேண்டும். ஆனால் படம் தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் ரீலீசானது. தமிழ்நாட்டு தியேட்டர்கள் தலைவா படத்தை வெளியிடவில்லை.

2011

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா முதல்வர் ஆனார். அதிமுக வெற்றி குறித்து சங்கீதா கல்யாண மண்டபத்தில் நடந்த கூடத்தில், தனது ரசிகர் மன்றத்தினரிடம் பேசிய விஜய், அதிமுக வெற்றிக்கும் நாம் அணிலாக உதவினோம் என்று குறிப்பிட்டார்.

ஆனால் அவர் ஆதரவு அளித்த அதிமுக ஆட்சியே தலைவா படத்துக்கு தடைகள் செய்வதாக அப்போது செய்திகள் வந்தன. தலைவா படத்தின் ரீலீசுக்காக விஜய்யும் அவரது தந்தையும் ஜெயலலிதாவை சந்திக்க கொட நாடு சென்றார்கள் எனவும் சந்திக்க முடியாமல் திரும்பினார்கள் என்றும் செய்திகள் உண்டு.

தலைவா திரைப்படம் ரீலீசாகதது குறித்து அன்றைய திமுக தலைவர் கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டார். தலைவா படத்தை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சிக்கல்களுக்கெல்லாம் பிறகு தலைவா திரைப்படம் சில நாட்கள் கழித்தே ரீலீசானது.

படத்தில் டைட்டிலில் இருந்த ‘டைம் டூ லீட்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டது. படம் ரீலீசாக உதவியதாற்கான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டார்.

2014

2014ல் வெளியான கத்தி திரைப்படத்துக்கும் சிக்கல் வந்தது. படத்தை தயாரித்திருந்த லைகா நிறுவனம் இலங்கையை சார்ந்தது, ராஜபக்சே பணத்தில் நடத்தப்படுவது அதனால் கத்தி படத்தை தமிழ்நாட்டில் ரீலீஸ் செய்யக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின. பிறகு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கத்தி படம் ரீலீசானது. கத்தி படத்துக்கு கதை காப்பி என்ற சிக்கலும் எழுந்தது. அதுவும் சமாளிக்கப்பட்டது.

2015

2015ல் ரீலிசான புலி படத்தின் போது அதன் தயாரிப்பாளர்கள் தொடர்புள்ள இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

2016

2016ல் தெறி படத்தில் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது அதனால் சில இடங்களில் தெறி படம் குறிப்பிட்ட தினத்தில் வெளியாகவில்லை.

2017

2017ல் மெர்சல் படத்துக்கும் சிக்கல்தான். அந்தப் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவை குறித்து விஜய் பேசிய வசனங்களுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஜோசப் விஜய் என்று விஜய்யின் மதத்தை குறிப்பிட்டுச் சொன்னார் எச்.ராஜா. அப்போது பாஜகவின் தமிழ்நாட்டு தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனும் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மெர்சல் படத்துக்கு மருத்துவ சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடைசி நிமிடத்தில்தான் சென்சார் சர்டிஃபிகேட் கிடைத்தது.

2018

2018ல் வெளியான சர்கார் திரைப்படம் கதை காப்பி பிரச்சினையில் மாட்டியது. அது ஒரு வழியாக சமாளிக்கப்பட்டது. இலவசங்கள் தொடர்பான காட்சிகளில் ஜெயலலிதா படத்தை காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினர்.

2021

2021ல் மாஸ்டர் படம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடந்தது. அவர் நெய்வேலியிலிருந்து அழைத்து வரப்பட்டார். கொரோனா குறைந்திருந்த சூழலில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அனுமதி கேட்டார் விஜய். சில தினங்களுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டது.

2022

2022ல் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் வெளியிட்டது. அதே நிறுவனம் கேஜிஎஃப்2 திரைப்படத்தையும் அதே நாளி வெளியிட்டது. அப்போது விஜய் படத்துக்கு தியேட்டர்களை குறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இப்படி ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின் போதும் விஜய் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இப்போது வாரிசு திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல்கள் இருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அவற்றை எதிர் கொள்ள விஜய் தயங்கியதில்லை. சிக்கல்களை சந்தித்த அவரது ஒவ்வொரு படமும் அவரது ரசிகர்களால் சூப்பர் ஹிட் ஆகின்றன.

வாரிசு திரைப்படமும் சூப்பர் ஹிட் வரிசையில் சேரும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...